

சிக்கலை வெவ்வேறு கோணங்களில் ஆராய்வது எவ்வாறு? என்று வினவினாள் அருட்செல்வி. “4எ1ஏ1யா” முறையில் ஆராயலாம் என்றார் எழில். எல்லாரும் விழித்தனர்.
மணியன் ஓட்டபந்தய வீரர். தனது பள்ளியிலும் மாவட்ட, மாநில அளவிலும் நடைபெறும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தொடர்ந்து முதலிடம் பெற்றுவருபவர். அவரை மாவட்ட அளவிலான 1000 மீட்டர் ஓட்டயப்பந்தயத்தில் பங்கேற்குமாறு அவர் ஆசிரியர் கூறுகிறார். மணியனும் அதில் பங்கேற்க விரும்புகிறார்.
காலணி இல்லையே! - ஆனால், மணியன் மீது அக்கறையுள்ள சிலர், நமது பள்ளியைச் சேர்ந்த 100 மீட்டர் ஓட்டபந்தய வீரர்கள் சிலர் கடந்த ஐந்தாண்டுகளாக அப்போட்டியில் பங்கேற்கின்றனர். ஆனால், யாரும் வாகைசூடியது இல்லை. எனவே, அதில் நீ பங்கேற்க வேண்டுமா எனச் சிந்தித்துக்கொள் என்று எச்சரித்தனர். அதனைக் கேட்ட மணியன் அதிலுள்ள சிக்கல் என்ன என்று சிந்தித்தார் என்று கூறிய எழில், இதில் உள்ள சிக்கல் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று மாணவர்களை வினவினார்.
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வென்றவர்களால் 1000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெல்ல முடியவில்லை என்றான் சுடர். “நன்று” என்று பாராட்டிய எழில், ‘1. என்ன?’ என்று கரும்பலகையில் எழுதினார்.
பின்னர், மணியன், முந்தைய போட்டியில் கலந்துகொண்டவர்கள் ஏன் தோற்றார்கள் என்று ஆராயத் தொடங்கினார். அதற்காக தன் ஆசிரியரிடமும் ஓடித் தோற்றவர்களிடமும் உரையாடினார்.
அவர்களின் தோல்விக்கு, உரிய காலணியை அணியாமல் ஓடியதும் 100 மீட்டரிலிருந்து படிப்படியாக முன்னேறாமல் நேரே 1000 மீட்டருக்குத் தாவியதும் தொடர்பயிற்சியில் ஈடுபடாததும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை போதிய அளவு உண்ணாததும் காரணங்கள் என்பதை அறிந்தார் என்று கூறிய எழில், “2. ஏன்?” என்று எழுதினார் எழில்.
இனி கதையை நான் தொடர்கிறேன் என்ற அருளினியன், மணியன், தோல்விக்கான அந்தக் காரணங்களை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்தார் என்றான். எழில், “3. எப்படி?” என்று எழுதினார்.
நாள்தோறும் உரிய காலணியை அணிந்து, தொடர்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று மனத்திற்குள் உறுதியேற்றார் என்று அருளினியன் கூறியதும் அதனை எங்கு மேற்கொள்வது என்று மணியன் சிந்தித்தார் என்றாள் மதி. தான் சொல்ல நினைப்பதை மாணவர்கள் புரிந்துகொண்டனர் என்ற மகிழ்ச்சியோடு “4. எங்கு?” என்று எழுதினார் எழில்.
எந்த உணவு? - போட்டி நடைபெற உள்ள திடலிலேயே பயிற்சி செய்தால் அக்களம் தனக்கு நன்கு பழக்கமாகும் என்று எண்ணிய மணியன், அதனை எப்பொழுது தொடங்குவது என்று சிந்தித்தார் என்றான் தேவநேயன். “5. எப்பொழுது?” என்று எழுதினார் எழில். மறுநாளே தொடங்க வேண்டும். அதிலும் காலையில் ஒருமுறையும் கடந்த ஐந்தாண்டுகளில் அப்பந்தயம் நடைபெற்ற மாலை 3 மணிக்கு ஒருமுறையும் பயிற்சி செய்ய முடிவுசெய்தார் என்றாள் கயல்விழி.
பயிற்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துள்ள உணவு என்ன? அதனை எந்தளவிற்கு எப்பொழுது உண்ண வேண்டும் என்றுமணியனுக்குத் தெரியவில்லை. அதனையாரிடம் கேட்டறியலாம் என்று அவர் சிந்தித்தார் என்றான் சுடர். “6. யார்?” என்றுஎழுதினார் எழில். அரசு மருத்துவமனையிலுள்ள மருத்துவரிடம் கேட்கலாம் என்று முடிவுசெய்து கிளம்பிச் சென்றான் மணியன் என்று கதையை முடித்தாள் தங்கம்.
என்ன, ஏன், எப்படி, எங்கு, எப்பொழுது, யார் என்ற கோணங்களில் ஒரு சிக்கலை ஆராய்ந்து அதற்கு தீர்வு கண்டிருக்கிறீர்கள் பாராட்டுகள் என்ற எழில், இம்முறையைப் பரிந்துரைத்தவர் ஆங்கிலக் கவிஞர் கிப்ளிங். எனவே இதற்கு கிப்ளிங் முறை என்று பெயர் என்று விளக்கினார்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com