

சூஃபி இறைஞானியும், மெய்யியலாளருமான இப்னு அரபி (Ibn Arabi) பிறந்த தினம் இன்று (ஜூலை 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# ஸ்பெயினின் முர்சியா நகரில் (1165) பிறந்தார். இயற்பெயர் முஹ்யித்தீன் இப்னு அரபி. புனைப்பெயர் அபூபக்கர். தந்தை அந்நாட்டு அரசரிடம் அமைச்சராகப் பணிபுரிந்தவர். இவர் 7 வயதிலேயே குர்ஆனை முழுமையாகக் கற்றார். 10 வயதிலேயே தத்துவார்த்தமான கருத்துகளை வெளியிடத் தொடங்கினார்.
# அறிவுக்கூர்மை, அபார நினைவாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். இவரது ஆன்மிக விளக்கங்கள் முதுபெரும் அறிஞர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. 20 வயது முதல் பல ஆன்மிக அனுபவங்கள் இவருக்கு ஏற்பட்டன.
# தந்தையிடமும், பிற ஞானிகளிடமும் மார்க்கக் கல்வி பயின்றார். யூத, கிறிஸ்தவ,ஜெராஸ்டிய மதங்களின் நூல்கள், கிரேக்க தத்துவம், கணிதமும் பயின்றார். கிழக்கத்திய நாடுகள், எகிப்து, துருக்கி உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார்.
# கெய்ரோவில் இருந்தபோது இவர் வழங்கியஅருள் உரைகள், மக்களை பரவசம் அடையச் செய்தன. இவரது செல்வாக்கு அதிகரித்ததால் பொறாமை அடைந்த எதிரிகள் இவரைக் கொல்ல முயன்றனர். அது தோல்வி அடைந்ததால், ஆட்சியாளர்கள் உதவியுடன் சிறையில் அடைத்தனர். ஆதரவாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால், விடுதலை செய்யப்பட்டு, நாடுகடத்தப்பட்டார்.
# பிறகு பாக்தாத், மெக்கா சென்றார். மெதீனாவில் 7 ஆண்டுகள் தங்கியிருந்தார். ஆசியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீண்டும் மெக்கா திரும்பினார். இறுதியாக சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் தங்கினார். அங்கு ரத்தினம், ஜவுளிக் கடை வைத்து வியாபாரம் செய்தார்.
# ஆன்மிக உச்சநிலையை அடைந்த இவர், மறைஞான ரகசியங்களை மக்களுக்கு போதித்தார். இதனால், இவரை மக்கள் ‘இறைவனின் வியத்தகு அற்புதம்’, ‘இறைவனின் வெளிப்படையான அத்தாட்சி’ என்றும் அழைத்தனர். உலகில் தோன்றிய சூஃபிக்களில் பெரும் மகத்துவம் கொண்டவராகப் போற்றப்பட்டார். ‘இறைவன் ஒருவனே’ என்று போதித்தார்.
# ஹலப் என்ற நகருக்கு சென்ற இவரை அந்நகர ஆளுநர் வரவேற்று இவர் தங்கியிருக்க வீடு வழங்கினார். அங்கு தங்கியிருந்த இவரிடம் ஒரு ஏழை தர்மம் கேட்டார். கொடுக்க வேறு ஒன்றும் இல்லாததால், அந்த வீட்டையே ஏழையிடம் தந்துவிட்டு வெளியேறினாராம்.
# சிறந்த கவிஞராகவும் திகழ்ந்தார். இஸ்லாமிய அறிவியல், குர்ஆன் போதனைகள், நீதி பரிபாலனம், இறையியல், தத்துவம், புதிர் ஞானம் தொடர்பாக 500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் 150 நூல்கள் மட்டுமே தற்போது உள்ளன. அதிலும் பெரும்பாலானவை கையெழுத்துப் பிரதிகளாக இஸ்தான்புல், கென்யா, பாக்தாத் நூலகங்களில் பாதுகாக்கப்படுகின்றன.
# சூஃபியிஸம் குறித்து இவர் எழுதிய ‘அல் புதூஹாதுல் மக்கிய்யஹ்’ நூல் 560 அத்தியாயங்களைக் கொண்ட பெரிய புத்தகம். ‘ஹில்யத்துல் அப்தால்’ என்ற நூலை இவர் ஒரு மணிநேரத்தில் எழுதியதாக கூறப்படுகிறது.
# மெக்காவில் இருந்தபோதுதான் தனது பெரும்பாலான நூல்களை எழுதினார். சூஃபி தத்துவ இறைஞானத்தின் தந்தை எனப் போற்றப்படும் இப்னு அரபி 75 வயதில் (1240) மறைந்தார்.