

கதையின் நுட்பங்களைப் பார்த்தோம்; பாதிக்கதையை வைத்து மீதிக்கதையை உருவாக்கினோம். இதன் அடுத்த கட்டமாக சில சொற்களை வைத்து ஒரு கதையை உருவாக்கிப் பழகுவோம்.
மூன்று சொற்களை வைத்து கதை எழுத முடியுமா என்ற சந்தேகம் வருகிறதா? அப்படிப் பயிற்சி அளித்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்தால் இன்னும் நம்பிக்கை வரும்.
மேட்டுப்பாளையம் அருகே மலையடிவாரத்தில் ஒரு கிராமம். அங்கே உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு கதை எழுத பயிற்சி அளித்தேன். முதலில், எல்லோரும் வகுப்பறையை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்க்க வைத்தேன். அங்கிருந்த மேகத்தில் என்ன உருவம் தெரிகிறது என்பதை உற்றுப் பார்த்தனர்.
ஒரு சார்ட்டில் மேகத்தில் பார்த்த உருவத்தை வரைய வைத்தேன். சிந்துஜா எனும் எட்டாம் வகுப்பு மாணவி, ‘கரடியையும் கிளியையும் பார்த்தேன்’ என்று இரண்டையும் வரைந்தார். அடுத்து, ’மேகத்தையும் அதில் பார்த்த உருவங்களையும் இணைத்து ஒரு கதை உருவாக்க வேண்டும்’ என்றேன்.
கரடியும் கிளியும்! - அனைவரும் ஆர்வத்துடன் கதைகளை உருவாக்கினர். அவற்றை எழுத வைத்தேன். சிந்துஜா எழுதிய கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்தக் கதையின் சுருக்கத்தை உங்களுக்குத் தருகிறேன்.
காட்டில் அடிப்பட்டு கிடந்த கிளியை, கரடி ஒன்று பார்த்தது. கிளியைத் தூக்கி சின்னப் பாறை ஒன்றின் மேல் வைத்தது. தாகத்தில் கிளி தவிப்பதைப் பார்த்த கரடி, நீர் அள்ளிவர ஆற்றை நோக்கி ஓடியது. நீர் அள்ளி திரும்பி வரும்போது, சுள்ளென்று வெயில் அடிப்பதை உணர்ந்தது கரடி. ‘அய்யோ, பாறை ஏற்கெனவே சூடாக இருக்குமே! இந்த வெயில் பட்டு கிளி இறந்துவிடுமோ!’ என்று வேகமாக ஓடி வந்தது.
ஆனால், சுற்றிலும் வெயில் இருக்க, அந்தப் பாறையில் மட்டும் நிழலாக இருந்தது. கிளிக்கு நீர் தந்து காப்பாற்றியதும், ”எப்படி உன்னைச் சுற்றி நிழலாக இருக்கு?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டது கரடி.
அதற்கு கிளி, ”மேலே பாரு” என்றது. கரடி தலை நிமிர்த்தி மேலே பார்க்க, வானத்தில் எல்லா மேகங்களும் ஓடிக்கொண்டிருக்க, ஒரு மேகம் மட்டும் அசையாமல் நின்றுக்கொண்டிருந்தது. கரடி குழப்பத்துடன் கிளியைப் பார்க்க, “வானத்தில் பறக்கும்போது, அந்த மேகம் எனக்கு நண்பராகி விட்டது” என்றது அது.
நான் சொன்ன, மேகம் அதில் பார்த்த உருவங்களான கிளி, கரடி ஆகியவை கதையில் வந்துவிட்டன. எனவே, இத்துடன் கதையை சிந்துஜா நிறுத்தியிருந்தால், சாதாரண கதைதான். அவர் இன்னும் அழகாகத் தொடர்ந்தார்.
நண்பனான மேகம்: சில நாட்கள் கழித்து, கரடிக்கு பதில் உதவியாக ஏதாவது செய்ய ஆசைப்பட்டது கிளி. கரடியிடம் கேட்டது, “உன் நண்பன் மேகத்தைத் தொட்டுப்பார்க்க ஆசை” என்றது. கரடி எப்படி வானத்திற்கு கொண்டுபோவது எனக் குழம்பி விட்டது கிளி. காட்டில் எல்லோரிடமும் யோசனை கேட்டும் பலன் இல்லை. கடைசியில் மேகத்திடமே சிக்கலைச் சொன்னது. ”உன்னைக் காப்பாற்றிய அந்தப் பாறையின் மீது கரடியை நிற்கச் சொல்” என்றது மேகம்.
அடுத்த நாள், அந்தப் பாறையின் மீதேறி கரடி நின்றது. அதன் மேலே வந்த மேகம், தன் உடலில் கொஞ்சத்தை மழையாகப் பெய்ய, கரடியும் மேகமும் தொட்டுக்கொண்டன.
கதையின் முடிவைப் பார்த்ததும் நிஜமாகவே அசந்துவிட்டேன். மனதார சிந்துஜாவைப் பாராட்டினேன். சிந்துஜா மேகத்தைப் பார்த்ததற்கும் கதை எழுதி முடிப்பதற்கும் இடையே 45 நிமிடம் மட்டுமே ஆனது. சிந்துஜாவால் முடியும் என்றால் உங்களாலும் முடியும்தானே?
கீழுள்ள சொற்களில் உங்களுக்குப் பிடித்த மூன்று சொற்களை வைத்து அழகான கதை எழுதி அனுப்புங்கள்!
கப்பல், ஒட்டகம், சிங்கம், பாலைவனம், அழுகை, சிறுமி, எலி, கனவு, ஓங்கில், அரசமரம், பேருந்து, பஸ் டிக்கெட், ஸ்கூல் பேக், தாத்தா, சிறுவன்.
- கட்டுரையாளர் : எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com