நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 36: குறைந்த காலத்தில் அதிக லாபம் தரும் தங்க இ.டி.எஃப்.

நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 36: குறைந்த காலத்தில் அதிக லாபம் தரும் தங்க இ.டி.எஃப்.
Updated on
2 min read

முந்தைய அத்தியாயங்களில் தங்கத்தை நகை, நாணயம், காகிதம், பத்திரமாக சேமிப்பது குறித்து அலசினோம். அதன் அடுத்தக்கட்டமாக பங்குச்சந்தையில் பரஸ்பர நிதியின் மூலமாக தங்கத்தை சேமிப்பது குறித்து பார்ப்போம்.

பல பேர் சேர்ந்து ஒரு நிறுவனத்தில் போடும்பணத்தை, அந்த நிறுவனம் பங்குச்சந்தையில் நிறுவனங்களில் முதலீடு செய்வதை பரஸ்பர நிதி (Mutual Fund) என்கிறோம்.

தங்க இ.டி.எஃப். என்றால்? - அந்த நிறுவனமே பணத்தை நேரடியாக அன்றாடம் வர்த்தகம் செய்தால் அது இ.டி.எஃப். ஆங்கிலத்தில் Gold Exchange Traded Fund. தமிழில் சந்தையில் வர்த்தமாகும் தங்க நிதி எனலாம். தங்கத்தை வாங்கி வர்த்தகம் செய்வது தங்க இ.டி.எஃப். ஆகும்.

இதில் இணைவதற்கு டிமேட் கணக்கு, பான் அட்டை, வங்கி கணக்கு அவசியம். வாடிக்கையாளர் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயும் 99.5% தர‌மான தங்கத்தில் முதலீடு செய்யப்படும். வாடிக்கையாளரின் பணத்துக்கு ஏற்றவாறு தங்கம், கிராம் அல்லது யூனிட் ஆக வாங்கப்படும். சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தால் அந்த யூனிட் மதிப்பும் அதிகரிக்கும். அதற்கு ஏற்றாற்போல தங்கத்தை வாங்கவும், விற்கவும் செய்யலாம். இதனை நொடிக்கு நொடி கவனித்துக்கொள்ள நிதி மேலாளர்கள் இருக்கின்றனர்.

எப்படி இயங்குகிற‌து? - தங்க இ.டி.எஃப். பங்குச்சந்தைகள் காலை 9.15 மணிக்கு தொடங்கி மாலை 3.30 வரை மட்டுமே இயங்குகின்றன. இந்த நேரத்தில் வாடிக்கையாளர் எவ்வளவு வேண்டுமானாலும் தங்கம் வாங்கலாம். மாதந்திரம் 100 ரூபாயில் கூட தொடங்கலாம். எப்போது வேண்டுமானாலும் தங்கத்தை விற்று, பணமாக மாற்றிக்கொள்ளலாம். இதில் தங்கத்தின் எடை மற்றும் தரம் குறித்து கவலைப்பட தேவையில்லை. அவை நூறு சதவீதம் நம்பகத்தன்மை கொண்டது.

உலக மற்றும் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துக்கு ஏற்ப இதன் மதிப்பு ஏறவோ, இறங்கவோ செய்யும். இதில் பங்குச்சந்தை முதலீட்டை போலவோ, பரஸ்பர நிதி முதலீட்டை போலவோ நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை. குறைந்த கால முதலீட்டிலே அதிக லாபம் கிடைத்திருக்கிறது. அதிகபட்சமாக குறைந்த காலத்தில் 20 சதவீதம்வரை லாபம் தந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இ.டி.எஃப் தங்கம் அதிக லாபம் கொடுத்திருப்பதை வருடாந்திர புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

வரி இல்லை: நகை கடையில் வாங்கும் தங்கத்துக்கு செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி வரி ஆகியவை விதிக்கப்படுகிறது. இதனால் ஒரு பவுன் தங்கத்தின் விலையில் சுமார் 20 முதல் 30 சதவீத பணம் அதற்கு செலவிட நேரிடுகிறது. அது வாடிக்கையாளருக்கு நஷ்டமாகும். ஆனால், இ.டி.எஃப் முதலீட்டில் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி வரி ஆகியவை இல்லை. டிமேட் கணக்கிற்கு மட்டும் 1 சதவீதத்திற்கும் குறைந்த அளவில் வாடகை வசூலிக்கப்படுகிறது.

ஆபரண தங்கமாக ரூ.30 லட்சத்திற்கும் அதிகமாக வைத்திருந்தால் சொத்து வரி செலுத்த வேண்டும். ஆனால், இ.டி.எஃப் தங்கமாக வைத்திருந்தால் எவ்வித வரியும் செலுத்த வேண்டியதில்லை. அதேபோல ஆபரணமாக வைத்திருந்தால் திருடு போகும் அபாயம் இருக்கிறது. வங்கி லாக்கரில் வைத்திருந்தால் அதற்கு ஆண்டு கட்டணம் பல ஆயிரங்களில் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், இ.டி.எஃப் தங்கத்துக்கு அத்தகைய அபாயங்களும், கட்டணங்களும் இல்லை.

இதனால் முதலீட்டு நோக்கில் தங்கத்தை வாங்குபவர்களை இ.டி.எஃப். திட்டம் வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தை ஆபரணமாக, நாணயமாக வாங்குவது கணிசமாக‌ குறைந்துள்ளது. அதேவேளையில் இ.டி.எஃப் தங்கமாக‌ வாங்குவது அதிகரித்துள்ளது.

அதேபோல தங்கத்தின் இறக்குமதியை அரசு ஊக்குவிப்பது குறைந்துவருகிறது. இதனால் எதிர்க்காலத்தில் தங்க இ.டி.எஃப். மேலும் பிரபலமாக வாய்ப்பு உள்ளது.

(தொடரும்)

- கட்டுரையாளர்; தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in