

அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் பூங்காவில் ஏற்பட்ட வறட்சியை ஓநாய்கள் எப்படி தடுத்தன என்று கடந்த வாரம் பார்க்கத் தொடங்கினோம். அதன் தொடர்ச்சியை இன்று பார்ப்போம். ஓநாய்களின் வருகையால் மான்களின் நடத்தையும் மாறியது. ஓநாய்களுக்கு பயந்த மான்கள் திறந்த வெளியில் நடமாட அஞ்சின.
அதிக பாதுகாப்பு உள்ள இடங்களுக்கு இடம்பெயர்ந்தன. நீர் அருந்துவதற்காக மட்டும் நீர்நிலைகளுக்கு வந்து சென்றன. அப்படி வரும்போதும்கூட ஓநாய்களுக்கு பயந்து கரைகளில் உள்ள மரக்கன்றுகளை சாப்பிடாமல் விட்டுச்சென்றன. பொதுவாக நீர்நிலைகளின் அருகே வளரும் தாவரங்கள் வேகமாக வளரும் தன்மை கொண்டவை. அதனால் குறுகிய காலத்திலேயே புதிய தாவரங்கள், மரங்கள் வளர்ந்து அந்தப் பகுதியை நிறைத்தன. இதனால் மண் அரிப்பு சரியாகி, ஆற்று நீர் நிலத்திற்குள் வருவது நின்றுபோனது.
அத்தனை மான்களையும் தின்றுவிடாதா? - குறிப்பாக நீரெலிகள் மீண்டும் பூங்காவிற்குள் வரத் தொடங்கியது பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது. இந்த நீரெலிகள் இயற்கையாகவே உருவான பொறியியலாளர்கள். இவை மரங்களின் கிளைகளை ஒடித்துச் சென்று ஆற்றில் அணைக்கட்டுகளை உருவாக்குகின்றன. இவற்றால் ஆற்றின் வேகம் மட்டுப்பட்டு நீர் நிலத்திற்குள் செல்லாமல் தடுக்கப்படுகிறது.
மேலும், நீரின் ஓட்டம் குறைவதால் நீர் தேக்கங்கள் உருவாகி தவளைகள் உள்ளிட்டவை வாழ்வதற்கான சூழலும் உண்டாகுகிறது. தவளைகள், பூச்சிகளை வேட்டையாட பறவைகளும் பூங்காவிற்கு திரும்பி வந்தன. நீரெலிகள் நீர் தேக்கங்களை உருவாக்குவதால், மழை இல்லாத காலங்களிலும் கூட நீர் கிடைப்பதற்கான வசதியை உண்டு பண்ணுகின்றன. இது மரங்கள் செழிப்பாக வளர்வதற்கும், அதன்மூலம் பருவமழையை தவறாமல் பெறுவதற்கும் காரணமாக அமைகிறது. இதனால் அப்பகுதி கிராமங்களில் ஏற்பட்ட வறட்சியும் தடுக்கப்பட்டது.
இப்படியாக ஒநாயின் வருகை இழந்த சூழல்மண்டலத்தை மீட்டுருவாக்கம் செய்து, அழிவின் விளிம்பில் இருந்த தேசிய பூங்காவை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை காப்பாற்றியது. இப்போது உங்களுக்குச் சில கேள்விகள் வரலாம். ஓநாய்கள் எல்லா மான்களையும் தின்று, அந்தஇனத்தை அழித்து விடாதா? இல்லை,பூங்காவை காப்பாற்ற நாமே மான்களை மொத்தமாக அழித்துவிடலாம் இல்லையா? அதுதான் இல்லை.இயற்கையை அவ்வளவு எளிமையாக சுருக்கிவிட முடியாது.
சூழல்மண்டலம் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பின் வழி இயங்குகிறது. ஒரு விலங்கை பிரச்சினையாக கருதி அகற்றினால் அது மேலும் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். இந்த இயக்கத்துக்குப் பின் இருக்கும் அறிவியலை அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்.
(மேலும் மணம் வீசும்)
- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com