

என்றைக்காவது ஒருநாள் பள்ளிக்கூடத்திற்கு வண்ண ஆடை அணிந்து வரலாம் என்று அறிவித்தால் குழந்தைகளிடம் பெரும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். சீருடையிலிருந்து கிடைக்கும் விடுதலை.
இது எதைக் காட்டுகிறது?
# கூட்டத்தினரோடு சேராமல் தனித்து நிற்க ஆசைப்படுவதை.
# நம்மை எல்லோரும் கவனிக்க வேண்டும் என்ற தாகத்தை.
# நான் வேறுபட்டவள்(ன்) என்பதைக் காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தை.
# நான் சிறப்பானவள்(ன்) என்பதை உலகிற்குக் காட்ட வேண்டும் என்ற ஏக்கத்தை..
பெற்றோருக்கும் ஆசையுண்டு: இவ்வுணர்வு குழந்தைகளுக்கு மட்டும்தானா? பெரியவர்களுக்கும் இந்த ஆசை, ஆர்வம், தாகம், ஏக்கம் இருக்கிறது. மனிதர்கள் ஒவ்வொருவரிடமும் இந்தப் பண்பு இருக்கிறது.
ஆனால், சமூகத்தில் இதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. கூட்டத்தினரோடு சேர்ந்து நிற்க வேண்டிய சூழல் வரும்போதெல்லாம் நம்மைக் கவனிக்கவிடாமல் வேறு யாரோ அந்தச் சூழலை அழகாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாம் கூட்டத்தில் ஒருவராக, பத்தோடு பதினொன்றாக மாறிவிடுகிறோம்.
இது நம் மனத்தின் ஓரத்தில் இனம்புரியா பாரமாக பதிந்துவிடும். அது வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மெல்ல மெல்ல தலையை உயர்த்தும். நீதான் கவனிக்கப்படாமல் போய்விட்டாய். உன் வாரிசையாவது “அந்த நாலுபேர்” திரும்பிப் பார்க்கும்படி வளர்க்கப் பார் என்று நச்சரித்துக் கொண்டே இருக்கும். அந்த நிழலில் குளிர்காய மனம் ஏங்கும்.
அடிமன ஆசையின் விளைவு: குழந்தையைப் பற்றி அதீத கற்பனையை வளர்க்கிறோம். விளையாட்டில், பாட்டுப் பாடுவதில், நீச்சலில், ஸ்கேட்டிங்கில், ஓவியத்தில்... என எல்லாத் துறைகளிலும் சேர்த்து விடுகிறோம். எல்லா பாடத்திற்கும் தனித்தனி தனிப்பயிற்சி ஆசிரியரைக் கண்டுபிடிக்கிறோம். ஆனால், எதுவும் திருப்தியளிப்பதில்லை.
ஒவ்வொரு கட்டத்திலும் குழந்தை நம்மைப் போலவே பத்தோடு பதினொன்றாக இருக்கிறதே, இடம் தெரியாமல் இருந்து விட்டு வருகிறதே என்ற கவலை நம்மை அரிக்கத் தொடங்குகிறது. அதுவும் நம்முடைய சின்னச் சின்ன ஆசைகளை அடகு வைத்து, தள்ளி வைத்து, சிலவேளை வேண்டாம் என ஒதுக்கிவைத்து நாம் குழந்தையை வளர்க்கிறோமே என்று நினைக்க நினைக்க அந்த அழுத்தம் கூடும்.
தனித்துத் தெரிவதும் அழுத்தமே: தனித்துத் தெரிவது எவ்வளவு சிரமமானது என்பதும் அந்த நிலையைத் தக்க வைப்பது எவ்வளவு கடினமானது என்பதும் அப்படி கவனிக்கப்பட்டவர்களிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும்.
பத்தாம் வகுப்பில் முதலிடம் வந்த குழந்தை பிளஸ் 2-ல் வராவிட்டால் அது அடையும் வேதனை நம் குழந்தை அடையும் வேதனையைவிட பலமடங்கு பெரியது. தாங்க முடியாதது.
இதைப் புரிந்துகொண்ட பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளிடம் நீ முதலிடம் வராதே என்றுகூட கேட்டுக்கொள்வதுண்டு.
இன்று வகுப்பில் என்ன நடந்தது? -
# நீங்கள் தள்ளி வைத்த, ஒதுக்கி வைத்தஆசைகளுள் சிலவற்றைக் குழந்தைகளுடன் சேர்ந்து நிறைவேற்றுங்கள்.
# வீட்டில் நடந்த எளிய நிகழ்வுகளைக் குழந்தைகளிடம் பேசுங்கள்.
# நாளும் பள்ளியை விட்டுவரும் குழந்தையிடம் “இன்று வகுப்பில் என்ன நடந்தது?” என்று கேளுங்கள். குழந்தை முதலில் எதுவும் சொல்லாமல் இருக்கலாம். பரவாயில்லை தொடர்ந்து கேளுங்கள்.
# கற்பனை நிகழ்வுகளைச் சொல்லி உங்களை ஒரு பரிசுத்தமானவராகக் காட்டிக்கொள்ளாதீர்கள்.
# நீங்கள் முட்டாளான நிகழ்வுகளைக் குழந்தைகள் பெரிதும் ரசிப்பார்கள். அது உங்களுக்கு இடையே இருக்கும் இறுக்கத்தைத் தளர்த்தும்.
# குழந்தைகள் சொல்வது நமக்கு முக்கியமற்றதாக இருக்கலாம். இருந்தாலும் உச்சுக் கொட்டிக் கேளுங்கள். அதைப் பற்றி மேலும் கேள்வி கேளுங்கள்.
# எதை வேண்டுமானாலும் என் பெற்றோரிடம் பேசலாம் என்ற சூழலை உருவாக்குங்கள்.
அப்படி பேசும் ஒவ்வொரு நிமிடமும் நம் குழந்தை தனித்துத் தெரிவதை நீங்கள் உணரலாம். ஆகா... நம் குழந்தையா இப்படியெல்லாம் யோசிக்கிறது என்பதை உணர்வீர்கள். மெல்ல மெல்ல மன அழுத்தம் குறைவதை உணர்வீர்கள். அத்தி பூத்ததுபோல் என்றாவது வந்துபோகும் புன்சிரிப்பு நம்முகத்தில் நிலையாக ஒட்டிக்கொண்டு அழகு சேர்க்கும்.
தன்பேச்சைக் கேட்க நேரம் ஒதுக்கும் பெற்றோரை எந்தக் குழந்தையாவது விரும்பாமல் இருக்குமா? அவ்விருப்பம் பெற்றோரின் ஆர்வத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தை குழந்தைகளிடம் தோற்றுவிக்கும்.இயன்றளவு முயற்சி செய்யும். நாம் விரும்பியதும் இதைத்தானே!
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை; தொடர்புக்கு: rajendran@qrius.in