

இன்று, குழந்தைகளின் விளையாட்டுடன் கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுப்போம். வகுப்பில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மாணவர்களை ஐந்து அல்லது ஆறு குழுக்களாகப் பிரிக்கவும். குழுவின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு குறிப்புகள் எழுதிய துண்டுச் சீட்டுகளை டப்பாவில் போடவும். குழுத்தலைவன் ஒரு துண்டுச் சீட்டை எடுக்க வேண்டும். அந்த சீட்டில் உள்ள குறிப்புகளைக் கொண்டு துப்பு துலக்க வேண்டும்.
அந்த துப்பு, இன்னொரு துப்பைத் தேடிச் செல்லவும் செய்யலாம். யார் முதலில் துப்பு துலக்கி சரியான விடையை கூறுகிறார்களோ அந்தக் குழுவே வெற்றி பெற்ற குழு ஆகும். ஒரு டப்பாவில் கீழ்க்கண்டவாறு குறிப்புகள் எழுதிய துண்டுச் சீட்டுகள் இருக்கலாம்.
மாணவர்களின் இருக்கைக்கு அடியில் தேடவும். அ என்ற எழுத்தைமுதல் எழுத்தாகக் கொண்டவனின் டப்பாவில் தேடவும். இதன் உதவியால் வகுப்பறை தூய்மையாகிறது. அதனுள் சீட்டு உள்ளது. கரும்பலகை தூய்மைக்கு உதவுபவன் வைத்திருக்கிறான். ஐந்தாவது மேசையின் கிழ்ப்பகுதியில் ஒட்டப்பட்டிருக்கும். மணிகாட்டும் இடத்தில் ஒட்டப்பட்டுள்ளது. வகுப்பறையினுள் மாணவர்கள் இங்கும் அங்கும் எனபரபரப்பாக இயங்குவார்கள். குறிப்பைபயன்படுத்தி அடுத்த துண்டுச்சீட்டை கண்டுபிடிப்பார்கள். அந்த துண்டுச்சீட்டில் பாடம் சார்ந்த சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் இடம்பெறவேண்டும்.
உதாரணத்திற்கு, “கோடைக்கால அரண்மனைகளுள் ஒன்று. விடை தெரிந்தால் கூறலாம். தவறான விடைஎனில் போட்டியில் இருந்து விலக்கப்படுவீர்கள். கூடுதல் தகவல் அறியஅவனை நாடலாம்.” யார்? “அவனை எவ்வளவு முயன்றாலும் கடிக்க முடியாது. அவன் இல்லாமல் உணவு இல்லை.” அவன் உள்ள இடத்திற்கு அடியில் மூன்றாவது குறிப்பு உள்ளது.
மதுரையில் உள்ள ராணிமங்கம்மாளின் தமுக்கம் அரண்மனை அல்லது ஊட்டி பர்க்கின்சன் அரண்மனை என ஏதாவது ஒன்று விடை என அறிந்த அவர்கள் புதிருக்கான விடையைக் குழுவாக இணைந்து முயற்சிப்பார்கள்.
புதிருக்கான விடை: தண்ணீர் என்ற புதிருக்கான விடையைக் கண்டுபிடித்தவர், தண்ணீர் கேன் அடியில் அடுத்தச் சீட்டைகண்டு எடுப்பார்கள். அந்தத் துண்டுச் சீட்டில், ”இந்த அரண்மனை ஊட்டியில் இல்லை.” என எழுதியிருந்தால், தமுக்கம் அரண்மனை என பதில் அளிப்பார்கள். வகுப்பறை உயிரோட்டம் பெறுவதுடன், மதிப்பீடும் நடைபெறுகிறது.
விளையாட்டில் மாணவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட துப்புகளை பகுப்பாய்வு செய்து ஒரு முடிவுக்கு வர அவர்களின் சிக்கல் தீர்க்கும் திறன்களைப் பயன்படுத்த வேண்டும்.இதனால் விமர்சன சிந்தனை மேம்படும். விளையாட்டு என்பது துப்புகளைக் கண்டுபிடித்து மர்மத்தைத் தீர்க்க ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதை உள்ளடக்கியது. இது மாணவர்களிடையே ஒத்துழைப்பு, தொடர்பு மற்றும் தலைமைத்துவ திறன்களை ஊக்குவிக்கிறது.
குழுச்செயல்பாடு நடைமுறையில் நிச்சயத் தன்மையை அதிகரிக்க உதவுகிறது. மாணவர்களை சூழ்நிலைக்கு ஏற்ப பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், தடயங்களைக் கண்டறிவதற்கும் படைப்பாற்றலை தூண்டி சிந்திக்கவும் இந்த விளையாட்டு உதவுகிறது. இது பெட்டிக்கு வெளியே சிந்திக்கவும், புதுமையான தீர்வைக் கொண்டு வரவும் உதவுகிறது.
பாரம்பரிய வகுப்பறை முறைகளுடன் ஒப்பிடும்போது, விளையாட்டின் மூலம் தாங்கள் கற்றுக் கொள்ளும் கருத்துகள் மற்றும் தகவல்களை மாணவர்கள் நினைவில் வைத்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கற்றறிவை மேலும் ஈடுபாட்டுடன், ஊடாடும் மற்றும் மறக்கமுடியாததாக மாற்றுவதற்கு துப்பறியும் விளையாட்டு ஒரு சிறந்த வழியாகும். இதுவகுப்பறை நடவடிக்கைகளின் ஏகபோகத்தை உடைக்கிறது. முயன்று பாருங்கள். ஆசிரியர் என்ற கீரிடமும் உடையும். மாணவர்களுக்கு பிடித்த வகுப்பறையும் உருவாகும்.
- எழுத்தாளர், தலைமையாசிரியர்,டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.