

சிறு நகரங்களில் பிறந்தவர்களுக்கு எப்போதுமே பெரு நகரங்கள் மீது வியப்பு இருக்கும். இந்தியாவின் கோலிவுட் நகரமான மும்பை மீது எனக்கும் ஒரு வியப்பு இருந்தது. உழைக்கும் மக்கள், கனவுகளைத் தேடி அலையும் இளைஞர்கள் என மும்பை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். அப்படியான ஒரு பரபரப்பான மழை நாளில் கோவாவிலிருந்து மும்பை சென்றடைந்தோம்.
மும்பையின் முக்கிய பகுதியான கொலாபாவில் அறை எடுத்துத் தங்கினோம். நாங்கள் தங்கி இருந்ததிலேயே மிகச் சிறிய அறை இதுதான். ஆனால், நாள் வாடகை மற்ற இடங்களைவிடவும் அதிகம். மும்பை நகரத்தில் ஜன்னல் வழியே மழையை ரசிக்க ஆனந்தமாக இருந்தது.
அதுவே மும்பை வீதிகளில் பயணம் செய்ய தொடங்கினால் மோசமான அனுபவத்தைத் தந்தது. மழை காலத்தில் மும்பையின் போக்குவரத்து நெரிசல் சொல்லவே முடியாத அளவுக்கு மோசமாக இருந்தது. சுமார் ஒரு கிலோமீட்டர் பயணிக்க ஒரு மணி நேரத்துக்கும் மேல் நேரமானது.
ஆர்ப்பரித்த கடல் எதிரே அமைதி... மழை... போக்குவரத்து நெரிசல் எனஒரு வழியாக Gateway of India இருக்கும்இடத்துக்கு வந்து சேர்ந்தோம். பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம், இப்போதும் பிரம்மாண்டமாக இந்திய வரலாற்றை சுமந்து நிற்கிறது. மும்பைக்கு கடல் மார்க்கமாக வரும் பயணிகள் இந்த இடத்துக்குதான் படகில் வந்து சேர்வார்களாம்.
அதனால் தான்இந்த கட்டிடத்துக்கு இந்தியாவின் நுழைவு வாயில் என்று பெயர் வந்திருக்கிறது. இந்த கட்டிடம் மட்டுமல்ல, மும்பை நகரத்தின் பழமையையும் வரலாற்றையும் ஏராளமான கட்டிடங்களைச் சுமந்து நிற்கின்றன.
ஆர்ப்பரிக்கும் கடலுக்கு எதிரே அழகாய் அமைதியாய் இருந்தது தாஜ் ஹோட்டல். இதுநாள்வரை திரைப்படங்களில் பார்த்து ரசித்த நமக்கு முதன்முறையாக, அந்த ஹோட்டலை பார்க்கும் போது இப்போது இருக்கும் அமைதியும் அழகும் தெரியாமல் 2008-ல் நடந்த தாக்குதல்தான் நினைவுக்கு வந்து சென்றது. கொஞ்ச நேரம் அங்கிருந்த புறாக்களுடன் விளையாடிவிட்டு 'மெரைன் டிரைவ்' பகுதிக்கு கிளம்பினோம்.
மழை இல்லாத ஒரு மாலை வேளையாக இருந்திருந்தால், மும்பையின் 'மெரைன் டிரைவ்' பகுதி பொழுதுபோக்குக்காக மிகச்சசிறந்த இடமாக இருந்திருக்கும் என்றார்கள் மும்பை வாசிகள். ஆனால், அந்த மாலையிலும் குடும்பங்களும் நண்பர்களும் கூட்டம் கூட்டமாய் கடலை ரசித்தபடி பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
மழை பிடிக்கும் தான் ஆனாலும், பயணம் ஆரம்பித்ததிலிருந்து மழை விடாமல் துரத்திக் கொண்டே வருகிறது. அது பயணத்தில் கொஞ்சம் அயர்ச்சியை ஏற்படுத்தியது. என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தோம்.
எதிர்பாராததை எதிர்பார்த்தல்: அடுத்து நாம் போக வேண்டிய நகரம் சூரத். ஆனால், அந்த நேரம் பார்த்து சூரத்தில் கனமழை பெய்து, அந்த நகரமே வெள்ளத்தில் சிக்கியது. அங்கிருந்த சில நண்பர்களும் சூரத் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார்கள்.
சூரத் செல்லாமல்போனால், குஜராத் மாநிலத்தையே தவிர்க்க வேண்டிவரும். ரொம்ப யோசித்து யோசித்து, கடலைவிட்டு கொஞ்சம் தள்ளிப் போகலாம் என திட்டமிட்டோம். இந்த பயணம் கற்றுத் தருவதெல்லாம் ஒன்றே ஒன்று தான்... எதிர்பாராததை எதிர்பார்க்க வேண்டும். அப்படி நாம் எதிர்பாராமல் அடுத்து சென்ற இடம்தான் ஷீரடி.
மும்பையிலிருந்து ஷீரடி நோக்கி கிளம்பினோம். ஷீரடியில் பெரிய அளவில் மழை இல்லை. பைக் பயணத்தில் அதிக துணிகளை எடுத்து செல்ல முடியாது. இருக்கும் துணிகளைத் துவைத்துதான் பயன்படுத்த வேண்டும். அதனால் மூன்று நாட்கள் ஷீரடியில் தங்கி துணிகளைத் துவைத்துக் காய வைத்தோம்.
மழை மீண்டும் துரத்திக் கொண்டு வரத் தொடங்கியது. அகமதாபாத் செல்ல வேண்டும். ஆனால், மழையால் அந்த நகரமும் வெள்ளத்தில் சிக்கி இருந்தது. மீண்டும் திட்டமிடல் தொடங்கியது. இந்த முறை நாங்களே எதிர்பார்க்காத ஒரு இடத்துக்குப் புறப்படத் தயாரானோம்.
- கட்டுரையாளர்: இதழியலாளர், கீழடி, கண்ணகி கோட்டம் உள்ளிட்ட தமிழ் பண்பாட்டு நிலப்பரப்புகளை ஆவணப்படம் பிடித்தவர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com