ஜூலை 22: சர்வதேச மாம்பழ தினம் - நினைத்தாலே இனிக்கும் கனி

ஜூலை 22: சர்வதேச மாம்பழ தினம் - நினைத்தாலே இனிக்கும் கனி
Updated on
2 min read

மாம்பழமாம் மாம்பழம்

மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம்

தித்திக்கும் மாம்பழம்

அழகான மாம்பழம்

உங்களுக்கும் வேண்டுமா

இங்கே ஓடி வாருங்கள்

பங்கு போட்டு தின்னலாம்...

இந்தியாவின் தேசியக் கனி மாம்பழம். முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம்.

வயது வித்தியாசமின்றி அனைவரும் விரும்பி சுவைக்கும் பழங்களில் ஒன்றாக மாம்பழம் இருக்கிறது. 'மாதா ஊட்டாத உணவை மாங்கனி ஊட்டும்' என்ற பழமொழியும் உண்டு.

இந்தியாவில் மட்டும் சுமார் 283 வகையான மாம்பழங்கள் உள்ளன. ஆனால், 30 வகைக்கும் குறைவாகவே இன்று பயிரிடப்பட்டு வருகிறது. இந்தியாவின் வட மாநிலங்களில் பாம்பே பச்சை, அல்போன்சா, லக்ஷ்மண்போக், கேசர், தாசேரி, ஹிம்சாகர் மற்றும் கிஷன்போக், சௌசா உள்ளிட்ட மாம்பழ வகைகள் பயிரிடப்படுகிறது. ருமானி, பாதாமி, சஃபேடா, லாங்க்ரா, தோதாபுரி, நீலம், ரஸ்பூரி, மல்கோவா உள்ளிட்ட மாம்பழ வகைகள் தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாட்டில் விளைகிறது.

மாம்பழம் எனும் ஆசியாவிற்கே உரிய பழவகை மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தென்அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு கண்டங்களுக்கு பரவியது. 'இந்தியாவில் பழங்களின் ராஜா' என்றும் மாம்பழம் அழைக்கப்படுகிறது. இந்த பழம் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழியில் "மேங்கோ" என்று அழைக்கப்படுகிறது. புத்த பிட்சுகளுக்கு அனுமதிக்கப்பட்ட சில உணவு வகைகளுள் மாம்பழமும் ஒன்று. மா ஊறுகாய், மாவடு இல்லாமல் பலரது மதிய உணவு நிறைவு பெறாது எனச் சொல்லலாம்.

மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்: மாம்பழத்தைத் சுவைத்தால் அதில்உள்ள தாதுப் பொருட்களும், இருபதுக்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் மூலம் வைட்டமின் - ஏ, சி கிடைக்கும். அதுமட்டுமின்றி சளி, இருமல் அடிக்கடி வராமல் இருக்க, இதிலிருக்கும் வைட்டமின் உதவியாக இருக்கும். மாம்பழத்திலிருக்கும் 'மாங்கிஃபெரின்' எனும் பொருள், வயிறு, குடல் ஆகிய உடற்பாகங்களில் வரக்கூடிய புற்றுநோயைத் தடுக்கும் என்கிறது ஆய்வு. மாங்கனியைக் கடித்துச் சுவைக்க, உமிழ்நீர் அதிகமாகச் சுரந்து, உள்ளுறுப்புகளை வளப்படுத்தும். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து உடலுக்கு வலிமை தரும். மாம்பழத்தில் இருக்கும் நொதிகள், செரிமானத்தைத் தூண்டும். இதிலிருக்கும் நார்ச்சத்து மலச் சிக்கலுக்குத் தீர்வாகும்.

நல்ல மாம்பழம் எது? - மாம்பழங்களின் தோல், பளிங்கு போலப் பளபளக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். கருநிறக் கோடுகள், திட்டுக்கள் இருக்கும் மாம்பழங்களைத் தாராளமாக சாப்பிடலாம். வேதிக்கற்கள், வேதிப்பொருள்களை கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் செரிமானக் கோளாறுகள், அரிப்பு, வாந்தி, நுரையீரல் பிரச்சினைகள் எனப் மனித உடலுக்கு பல பாதிப்புகளை உண்டாக்கும். வெயில்காலத்தில் தாகத்தைத் தணிக்கவும், நீரிழப்பை ஈடுசெய்யவும் மாம்பழச் சாறு உடலுக்கு நல்லது.

மாம்பழத்தை எப்படி சாப்பிடலாம்? - மாம்பழ-மில்க் ஷேக், மாம்பழத்தை அரைத்துவிட்டு தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் மேங்கோ யோகர்ட் என்று குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். கிராமங்களில் மாம்பழம் சாப்பிட்ட பிறகு அதன் கொட்டையை அடுப்பில் சுட்டு மேல்தோல் உரிந்த பிறகு உள்ள சதை பகுதி பக்குவமாக வெந்து இருக்கும். அதை சாப்பிடும் போது அந்த விதை மிகவும் துவற்பாக இருக்கும் அதை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் நெல்லிக்காய் சாப்பிட்ட பிறகு இனிப்பதுபோல் இனிக்கும்.

வட மாநிலப் பண்டிகைக் காலங் களில் அனைவராலும் தேடப்படும் போஜனதிகா-ரொட்டி சிற்றுண்டி மாம்பழத்தால் செய்யப்படுகிறது.

செயற்கை உணவுப் பிடியில் சிக்கி தவிக்கும் மனிதர்கள் மாம்பழத்தை சுவைத்து உண்ணாமல் பாட்டில்களிலும், அட்டை பெட்டிகளிலும் அடைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட மாம்பழச் சாறைப் பருகுவது உடல் உறுப்புகளுக்கு நல்லதல்ல.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in