வாழ்ந்து பார்! - 36: அல்லி ஏன் தோற்றார்?

வாழ்ந்து பார்! - 36: அல்லி ஏன் தோற்றார்?
Updated on
2 min read

அல்லி சிறந்த பேச்சாளர். பள்ளி அளவில் நடைபெறும் பேச்சுப் போட்டிகள் அனைத்திலும் அவரே முதற்பரிசை வெல்வார். பல வேளைகளில் முன்தயாரிப்பு இல்லாமலேயே நன்கு பேசியிருக்கிறார். அதனால் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிக்கு அவரைப் பள்ளியிலிருந்து அனுப்பினர்.

முன்தயாரிப்பு இல்லாமல் அங்கு சென்றார். நன்கு பேசினார். அங்கும் தானே முதற்பரிசை வெல்வோம் என்று நம்பினார். ஆனால், முடிவு வெளியானபோது, அவர் தரவரிசைப் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்தார் என்றார் எழில். இதில் உள்ள சிக்கல் என்ன? என்று வினவினார்.

அல்லி மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் வெல்லாதது என்றாள் பாத்திமா. இல்லை. அங்கும் தானே வெல்வோம் என்று நம்பியது என்றான் கண்மணி. அதுவும் இல்லை. முன்தயாரிப்பு இல்லாமல் சென்றதுதான் சிக்கல் என்றான் அருளினியன். ஏன் எவ்வாறு கூறுகிறாய்? என்று சற்று எரிச்சலாகக் கேட்டாள் கண்மணி.

சிக்கலுக்கு தீர்வு என்ன? - போட்டியில் வெல்லாதது, தானே வெல்வோம் என்ற நம்பிக்கையில் முன்தயாரிப்பு இல்லாமல் சென்றதன் விளைவு. எனவே முன்தயாரிப்பு இல்லாமல் சென்றதுதான் சிக்கல் என்று விளக்கினான் அருளினியன். அருமை என்று பாராட்டிய எழில், ஒன்றை அடைவதற்குத் தடையாக இருப்பதே சிக்கல் ஆகும்.

எனவே சிக்கலைத் தீர்க்க முதலில் சிக்கலையும் விளைவையும் பிரித்தறிய வேண்டும். பின்னர் சிக்கலை வரையறுக்க வேண்டும் என்று விளக்கினார். இதுதான் சிக்கலைத் தீர்த்தலின் முதற்படி என்று ஆசிரியர் எழிலின் குரலைபோல தனது குரலை மாற்றிப்பேசினான் அழகன். அவனைப் புன்னகையோடு பார்த்தார் எழில். வகுப்பில் சிரிப்பு மலர்ந்தது.

முன்தயாரிப்பு இல்லை என்ற சிக்கலை எவ்வாறெல்லாம் தீர்க்கலாம்? என்று வினவினார் எழில். போட்டித் தலைப்பிற்கு உரிய உரையை ஒரு வாரத்திற்கு முன்னரே தயாரித்து, பேசிப்பழகலாம் என்று கலந்துரையாடலைத் தொடங்கினாள் நன்மொழி. சில போட்டிகளில் அங்கு போன பின்னர்தான் தலைப்பே தருவார்கள். அப்பொழுது என்ன செய்வது? என்று வினவினான் முகில். எல்லோரும் திகைத்தனர்.

அதுவும் ஒரு வழி: இதற்குத்தான் பாடப்புத்தகங்களுக்கு அப்பாலும் பல்வேறு புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றார் எழில். அவ்வாறு வாசித்தால்? என்று வினவினாள் இளவேனில். பல செய்திகளை அறிந்திருப்பாய். அவற்றைப் பொருத்தமான வகையில் பேசலாம் என்றார் எழில்.

தனக்கு முன்னர் பேசுகிறவர்களின் கருத்துகள் சிலவற்றை ஏற்று அவர்களைவிட விரிவாகவும் சிலவற்றை மறுத்தும் பேசலாம் என்றாள் மணிமேகலை. அதுவும் ஒரு வழி என்று கூறிய எழில், சிக்கலைத் தீர்த்தலின் இரண்டாவது படி, சிக்கலை வெவ்வேறு கோணங்களில் ஆராய்ந்து, அதனைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகளை அறிதல் என்று விளக்கினார்.

மூன்றாவது படி என்ன? என்று வினவினாள் தங்கம். அந்த வாய்ப்புகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தல் என்றவாறே எழிலைப் பார்த்தாள் மதி. அருமை என்றார் அவர். மதியின் முகத்தில் பெருமிதம் பூத்தது. நாங்காவது படி? என்று வினவினான் தேவநேயன். தேர்ந்தெடுத்த வாய்ப்பைச் செயல்படுத்துவது என்றாள் அருட்செல்வி.

ஒரு வேளை அந்த வாய்ப்பும் தோல்வியடைந்தால்? என்று வினவினான் காதர். அதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். அதுதான் ஐந்தாவது படி. பின்னர் அதற்கான மாற்றுவழியைச் சிந்தித்து தொடர்ந்து முயலவேண்டும் என்றார் எழில்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in