

எனது நண்பர் சைனிக் ஸ்கூல் என்று ஒன்று இருப்பதாகவும் அதில் படித்தால் மிலிட்டரி வேலைக்கு நேரிடையாக செல்லலாம்என்கிறார். அவர் சொன்னது சரி வர புரியவில்லை. எனவே இவ்விவரத்தை தெளிவாக கூறுங்கள்- தி.கே. இராஜசேகர், பேராவூரணி.
1950-களின் பிற்பாதியில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த கிருஷ்ணமேனனால் நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் தொடங்கப்பட்டன. தமிழகத்தைபொறுத்தவரை உடுமலைப்பேட்டையில் அமராவதியில் இப்பள்ளி 1962-ல் தொடங்கப்பட்டது. ராணுவத்தின் கட்டுக்கோப்பான திறமைமிக்க அலுவலர்களை பள்ளிப் பருவத்திலிருந்தே உருவாக்குவதுதான் இவ்வகை பள்ளியின் அடிப்படை நோக்கம்.
இந்த வகைப் பள்ளிகள் சிபிஎஸ்இ பாட திட்டத்தில் செயல்படுகின்றன. முழுக்க முழுக்க உண்டு உறைவிடப் பள்ளியாகும். இப்பள்ளிகளை இராணுவ அமைச்சகத்தின் சைனிக்போர்டு நிர்வகிக்கிறது. இராணுவ பயிற்சி நிறுவனங்களான என்.டி.ஏ. மற்றும் நேவல் அகாடமி ஏழிமலை (கேரளா) போன்ற உயர் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் வகையில் இங்கு பயிற்றுவிக்கப்படுகிறது.
இதற்கென AISSEE (All India Sainic School Entrance Exam) நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு கொள் குறிவகை (MCQ) தேர்வாகும். தமிழ், ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடைபெறும்.
சேர்க்கையானது 6 ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்புகளுக்கு நடைபெறும்.
6-ம் வகுப்புக்கு 150 நிமிடத் தேர்வும், 9-ம் வகுப்புக்கு 180 நமிடத் தேர்வும் நடைபெறும். இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இப்பள்ளியின் சேர்க்கைக்கான வயது வரம்பானது.
VI-ம் வகுப்புக்கு 10 - 12 வயது வரை
IX-ம் வகுப்புக்கு 13 - 15 வயது வரை
IX-ம் வகுப்புக்கு பெண்களின் சேர்க்கை கிடையாது.
பள்ளி அமைந்திருக்கும் மாநிலத்திற்கு 67% இட ஒதுக்கீடு உள்ளது. 33% இடங்கள் பிற மாநிலத்தவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
VI-ம் வகுப்பு - 13 மொழிகளில் நடத்தப்பெறும்.
IX-ம் வகுப்பு - ஆங்கிலம் மட்டும்.
மொழித்தேர்வு
கணிதம்
VI-ம் வகுப்பு : 50 மதிப்பெண்கள்
IX ம் வகுப்பு: 150 மதிப்பெண்கள்
இன்டெலிஜென்ஸ் 50 மதிப்பெண்கள்
பொது அறிவு
VI-ம் வகுப்பு : 50 மதிப்பெண்கள்
IX-ம் வகுப்பு: 300 மதிப்பெண்கள்
உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.
- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இயக்குநர்.