கற்றது தமிழ் - 6: முப்பொருள் என்றால்...

கற்றது தமிழ் - 6: முப்பொருள் என்றால்...
Updated on
2 min read

‘கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை' என்ற பாடல் ஒலிக்க, குழலியும் அவள் தோழியும் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். இன்னும் பயிற்சி முடியல போல. என்னைக்கு உங்க நடனப் போட்டி என்றவாறு வந்தமர்ந்தான் சுடர்.

சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி என்ற வரிகள் வர, இரண்டு சொற்கள்ல ஒரு சொல்லைப் பிரிச்சிட்டா ஒரு சொல் மட்டும் தனியாப் பொருள் தராதுங்கிற இரட்டைக்கிளவிக்கான இலக்கணத்த எவ்வளவு அழகாக் கதை நாயகிகளோட நிலமையைச் சொல்லப் பயன்படுத்தியிருக்காருல்ல கவிஞர் என்றபடியே, அவர்களின் நடனத்தோடு பின்னர் வந்தபாடல் வரிகளையும் கவனித்துக் கொண்டிருந்தான் சுடர்.

பாடல் முடியவும், சிறிது நேரம் ஓய்வு என்றவாறு இருவரும் அமர, உரையாடலைத் தொடங்கினார்கள்.

சுடர்: ஆமா குழலி, இந்தப் பாட்டுல அன்றில் பறவை இரட்டைப் பிறவி ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி, பிரியாதே விட்டுப் பிரியாதேன்னு வர்ற வரிகளப் பார்த்தியா... அன்றில் பறவை பற்றிக் கேள்விப்பட்டிருக்கியா குழலி...

குழலி: இன்னைக்கு நாம வளர்க்கிற லவ்பேர்ட்ஸ் மாதிரி அன்னைக்கு அன்றில் பறவைகளாம். இணை பிரியாத அன்பர்களுக்கு உவமையா இந்தப் பறவைகளைச் சொல்வாங்களாம். சங்க இலக்கியத்துலகூட அன்றில் பறவை அழகான உவமையா வருது.

சுடர்: அதான பார்த்தேன். இன்னும் சங்க இலக்கியத்தைச் சொல்லலையேன்னு. சரி சரி சொல்லு... அது என்ன உவமை.

குழலி: பூவிடைப் படினும் யாண்டு கழிந்தென்னன்னு ஒரு குறுந்தொகைப் பாட்டு இருக்கு. அந்தப் பாட்டுல, தண்ணீர்ல எப்பவுமே சேர்ந்தே நீந்திக்கிட்டிருக்க அன்றில் பறவைகள், தங்களுக்கு இடையில ஒரு பூ விழுந்துட்டா, என்ன நடந்ததுன்னு திரும்பிப் பாக்குற அந்த ஒரு நொடியில ஏற்படுற பிரிவை ஓராண்டு காலம் பிரிஞ்சு வாழ்ந்துட்டதா நினைச்சுத் துன்பப் படுமாம். அதோட இந்தப் பிரிவு வர்றதுக்கு பதிலா நாம இறந்தே போயிடலாம்னு நினைக்குமாம்.

சுடர்: ஓ... இப்படியும் அன்பா... முடியல...

குழலி: ஐந்திணைகள் பற்றியெல்லாம் பேசினோம். நினைவிருக்கா... இந்தப் பாட்டு நெய்தல் திணைப் பாட்டு.

சுடர்: ஆமா குழலி, நெய்தல் திணைன்னா கடலும் கடல் சார்ந்த இடமும் தானே.

குழலி: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைன்னு இந்த ஐந்திணைகள அன்பின் ஐந்திணைகள்னு சொல்வாங்க. அதோட கூட இன்னும் இரண்டு திணைகள் இருக்கு. கைக்கிளை, பெருந்திணைன்னு. ஆனா இந்த அன்பின் ஐந்திணைக்ள் பற்றித்தான் நிறைய செய்திகள் இருக்கு.

சுடர்: அப்ப அகத்திணைகள் ஏழா.. சரி இந்த ஐந்திணைகள் பற்றிப் பேசினப்போ மூன்று பொருள்கள் அவசியம்ன்னு சொன்னியே.

குழலி: ஒரு சங்க இலக்கியப் பாட்ட இது எந்தத் திணைக்கு உரிய பாட்டுன்னு நாமளே கண்டுபிடிச்சிடலாம். பாடலுக்குள்ள சில குறிப்புகள் இருக்கும். அந்தக் குறிப்புகளத் தர்றது இந்த முப்பொருள்கள்தான். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்ன்னு சொல்வாங்க.

சுடர்: அதென்ன குழலி, முக்கனி மாதிரி முப்பொருள்...

குழலி: ஆமா சுடர், நிலத்தையும் பொழுதையும் முதற்பொருள்னு சொல்வாங்க.

சுடர்: மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த இடமும் முல்லைன்னு சொல்றோமே அதுவா...

குழலி: ஆமா. பொழுதுன்னா பெரும்பொழுது, சிறுபொழுதுன்னு இரண்டாச் சொல்வாங்க.

சுடர்: பெரும்பொழுதா...

குழலி: ஒரு ஆண்ட ரெண்டு ரெண்டு மாசங்களாப் பிரிச்சு, கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம்ன்னு ஆறாச் சொல்லியிருக்காங்க.

சுடர்: நாம இப்ப கோடை காலம், குளிர் காலம்ன்னு சொல்றோமே அப்படியா... அப்ப சிறுபொழுதுன்னா...

குழலி: உன்னோட பேசிக்கிட்டே நேரம் போனதையே கவனிக்கல. சரிசரி... நாங்க இன்னும் கொஞ்ச நேரம் பயிற்சி செய்யணும். போட்டிக்கு இரண்டே நாள்தான் இருக்கு. பிறகு பேசுவோமா சுடர்.

- கட்டுரையாளர்: தமிழ்த் துறை பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in