

வடிவியலில் மிக முக்கிய அங்கம் கோணங்களுக்கு உண்டு. எல்லா வடிவத்திலும் கோணங்கள் கண்டிப்பாக இருக்கும். கோணம் மாறினால் வடிவமேகூட மாறும். முக்கோணத்தில் மூன்று கோணங்கள் இருந்தாலும் அந்த மூன்று கோணங்களின் அளவு மாறினால் முக்கோண வடிவமே மாறிவிடும். இந்த கோணங்கள் எங்கே ஆரம்பித்து இருக்கும்?
கோணம் என்பது இரண்டு கதிர்கள் இணையும் அல்லது வெட்டிக்கொள்ளும்போது உருவாகும் என வாசித்திருப்போம். ஒரு கோணம் இருக்கிறது எனில் ஒரு முனை (Vertex) இருக்கும், நிச்சயம் இரண்டு கதிர்களும் (Rays) இருக்கும். ஆங்கிலத்தில் angle எனக் குறிப்பிடப்படும் கோணம் angulus என்ற லத்தின் வார்த்தையிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் மூலை (corner). ஆனால் கோணங்களை முதன்முதலில் எங்கே எப்படிக் கையாண்டு இருப்பார்கள்?
பாபிலோனியர்களே முதன்முதலில் கோணங்கள் பற்றி அறிந்து வைத்திருந்தனர் என சான்றுகள் கிடைத்துள்ளன. கல்வெட்டு ஒன்றில் அறுங்கோணத்திற்கும் Hexgon அதன் சுற்றப்பட்டவட்டத்திற்குமான விகிதத்தை குறிப்பிட்டுள்ளனர். ஓர் அறுகோணத்தின் சுற்றளவு அதன் சுற்றப்பட்ட வட்டத்தின் சுற்றளவைவிட ஆறுமடங்கு அதிகமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர். ஒரு படி மேலே சென்று அப்போதே 'π'க்கான மதிப்பினை 25/8 = 3.125 என் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு பக்கம் எகிப்தியர்கள் கிமு 1500-ல்கோணங்களைக் கணக்கிடத் தொடங்கியுள்ளனர். முதன்முதலாக கணக்கிட்டது சூரியனின் கதிர்களின் கோணத்தையே. அதை வைத்தே என்ன மணி எனக் கணக்கிட்டுள்ளனர்.
இன்னும் இது சாட்சியாக ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் எகிப்திய அருங்காட்சியகத்தில் இது இடம் பெற்றுள்ளது. தோராயமாக எப்போது சூரியன் மறையும் என்பதை இந்த நிழலின் உயரத்தை வைத்தும் கோணத்தை வைத்தும் கணக்கிட்டிருக்க வேண்டும். எகிப்திய க்ரோமா Groma என்ற கருவியே முதன்முதலாகக் கோணங்களை அளப்பதற்கு உருவாக்கப்பட்ட கருவியாக இருக்க வேண்டும்.
எகிப்திய பிரமிடுகளை இதன் துணைகொண்டே துல்லியமாக கட்டியமைத்திருக்க வேண்டும். எகிப்திய பிரமிட்களை பற்றி நீங்கள் முன்னரே கேள்விப்பட்டு இருக்கலாம், அது மனித முயற்சியா அல்லது வேற்று கிரகவாசிகளின் முயற்சியா என்று இன்னும் சர்ச்சை பேச்சு உள்ளது. கொஞ்சம் கோணம் தப்பினாலும் இந்த கட்டமைப்பு சிதைந்துவிடும்.
தேவைகளே ஆராய்ச்சிகளுக்கு வித்திடும் என்பார்கள். கடலில் பயணிக்க மனிதனுக்கு ஆசை. ஆனால் இருக்கும் ஒரே வழிகாட்டி வானில் இருக்கும் நட்சத்திரங்கள் மட்டுமே. கடலில் பயணிக்கக் கோணங்கள் பற்றிய ஆராய்ச்சிகளும் கருவிகளும் பல்வேறு பகுதிகளிலும் உருவாகி இருக்க வேண்டும். கி.பி. 1650 வரையிலுமே கடலில் செல்லும் கப்பல்களில் ஆஸ்டிரோலேப் (Astrolabe) என்னும் வானியல் கருவியே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
முதுகுத்தண்டு: பலப்பல மாற்றங்கள், பல சிரமங்கள், நிறைய கருவிகள் என்று கோணங்களை அளக்கவும் பயன்படுத்தவும் வளர்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆமாம் கோணங்களை நாம் தினசரிகள் பயன்படுத்துகிறோமா? சரியான கோண பயன்பாடு இல்லை எனில் நாம் ஒழுங்காக நாற்காலியில் அமரக்கூட முடியாது. உங்கள் இருக்கையில் அமர்கின்றீர்கள் அல்லவா, அதில் முதுகு சாயும் பகுதியும் இருக்கை பகுதியும் குறுங்கோணமாக இருந்தால் லகுவாக அமர முடியுமா? செங்கோணமாக இருக்கும் நாற்காலிகளில் அமர்வதைவிட விரிகோணத்தில் இருந்தால் அமர வசதியாக இருக்குமா? அதே போல இருக்கையின் நீளமும் முக்கியம்.
பேருந்துகளிலும் 90 டிகிரிக்கே இருக்கை கள் இருக்கும் கவனித்துள்ளீர்களா? சாய்வு நாற்காலிகள் விரிகோணத்தில் இருக்கும்,சில சாய்வு நாற்காலிகள் வளைவாகவும் இருக்கும். அதெல்லாம் சரி நம் முதுகுத்தண்டு நேராக இருக்கின்றதா? வளைந்து இருக்கின்றதா?