

விலங்குகளும் பாலினமும் புத்தகத்தின் ஆசிரியர் நாராயணி சுப்ரமணியன் கடல்சார் உயிரினங்கள் பற்றிய தகவல்களை அடுத்தது என்ன,என்ன என்று யோசிக்கும்வகையில் ஆர்வமூட்டி வழங்குகிறார். புத்தகத்திலுள்ள கட்டுரையின் தலைப்புகளே நம்மை அடுத்தடுத்த கட்டுரைகளை படிக்க அழைத்துச் செல்லும்.
பரிணாமத்தில் விலங்குகளிடமிருந்தே மனிதர்களின் குணங்களும் பரிணமித் துள்ளன என்கின்றனர். கடல்வாழ் உயிரினங்களான மீன்கள், சுறா மீன்கள், பென்குவின்கள், குரங்குகள் போன்றவை கொண்டிருக்கும் மரபார்ந்த பண்புகளை, மனிதர்களாகிய நாம் எங்கே, எப்போதுதொலைத்திருப்போம் என்று சிந்திக்கவைக்கின்றன புத்தகத்தின் கட்டுரைகள்.
சில விலங்குகளின் மரபார்ந்த பண்புகளைப் படிக்கும்போது, மனிதர்களாகிய நமக்கும் தேவையான நேரத்தில் பாலினத்தை, வடிவத்தை மாற்றிக் கொள்ளும் விலங்குகள் போல வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்குமே எனத் தோன்றுகிறது.
பால் மாறும் கோமாளி மீன்கள்: தலைமை பெண் மீனின் முட்டைகள் எல்லாம் குஞ்சுகளாக வெளிவரும்போது ஆண்களாகவே இருக்குமாம். ஆனாலும்ஆண் மீனின் உடலில், வளராத ஒருசினைமுட்டைப்பையும் காணப்படும்.
தலைமைப் பெண் மீன் வேட்டையாடப்பட்டால், சில நாட்களில் தலைமை ஆண்மீனின் உடலில் மாற்றம் ஏற்பட்டு, ஹார்மோன்கள் வேலை செய்யத் தொடங்கி, பிறக்கும்போதே உள்ள இரு இனப்பெருக்க உறுப்புகளில் விந்தகம் தானாகவே கரைந்து, சினைமுட்டைப்பை வேகமாக வளர்ந்து, விரைவில் தலைமைப் பெண் மீனாக மாறிவிடும்.
வீட்டை விட்டுச் சென்ற மீன் குழந்தைகள் , திரும்பிவரும்போது பெண்ணாக மாறியிருக்கும் அப்பாவைப் பார்த்து உருவத்தில் அம்மா, குணத்தில் அப்பா என்று குழம்பிப் போகும் இல்லையா? ஆனாலும் இந்த மீன்களை கோமாளி மீன்கள் என்று சொல்வதில் எனக்கு விருப்பமில்லை.
ஆர்கா பாட்டிகள்: மனித இனத்தில் மட்டுமல்ல மீன் இனத்திலும் குழந்தை வளர்ப்பில் பாட்டிகளின் பங்கு அதிகமாக உள்ளது. குறிப்பிட்ட வாழ்வியல் அம்சத்தை தலைமுறை தலைமுறையாகக் கடத்தும் வேலையை விலங்குகளும் செய்கின்றன. ஆர்கா என்பது பெருங்கடல் ஓங்கில் குடும்பத்தைச் சேர்ந்த மிகப்பெரிய கடல் பாலூட்டி. இந்த விலங்கினத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு வட்டார வழக்கு மொழி உண்டு என்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனராம்.
ஆர்காக்களை பொறுத்தவரை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு தனிமொழி உண்டு. தங்களுக்குள் தகவல் பரிமாறிக்கொள்ளும்போது இவை அந்த மொழியைஇசைப்பாடலாக்கி பயன்படுத்துகின்றனவாம். ஆர்கா குட்டி ஒன்று கூட்டத்திலிருந்து தொலைந்துபோய் குடும்பப்பாடல் மூலம் மீண்டும் தன் குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதாக கற்பனை செய்தால் நன்றாகத்தான் இருக்கிறது.
சிங்கக் குடும்பத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட தலைமைச் சிங்கம் ஐந்நு ஆண்டுகள் வரை கடமையைச் செய்யுமாம். அரசமைப்பு அதிகாரத்தை சிங்கங்கள், எப்படி படித்திருக்கும்? சிங்கக் குடும்பம், தனியாகத் திரியும் நாடோடி, பேச்சிலர் சிங்கங்களின் குழு என சிங்கத்தின் சமூக அமைப்பில் மூன்று வகைமைகள் உள்ளனவாம்.
ஆண் சிங்கம் எந்த அமைப்பில் உள்ளதோ அதைப்பொறுத்து வேட்டையாடும் திறன் மாறுபடுமாம். ஆக இனி ஆண் சிங்கம் எல்லாம் சோம்பேறிகள், உட்கார்ந்து தின்பவை என சொல்லக்கூடாது சரியா?
நம் எல்லோருக்கும் பிடித்த பென்குவின் பறவைதான் குழந்தை வளர்ப்பில் சமபங்கு வகிக்கிறதாம். அதேபோல பிரேசில்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட பொன்னிற டமாரின் என்ற ஒருவகைக் குரங்கினம் உள்ளதாம்.
இந்த விலங்கினத்தில் குட்டிகள் பிறந்துவளரும்போது இரண்டு அல்லது மூன்று மணிநேரத்துக்கு ஒருமுறை பாலூட்ட வேண்டியிருக்குமாம். பிரசவித்த தாய்க்கு அயர்ச்சி ஏற்படக்கூடாது என்று குட்டிக்கு பசிஎடுக்கும்போதெல்லாம் குட்டியைத் தூக்கிக்கொண்டு குரங்கு அம்மாவிடம் வந்து பாலூட்டத் தருவதும், பிறகு தூக்கிச் சென்று விளையாட்டு காட்டி வளர்ப்பதும், திட உணவு உண்ண ஆரம்பித்த குரங்குக் குட்டிகளுக்கு பழங்களை மசித்து தருவதுமாக உள்ள குரங்கு அப்பாக்களின் செயல்களை அறியும்போது ஆச்சரியமாக உள்ளது.
விலங்குகளின் உலகைத் துல்லியமாகப் புரிந்துகொள்வதன் மூலமே எது இயற்கை, எது நாமாகவே வைத்துக்கொண்ட விதி என்பதைப் பிரித்துப்பார்க்க முடியும். அப்படிப் பிரித்துவிட்டால் நாமாகக் கட்டமைத்த விதிகளைக் காலத்துக்கேற்ற சமூகநோக்குடன் அவ்வப்போது மறுசீராய்வு செய்து அனைவருக்குமான ஓர் எதிர்காலத்தை நோக்கி நாம் பயணிக்கமுடியும். அதுவே ஆறறிவு பெற்ற மனித இனத்தின் முன்னேற்றத்துக்கான முதல்படி.