

மழை..மலை..மரம் இதுவரை இப்படித்தான் இந்த பயணம் இருந்தது. முர்டேஷ்வர் கோயில் தவிர மற்றவை பெரிதாக மக்கள் கூட்டமே இல்லாத இடங்கள்தான். முதல் முறையாக மக்கள் வெள்ளத்தில் கலக்கப் போகிறோம். தெற்கு கோவா அமைதியாக இருந்தது, அதற்கு நேரெதிரான இடம்தான் இந்த வடக்கு கோவா. எங்குப் பார்த்தாலும் மக்கள் கூட்டம்.
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு எப்போதுமே கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறது இந்த இடம். எப்படி எல்லா நேரங்களிலும் கொண்டாட்டமாக இருக்கிறதென்ற கேள்விதான் எழுந்தது. அடையாளங்களைத் துறந்து, தங்களையே தேடி வருபவர்களின் இடமாகவே இந்த வடக்கு கோவா இருக்கிறது. சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள். ருசித்துப் பார்க்க ஏராளமான உணவுகள், குறிப்பாக கடல் உணவுகள் விதவிதமாக கிடைக்கிறது.
சுற்றுலா கடற்கரைகள்: திரைப்படங்களில் பார்த்து பிரம்மித்த பல கோட்டைகளை இங்கு காணலாம். அகூடா கோட்டை, சப்போரா கோட்டைகளைச் சுற்றி பார்க்கவே ஒரு நாள் போதாது. கோட்டை மேல் இருந்து பார்க்கும்போது, அந்த அரபிக் கடலின் அழகு அத்தனை ரம்மியமாய் இருக்கும். தெற்கு கோவாவைப் போல் இங்கும் கடற்கரைகள் ஏராளம். ஆனால், அத்தனையும் மனிதர்களால் நிரம்பி இருக்கும். பாகா கடற்கரை, காலிங்கட் கடற்கரை சுற்றுலா பயணிகளுக்காகவே உருவாக்கப்பட்டதா என்று தோன்றும்.
காலிங்கட் கடற்கரை அருகே அறை எடுத்து தங்கினோம். நம்முடைய வண்டியை அங்கேயே விட்டுவிட்டு, வாடகைக்கு ஒரு ஸ்கூட்டர் ஒன்றை எடுத்துக் கொண்டு ஊர் சுத்த கிளம்பினோம். அரசு அடையாள அட்டை இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் வாடகைக்கு வண்டி எடுக்கலாம். சாதாரண வண்டி முதல் விலை உயர்ந்த ஸ்கூட்டர் வரை 300 ரூபாய் என்ற தின வாடகைக்கு கிடைக்கிறது. ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கடற்கரை உணவகத்துக்கு சென்று மனதும் வயிறும் நிரம்ப சாப்பிட்டு முடித்தோம்.
அங்கிருந்து காலிங்கட் கடற்கரைக்கு சென்றோம். ஆண் பெண் வித்தியாசம் இன்றி அந்த நிமிடத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் எல்லோரும். நிறைய வெளிநாட்டினரை பார்க்க முடிந்தது. நேரம் போனதே தெரியாமல், அந்த கடற்கரையிலே பொழுதுபோக்கினோம். பின்னிரவு ஆனபின்னும் கூட்டம் குறையவில்லை. மழை வரத்தொடங்கியதும் தான் அங்கிருந்து கிளம்பினோம்.
ஜாலியான ஸ்கூபா டைவ்: மறுநாள் பாகா கடற்கரைக்குச் சென்றோம். அங்கு நீர் விளையாட்டுகள் பிரசித்தம். நிறைய பேர் ஸ்கூபா டைவ் சென்றனர். நாம் ஏற்கெனவே ஸ்கூபா சென்னையில் சென்றிருந்தோம், அதனால் இங்கு ஸ்கூபா செல்லவில்லை. நீச்சல் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எல்லோரும் ஸ்கூபா செல்லலாம்.
கடலுக்கு அடியில் தாவரங்கள், மீன்கள் என எல்லாவற்றையும் கண்டு களிக்கலாம். அது வாழ்நாளுக்குமான அனுபவமாக இருக்கும். பாரா க்ளைடிங் செல்லலாம் என முடிவெடுத்து தான் கடற்கரைக்கு வந்தோம். மழை நேரம், அதனால் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என பாரா க்ளைடிங் அன்று ரத்து செய்யப்பட்டிருந்தது. ஏமாற்றம் தான் ஆனால் என்ன... அடுத்து அடுத்து இங்கு சுற்றி பார்க்க ஏராளம் இருக்கிறதே.
அன்று மாலை கோவா தலைநகர் பனாஜி சென்றோம். ஆறு கடலில் கலக்கும் இடத்துக்கு சில கிலோமீட்டர் முன்னதாக, பிரம்மாண்டமான கப்பல்கள் நங்கூரமிட்டு நின்றிருக்கின்றன. இந்த கப்பல்களில்தான் கேசினோ உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.
இதை சுற்றி பார்க்கவும், பொழுது போக்கவும், அங்கு தயாரிக்கப்படும் உணவுகளை சுவைக்கவும் உலகமெங்கும் கோவா கேசினோவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அங்கு வரும் பாதி கூட்டம் கேசினோ விளையாடவே செல்லும். இதையெல்லாம் அப்படியே எட்டி இருந்து பார்த்துவிட்டு மீண்டும் அறைக்கு திரும்பினோம். நாளை இந்தியாவின் ஹாலிவுட் நகரத்துக்கு புறப்பட வேண்டும்.
- கட்டுரையாளர்: இதழியலாளர், கீழடி, கண்ணகி கோட்டம் உள்ளிட்ட தமிழ் பண்பாட்டு நிலப்பரப்புகளை ஆவணப்படம் பிடித்தவர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com