

சாமியார் வேடமணிந்த குழுவினர் சென்றவுடன் எதிர் திசையிலிருந்து சிலர் வருகிற சத்தம் கேட்டது. வருவது திருச்சேந்தியின் ஆட்களாக இருந்தால் என்ன செய்வது என்று குணபாலன் திகைத்தான். சரி வருவது யாராக இருந்தாலும் வரட்டும். ஒரு கை பார்த்துவிடுவோம் என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்த ஒரு பாறையின் மேல் உட்கார்ந்துகொண்டான்.
முதலில் சில வீரர்கள் முன்னாள் வந்தனர். அவர்களுக்கு அடுத்ததாக ஒரு பல்லக்கு வந்தது. அந்தப் பல்லக்கின் பின்னாலும் சில வீரர்கள் வந்துகொண்டிருந்தனர். அந்தப் பல்லக்கு அரண்மனையிலிருந்து வந்திருக்கக் கூடும் என்று குணபாலன் நினைத்துக்கொண்டான்.
அவன் நினைத்தது சரியாகத்தான் இருந்தது. அரண்மனையிலிருந்து வந்த இளவரசி மதிவதனி, திருச்சேந்தியின் புதல்வியும் தனது தோழியுமான மஞ்சரியை அழைத்துக்கொண்டு, மலையின் மேல் உள்ள அம்மனை தரிசித்துத் திரும்பி வந்துகொண்டிருந்தாள்.
வந்துகொண்டிருப்பது அரண்மனை ஆட்கள். அதுவும் பெண்களாக இருக்கக் கூடும் என்று கணித்த குணபாலன், சற்றுத் தள்ளி நிற்கலாம் என்று நினைத்தான். உடனடியாக எழுந்து அருகில் இருந்த ஒரு மரத்தினருகே சென்று திரும்பி நின்றுகொண்டான். அவனது செயலைக் கவனித்துவிட்டது போல் சென்று கொண்டிருந்த பல்லக்கு திடீரென நின்றது. அந்தப் பல்லக்கின் திரையைக் கொஞ்சமாக விலக்கிய இளவரசியின் கைகள் ஏதோ உத்தரவு இட்டது.
உடனே சில வீரர்கள் குணபாலன்அருகே வந்து, ‘ஏய், நீ யார்?’ என்றுகேட்டார்கள். உடனடியாக சுதாரித்துக்கொண்ட குணபாலன், ‘ஐயா, நான் மலை மேல் உள்ள அம்மனை தரிசிக்கவே சென்றுகொண்டிருக்கிறேன்’ என்றான். அவனது பேச்சில் பொய்யைக் கண்டுகொண்ட இளவரசி, ‘உண்மையைச் சொன்னால், உதவி செய்யலாம் என நினைத்தேன். பொய்யைச் சொல்லி, இந்தக் காட்டில் விலங்குகளுக்கு இரையாவதே இஷ்டம் என்றால், நாம் நமது பயணத்தைத் தொடர்வோம் வாருங்கள் வீரர்களே’ என்றாள்.
அந்த வீரர்களில் ஒருவன் குணபாலனிடம், ‘அடேய், வந்திருப்பது யார்என்று தெரியுமா? நமது நாட்டு இளவரசியடா! உண்மையை இப்போதாவது சொல்!’ என்று கர்ஜித்தான். உடனே குணபாலனும், ‘இளவரசி, என்னை மன்னியுங்கள். தங்களை இன்னார் என்று அறியாமல் நான் பொய்சொல்லிவிட்டேன். உண்மையில் நான் பெரிய ஆபத்தில் மாட்டிக்கொண்டுள்ளேன். என்னை சிலர் துரத்திக்கொண்டு வருகிறார்கள். அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றினால் போதும்’ என்றான்.
‘ஏன் நீரே சண்டையிட்டு உம்மைக்காப்பாற்றிக்கொள்ள் வேண்டியதுதானே?’ என்றாள் இளவரசி. ‘தாங்கள் சொல்வதும் உண்மைதான். ஆனால், நான் இப்போது வீணர்களுடன் சண்டையிடுவது இல்லை.’ என்றான். இப்போது திருச்சேந்தியின் புதல்வி மஞ்சரி இளவரசியிடம் கண்களால் ஏதோ ஜாடை காட்டிவிட்டு திரையை விலக்கி, ‘உமக்கு நாங்கள் உதவுகிறோம்.
ஆனால், நீர் அதற்குப் பதிலாக சிறிது தூரம் எங்களது பல்லக்கைத் தூக்கி வர வேண்டும். அப்போதுதான் உம்மைத் தேடிவரும் வீரர்களுக்கு உம்மை அடையாளம் தெரியாது. நீர் தப்புவதற்கு இஃது ஒன்றே உபாயம். அதையும் மீறிச் சென்றால், மலை உச்சியிலிருந்து குதித்து உயிரை விட வேண்டியதுதான்’ என்றாள்
குணபாலனுக்கோ என்ன செய்வதென்று புரியவில்லை. பல்லக்குத் தூக்குவதை அடிமைகளின் வேலையாகவே அவன் கருதினான். எனவே அவன், ‘என்னைக் காப்பாற்ற நினைத்ததங்களது உயர்ந்த உள்ளத்துக்கு மிகவும் நன்றி! அதோ மலை மேல் வீற்றிருக்கும் அந்த தேவியே என்னைக் காப்பாள். நான் சென்று வருகிறேன்.’ என்று சொல்லி அங்கிருந்து மலையின் மேல் நோக்கிச் சென்றான்.
அவன் சென்ற சிறிது நேரத்தில் திருச்சேந்தியின் ஆட்கள் அங்கு ஓடி வந்தனர். இளவரசிக்கும், மஞ்சரிக்கும் மரியாதை செலுத்திவிட்டு, ‘நாங்கள் ஒரு தேச விரோதியைத் துரத்தி வந்தோம். அவனைப் பார்த்தீர்களா?’ என்றனர். மஞ்சரிக்கோ, அட நம்அப்பாவின் வீரர்களையே ஏமாற்றிச்சென்றவனிடமா நாம் பேசிக்கொண்டிருந்தோம் என்ற நினைப்பு வந்தது. உடனே அவள், ‘இப்போதுதான் அவன் மேலே சென்றுகொண்டிருக்கிறான்.
விரைந்து சென்றால் பிடித்துவிடலாம்.’ என்றாள். உடனே வீரர்களும் மேல்நோக்கி விரைந்தனர். ஆனால் இளவரசிக்கு மட்டும் குணபாலனை ஒரு தேச விரோதியாக நினைத்துப் பார்க்க இயலவில்லை. அவள் மஞ்சரியிடம், ‘என்ன நீ, அவன் நல்லவனா, கெட்டவனா என்று தெரியாமல் இப்படிக் காட்டிக்கொடுத்துவிட்டாயே?’ என்றாள்.
மஞ்சரி சொன்னது போலவே திருச்சேந்தியின் ஆட்கள் விரைந்து சென்று குணபாலனை நெருங்கிவிட்டார்கள். அம்மன் கோயிலும் மலை உச்சியும் வந்துவிட்டது. குணபாலனோ அம்மனை தரிசிக்கவும் இந்தப் பாவிகள் விடவில்லையே என்று நினைத்து அதற்கும் மேல் ஓட வழியில்லாத மலை உச்சிக்கு வந்து சேர்ந்தான். இப்போது அவனுக்கு முன்னாள் அதல பாதாளம். பின்னால் துரத்தி வந்த வீரர்கள்.
- தொடரும்