

சமைக்கும் பொருட்கள், பாத்திரங்கள் உள்ள அறையினைச் சமையலறை என்போம். அட்டில் என்னும் சொல்லால் சமையலறையைப் பழங்காலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
சமையல் பாத்திரங்களைக் குழிசி என்னும் பெயராலும் அரிவாணம், ஒட்டுட்டி, கடையால், காரகம், முழிசி,சட்டுவம், கோரம், தவ்வி, தூங்கல், மந்திநி, மிடா, மூலை, வட்டு இலைத்தட்டு போன்ற பல்வேறு உணவுக்கலன்கள் பண்டைய காலத்தில் இருந்ததாக ‘தமிழா் நாகரிகம்' நூலில் நடனகாசிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனவை: மண்பானைகளில் அதிகமாக நம்முன்னோர்கள் சமைத்து வந்தனர். அதில்சுவையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் இருந்தது. மண்பானைகளில் வைக்கப்படும் குழம்புக்கு ருசி அதிகம். நீண்ட நேரம் கெடாமலும் இருக்கும். அரிசியைச் சட்டியில் சமைத்து கஞ்சித்தண்ணி வடித்தனர்.
இன்று குக்கரில் சோறு செய்கின்றனர். அதில் கஞ்சியைப் பார்க்கவே முடியாது. மேலும் நான்ஸ்டிக் குக்கர், எலக்ட்ரிக் குக்கர், மைக்ரோ ஓவன், காபி மேக்கர், சாண்ட்விட்ச் மேக்கர், பீங்கான் பாத்திரங்கள் எனப் பல புதிய புதிய சமையல் பாத்திரங்கள் அடுப்பாங்கரைக்கு வந்துவிட்டது.
சமையலைறையை விட்டு காணாமல்போன பொருட்கள் சட்டி, பானை, அகப்பை, தட்டுக்கூடை, ஆட்டுக்கல், அம்மிக்கல், உலக்கை, தடி, என பலவகையான பொருட்கள் புழக்கத்தில் இருந்தன. ஆனால் இன்று அரிதாகிவிட்டது. பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்த பழங்கால பொருட்களைத் தெரிந்துகொள்வோம்.
பானைகள் பலவிதம்: சங்ககால மக்கள் தேவை மற்றும் பயன்பாடு கருதி பல வகையான பானைகளைப் பயன்படுத்தி வந்தனர். அவற்றுள் குழிசி, சாடி , கலன், தசும்பு, குப்பி, தடவு முதலியன பற்றி தெரிந்துகொள்வோம்.
தசம்பு: பால், தயிர் போன்றவற்றை நிறைத்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.
குழிசி: உணவு சமைக்கப் பயன்படும் மண்ணால் செய்யப்பட்ட மண்பானை குழிசி.
காடி: நெல்லிக்காய், எலும்மிச்சை, புளியங்காய், மாங்காய் முதலிய காய்களைப் பக்குவப்படுத்தி செய்த ஊறுகாய்களை மண்ணால் செய்யப்பட்ட மண்பாண்ட காடிகளில் அடைத்துவைத்தனர்.
கன்னல்: நீர் எடுத்து வைக்கும் மண்பானையினைக் கன்னல் என்றழைத்தனர். தொகுவாய்க் கன்னல், குறுநீர்க்கன்னல் என்ற இரண்டு வகைகள் உண்டு. குவிந்த வாயையுடைய நீர்வைக்கும் மண்பாத்திரம் தொடுவாய்க் கன்னல். மண்பானையில் நீர் விட்டு அதன் அடியில் சிறுதுளை வழியாக அந்நீரை சிறிது சிறிதாகக் கசிய சிட்டு அந்நீரினை அளந்து காணும் கருவி குறுநீர்க் கன்னல் ஆகும்.
தடவு: குளிர்காலத்தில் குளிர்ந்த நீரைசூடாக்கி குளித்துள்ளனர். அதற்காகபெரிய மண்தாளிகளைப் பயன்படுத்தினர்.
உடைந்த கலம்: மண்ணால் செய்யப்பட்ட கலன்கள் உடைந்த பின்பும் பயன்பாட்டைப் பெற்றுள்ளது. உடைந்தக் கலத்தினை ஓட்டைப்பானை என்றனர். பெரிய பானையில் புளியங்கொட்டை, வேர்கடலை, சோளப்பொரி, அரிசிப்பொரி போன்றவற்றை வறுத்து சாப்பிடுவதற்குப் பயன்படுத்தினர்.
சோளப் பணியாரம்
சோளம் - 4 கப்
உளுந்து – 1 கப்
வெந்தயம் – 1 தேக்கரண்டி
வெல்லம் – 2 கப்
ஏலக்காய் ¼ தேக்கரண்டி
சோளம், உளுந்து, மற்றும் வெந்தயத்தைச் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இட்லிக்கு அரைப்பது போல் அரைத்து இரவு முழுதும் புளிக்க வைக்க வேண்டும். பணியாரம் சுடும் போது தேவைக்கு ஏற்ப பனை வெல்லத்தைக் கரைத்து, ஏலக்காய் சேர்த்து பணியாரம் சுட்டால் அது இனிப்புப் பணியாரம். விரும்பினால் கார பணியாரமும் செய்யலாம்.
- கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வெலக்கல் நத்தம், திருப்பத்தூா் மாவட்டம்.