உலகம் - நாளை - நாம் - 22: நாடும் நானே கண்டமும் நானே!

உலகம் - நாளை - நாம் - 22: நாடும் நானே கண்டமும் நானே!
Updated on
2 min read

இப்ப ஒரு பெயர் சொல்லப் போறேன் இதைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியுமோ சொல்லலாம். முயற்சி பண்றோம் சார்... நல்லது, அந்தப் பேரு இதுதான் ... ‘நியூ ஹாலந்து’. ஊம்… ஐரோப்பாவுல இருக்குது. நல்ல முயற்சி. ஆனா இது ஐரோப்பால இல்லை.

தெரியலியா? கொஞ்சம் கஷ்டம்தான். வேணுமானா ஒரு க்ளூ தர்றேன். இது ஒரு நாட்டினுடைய பெயர். போதாது சார்.. இன்னும் ஏதாவது. சரி. இன்னொரு குறிப்பு தர்றேன்... கிரிக்கெட்டுக்குப் பெயர் பெற்ற தீவு நாடு. மேற்கு இந்தியத் தீவு..? இல்லை. இலங்கை..? ஊஹூம். இது ஒரு நாடு. இதுவே ஒரு கண்டம். ஆஸ்திரேலியா?

செல்லப்பெயர்கள்: மிகச் சரி. 18ஆம் நூற்றாண்டு வரை, ஆஸ்திரேலியாவுக்கு, ‘நியூ ஹாலந்து’ என்கிற பெயர் வழங்கப்பட்டு வந்தது. ஆஸ்திரேலியா – ஒரு நாடு; ஆஸ்திரேலியா – ஒரு கண்டம். ஆஸ் (Aus) என்றும் ஆசி (Aussie) என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறது.

மலைகள், மழைக் காடுகள், பாலைவனங்கள் பல்வகை இயற்கைக் கொடைகள் கொண்ட ஆஸ்திரேலியா, இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் கடலால் சூழப்பட்ட தீவுக் கண்டம். ஆனாலும் இதன் பெரும்பாலான பகுதிகளில் ஆண்டு மழைப் பொழிவு 500 மிமீக்கும் குறைவு.

‘அகஸ்டஸ்’ மலை கேள்விப்பட்டு இருக்கீங்களா, இதன் நீளம் தெரியுமா? 2000 கிமீ. உலகின் மிக நீளமான ‘மொனோ லித்’; இதே போல, மிக நீண்ட ‘ கிரேட் பேரியர் கோரல் ரீஃப்’ ஆஸ்திரேலியாவுலதான் இருக்கு. கிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ‘கிரேட் டிவைடிங் ரேஞ்ச்’ குவீன்ஸ்லாந்து கடற்கரை, நியூ சவுத் வேல்ஸ் - விக்டோரியாவுக்கு இணையாக செல்கிறது.

நகர்ந்து செல்லும் கண்டம்: புவியியல் ஆராய்ச்சியாளர்களின் கணிப்புப்படி ஆஸ்திரேலியாக் கண்டம், ஓர் ஆண்டுக்கு 6 – 7 செ.மீ. அளவுக்கு ஈரோசியாவை நோக்கி நகர்கிறது.

‘கடைசி பனிக் காலம்’ – சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அந்தக் காலத்தில் தென் கிழக்கு ஆசியாவில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்களே இந்த நாட்டின் மூதாதையர் ஆனார்கள்.

பெருங்கடல் தாக்கம் ஆஸ்திரேலிய தட்ப வெப்பத்தில் அதிகம். எல்- நினோ காரணமாக வறட்சி, பருவகால காற்றழுத்தத் தாழ்வு நிலை, வடக்கு ஆஸ்திரேலியாவில் புயல். ஆவ்வப்போது ஏற்படும் ‘புதர் தீ’ ஆகியன ஆஸ்திரேலியாவின் தட்ப வெப்ப நிலையைத் தீர்மானிக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதர்களில் எழுந்த நெருப்பு ஆஸ்திரேலிய நாட்டு வரலாற்றில் மிக மோசமானது என்று சொல்லப்படுகிறது. உலகில் மிக அதிகமாய் கரிமம் வெளியேற்றும் நாடாக இது உள்ளது என்பது வருத்தம் தருகிற செய்தி.

பல இடங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுவது உண்டு. குறிப்பாக நகரங்களில் இது மிகுந்து இருக்கிறது; அதனால் நகரப் புறங்களில் வறட்சி நிலவுகிறது.

(ஆசி பயணம் தொடரும்)

- கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான; வழிகாட்டி. தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in