

கியூபா ஒரு பழமையான நாடு. 4000 ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஸ்பெயின் நாட்டின் கீழும் பிறகு அமெரிக்க ஆதிக்கத்தின் கீழும் காலனி நாடாக இருந்து 1902இல் சுதந்திரம் பெற்று தனி நாடு ஆனது.
இங்கே பல இன மக்கள் வாழ்கிறார்கள். இலத்தீன் அமெரிக்க கலாச்சாரம் பரவி உள்ளது. அமெரிக்கா – ரஷ்யா பனிப் போர்க் காலத்தின்போது ரஷ்யாவின் பக்கம் நின்றதால் ரஷ்ய உறவு வலுப்பட்டது; ரஷ்ய கலாச்சாரம் வேரூன்றியது. இத்துடன் பல நூற்றாண்டுகளாக இந்திய வம்சாவளியினரும் வாழ்கின்றனர்.
17-வது தீவு: வட கரிபியன் கடலில் சுமார் 4200 தீவுகள் உள்ளன. இவற்றில் பிரதான தீவு - கியூபா. இத்துடன் நான்கு துணைத் தீவுகள் உள்ளன. அவை,கொலொரடஸ், சபானா, ஜார்டைன்ஸ், கேனர்ரியோஸ். இவை எல்லாம் கியூபாவில் அடக்கம்.
சுமார் 1250 கி.மீ. நீளம் கொண்ட, உலகின் 17-வது பெரிய தீவான கியூபாவில், சீராமஸ்ட்ரா மலை, பிகோ டர்கினோ சிகரம் உள்ளது. ஆண்டு முழுதும் வட கிழக்கு நோக்கி காற்று வீசும். நவம்பர் முதல் ஏப்ரல் வரை கோடைக்காலம். மே – அக்டோபர் மழைக் காலம். சராசரி வெப்பம் 21டிகிரி செல்ஷியஸ். அடிக்கடி சூறாவளிக் காற்று வீசும். குறிப்பாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மிக அதிகம். ஈரக் காடுகள், உலர் காடுகள், பைன் காடுகள், சதுப்பு நிலங்கள் காணப்படுகின்றன.
கடந்த இரண்டாண்டுகளாகப் பொருளாதாரத்தில் கடும் பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் கியூபாவும் ஒன்று. மனித உரிமைகள் மற்றும் அரசியல் சுதந்திரங்கள் மறுக்கப்படுகிற நாடாக கியூபா மாறி வருவது ஒரு வரலாற்றுச் சோகம்.
கியூபாவில் பரவலாகப் பேசப்படும் மொழி - ஸ்பெயின். இந்நாட்டின் தேசியப் பறவை ‘கியூபன் ட்ரோகோன்’; தேசிய மலர்: மரிபோசா.
இந்த வாரக் கேள்வி:
‘காலிப்சோ’ Calypso என்றால் என்ன?
(பயணிப்போம்)
- கட்டுரையாளர்: கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி; தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com