

அப்பாவின் மேசையில் நா.பார்த்தசாரதி எழுதிய ‘குறிஞ்சி மலர்’ நாவலின் பக்கங்கள் படபடத்துக் கொண்டிருந்தன.
குழலி: ஏன்பா, குறிஞ்சி மலர் இப்பவும் இருக்கா... இல்ல நாவலுக்காக இப்படிப் பேர் வச்சிருக்காங்களா?
சுடரும் வந்துவிட்டான்.
அப்பா: குறிஞ்சி மலர் இருக்கே... இப்பவும் செய்தித்தாள்கள்ல பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூத்ததுன்னு செய்திகள் வருதே. நீ பார்த்ததில்லையா.
குழலி: ஆமாப்பா, அந்தக் குறிஞ்சி மலர் நம்ம பக்கமெல்லாம் இருக்காதா...
அப்பா: மலைப் பகுதிகள்ல வளரக் கூடிய ஒரு வகை புதர்ச் செடியில பூக்கறதுதான் குறிஞ்சி மலர். 200 வகையான குறிஞ்சி இனங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆசிய நாடுகள்லதான் குறிஞ்சி மலர்கள் இருக்கு. நீல நிறத்துல பூக்கக் கூடிய அந்தக் குறிஞ்சி மலர்கள் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்னு ஒரு நம்பிக்கை.
ஆனா குறிஞ்சியில பல வகை இருக்கிறதால, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறைன்னு வேறு வேறு காலங்கள்ல பூக்கக் கூடிய குறிஞ்சி மலர்களும் இருக்கு.
குழலி: பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்குறதாலதான், எப்பவாவது நடக்கிற விஷயங்களச் சொல்றதுக்கு குறிஞ்சி பூத்தாப்புல இருக்குன்னு சொல்றாங்களா...
அப்பா: ஆமா குழலி. இந்தக் குறிஞ்சி மலர் நாவலுக்குக்கூட, அப்படி ஒரு பொருள்லதான் நா.பார்த்தசாரதி பேர் வச்சிருக்காரு. எப்போதாவது பூக்கின்ற குறிஞ்சி மலரப் போல, அற்புதமான பண்புகள் கொண்ட மனுசங்க அரிதாகத்தான் பிறக்கிறாங்க. இந்தக் கதையின் நாயகி பூரணியைப் போல.
சுடர்: தமிழ் இலக்கியங்கள் நிறைய அழகான உவமைகள் இருக்குல்ல. ஒரு பூவை எவ்வளவு அழகா உவமையாக்கியிருக்காங்க. குறிஞ்சி மலருக்கும் குறிஞ்சித் திணைக்கும் தொடர்பிருக்கா குழலி. மலையும் மலை சார்ந்ததும்னு சொல்ற குறிஞ்சி நிலத்திலதான் பூக்குமோ இந்தக் குறிஞ்சிப் பூ...
அப்பாவின் அலைபேசி ஒலிக்க, சரி நீங்க பேசிக்கிட்டிருங்க. நான் இதோ வந்திடுறேன் என்றவாறு கிளம்பினார்.
குழலி: சுடர், நேத்து முதல், கரு, உரிப் பொருள்கள் பற்றிப் பேசிக்கிட்டிருந்தோமே நினைவிருக்கா..
சுடர்: நிலமும் பொழுதும் முதல் பொருள்னு சொன்ன. பொழுதைக் கூட பெரும்பொழுது, சிறுபொழுதுன்னு சொன்ன.
குழலி: சிறுபொழுதை எப்படிப் பிரிச்சாங்கன்னு தெரியுமா...
சுடர்: எனக்குத் தெரிஞ்சதெல்லாம், காலை, மதியம், மாலை, இரவு.. அவ்வளவுதான்.
குழலி: சரிதான். சிறுபொழுதை ஒரு நாளின் உட்பிரிவுன்னு சொல்வாங்க. மாலை, யாமம், எற்பாடு, நண்பகல், வைகறை, விடியல்ன்னு ஆறாப் பிரிப்பாங்க.
சுடர்: பெரும்பொழுதை இப்ப நாம எப்படிச் சொல்றோம்...
குழலி: பெரும் பொழுதை ஓர் ஆண்டின் உட்பகுப்பாகப் பிரிச்சிச் சொல்லியிருக்காங்க. இப்ப நாம பயன்படுத்திக்கிட்டிருக்க தமிழ் மாதங்கள் அடிப்படையில பார்த்தா ஆவணி, புரட்டாசி மாதங்களக் கார் காலம்; மார்கழி, தை மாதங்களக் கூதிர்க்காலம்; ஐப்பசி, கார்த்திகை மாதங்களை முன்பனிக் காலம்; மாசி, பங்குனி மாதங்களப் பின்பனிக் காலம்; சித்திரை, வைகாசி மாதங்கள இளவேனிற் காலம்; ஆனி, ஆடி மாதங்கள முதுவேனிற் காலம்னு ஆறாப் பிரிச்சிருக்காங்க.
சுடர்: ஆமா குழலி, கருப்பொருள்னு சொன்னியே.. அது எதைப் பற்றியது.
குழலி: சரி, கருன்னா என்ன... உனக்குத் தெரிஞ்ச பொருளைச் சொல்லு.
சுடர்: எனக்குத் தெரிஞ்சு கதைக் கரு, தாய் வயிற்றுல வளர்ற கரு.. வேற எதுவும் நினைவுக்கு வரலையே..
குழலி: கதைக் கருன்னு சொன்னியே.. அப்படின்னா...
சுடர்: கதையோட மையக் கருத்துன்னு சொல்லலாம். அப்ப கருப்பொருள்னு சொல்றது அந்த நிலத்து மக்களோட வாழ்க்கையின் மையப் பொருள்னு வச்சிக்கலாமா...
குழலி: ஆமா சுடர். தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், பறவை, விலங்கு, ஊர், நீர், பூ,மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில்னு பதினான்கு வகையாகக் கருப்பொருள்களச் சொல்வாங்க.
சுடர்: இந்தப் பதினான்கும்தானா...
குழலி: சரி சுடர், நாளை எனக்குத் தேர்வு இருக்கு. படிக்கலாமா... பிறகு பேசுவோம் இதைப் பத்தி.
- கட்டுரையாளர்: தமிழ்த் துறை பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com