

சூழல் மண்டலத்தை ஓர் இயந்திரமாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஓர் இயந்திரம் பல்வேறு உதிரி பாகங்களால் உருவாக்கப்பட்டிருக்கும்.
அதுபோல சூழல் மண்டலமும் உயிருள்ள, உயிரற்ற உதிரி பாகங்கள் இணைந்து கட்டமைக்கப்பட்டுள்ளது. உயிரற்ற பாகங்கள் என்பது காற்று, நீர், நிலம், வெப்பம் உள்ளிட்டவை. உயிருள்ள பாகங்கள் தாவரங்கள், நுண்ணுயிர்கள், விலங்குகள் ஆகியவை. இந்தப் பாகங்கள் ஒன்றோடு ஒன்று ஒருங்கமைந்த முறையில் பிண்ணப்பட்டு இயங்குகிறது.
சரி, சூழல் மண்டலத்தை இயந்திரமாக கற்பனை செய்துகொண்டால் அந்த இயந்திரம் இயங்குவதற்கான ஆற்றல் எங்கிருந்து கிடைக்கிறது? நம்முடைய நட்சத்திரமான சூரியன் மூலம்தான். சூழல்மண்டலம் என்கிற இயந்திரம் ஒரு வலையால் பிண்ணப்பட்டிருக்கிறது. இந்த வலையின் மூலம் அதன் பாகங்களுக்கு ஆற்றல் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இவற்றைத்தான் நாம் உணவு வலை (Food Web) என்கிறோம்.
உணவு வலையின் அரசி: உணவு வலையின் அரசி என்றால்தாவரங்கள்தான். தாவரங்கள் சூரிய ஆற்றலையும், வளிமண்டலத்தில் காணக்கூடிய பிற சத்துக்களையும் இணைத்துஉணவாக மாற்றுகின்றன. அதனால் அவற்றை முதன்மை உற்பத்தியாளர் (Primary Producers) என்கிறோம். தாவரங்களில் சேகரிக்கப்பட்டுள்ள ஆற்றலை ஆடுகள்,மாடுகள், மான்கள் உள்ளிட்ட தாவர உண்ணிகள் நுகர்கின்றன.அவற்றை முதன்மை நுகர்வோர் (Primary Consumers) என்கிறோம்.
தாவர உண்ணிகளை வேட்டையாடுவதன் மூலம் அந்த ஆற்றலை மாமிச உண்ணிகள் பெறுகின்றன. இந்த மாமிச உண்ணிகள் இறந்தவுடன் சிதைப்பிகள் என அழைக்கப்படும் பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்கள் அவற்றை உண்டு அந்த ஆற்றலை ஊட்டச்சத்துக்களாக மாற்றி மண்ணுக்கு மீண்டும் வழங்குகின்றன. இப்படியாக ஆற்றல் சுழற்சி முறையில் பல்வேறு பாகங்களுக்குக் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
மேலே சொல்லப்பட்ட ஆற்றல் பரிமாற்றம் எளிமையாகத் தோன்றினாலும் ஒவ்வொரு சூழல்மண்டலத்துக்கும் ஏற்றவாறுஅதன் அமைப்பில் மாற்றங்கள் இருக்கும்.நாம் பாலைவனத்தை எடுத்துக்கொண்டால் அங்கு கள்ளிச்செடிகள்தான் முதன்மை உற்பத்தியாளர்களாக உள்ளன. கடலில் பவளப்பாறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சில சூழல் அமைப்பில் பல்வேறு உயிரினங்கள் வலைபின்னலில் இணைந்திருக்கும். சிலவற்றில் குறைந்த அளவிலான உயிரினங்களுக்குள் ஆற்றல் கடத்தப்படும்.
இவ்வாறு ஆற்றல் பரிமாற்ற அமைப்பில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அதுபோல இந்த ஆற்றல் பரிமாற்றம்ஒரே ஒரு சூழல் மண்டலத்துக்குள் மட்டும் நிகழ்ந்து முடிவதில்லை. இந்தச் செயல்முறையில் பல்வேறு சூழல் மண்டலங்களுக்குள் கொடுத்தல் வாங்கல் நடைபெறுகிறது. இந்த ஆற்றல் பரிமாற்றம்தான் பூமியை உயிர்ப்புடன் வைக்கிறது.
- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com