கழுகுக் கோட்டை 06: பல்லக்குத் தூக்கிகளான எம கிங்கரர்கள்

கழுகுக் கோட்டை 06: பல்லக்குத் தூக்கிகளான எம கிங்கரர்கள்
Updated on
2 min read

சாமியார் உண்டாக்கிய சாம்பிரானிப் புகை மூட்டத்தில் குணபாலன் மட்டும் சிக்கவில்லை. அவனைக் கைது செய்து அழைத்து வந்த வீரர்கள் மற்றும் அவர்களின் தலைவன் என அனைவருமே அந்தப் பெரும் புகையில் சிக்கி, மூச்சுத் திணறி மயங்கி வீழ்ந்தார்கள். குணபாலனுக்கோ, தான் மயங்கி விழுந்திருந்தாலும் தனது உயிர் அங்கேயே போய்விட்டதாக ஒரு தோற்றம் வந்தது. அதுமட்டுமல்ல, தன்னை இரண்டு எம கிங்கரர்கள் கைத்தாங்கலாகத் தூக்கிச் சென்று ஓர் அழகான பல்லக்கில் படுக்க வைத்ததைப் போல உணர்ந்தான்.

அந்தப் பல்லக்கை நான்கைந்துப் பேர் சேர்ந்துத் தூக்கிச் செல்வதும், அப்படி அவர்கள் தூக்கிச் செல்கையில் அந்தப் பல்லக்கு வலது, இடது என இருபுறமும் ஆடியதும் தெரிந்தது. சில நேரங்களில் மேலும் கீழுமாகவும் ஆடியது. மேலும் அந்தப்பல்லக்கு மேல் நோக்கியே சென்றுகொண்டிருந்ததால், பூமியிலிருந்து மேலோகத்துக்குத்தான் தன்னைக் கொண்டு செல்கிறார்கள். அதுவும் எமலோகத்துக்கு என்பதை மயக்கத்திலும் உறுதி செய்தான் குணபாலன்.

எவ்வளவு நேரம் அப்படித் தூக்கிச் சென்றார்கள் என்று குணபாலனுக்குத் தெரியாது. ஆனால், ஓரிடம் வந்ததும் பல்லக்கின் ஆட்டம் நின்றது. பல்லக்கைப் பல்லக்குத் தூக்கிகளின் தோள்களிலிருந்து எடுத்துக் கீழே வைப்பதைப் போல உணர்ந்தான். ஆஹா, எமலோகம் வந்துவிட்டது போலும். அடுத்து சொர்க்கமா? அல்லது நரகமா? என்று எமதர்ம ராஜா தீர்மானிக்கும் இடம்தான் என்று நினைத்தான்.

இதுவரை தான் செய்த நல்ல செயல்களைக் கருத்தில் கொண்டு, தனக்குச் சொர்க்கம்தான் வழங்கப்பட வேண்டும். அதை விடுத்து எண்ணெய்க் கொப்பரையில் தள்ளச் சொன்னால், தனக்கான நியாயத்தைப் பெற எமனாக இருந்தாலும் தர்மத்தைக் காக்க தானே வாதாட வேண்டியதுதான் என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டான்.

அப்போது யார்யாரோ பேசும் குரல்கள் குணபாலனுக்குக் கேட்டன. கூகைச் சிறையில் என்னைத் தள்ள வந்த வீரர்களும் என்னோடு இறந்து என்னுடனேயே வந்துவிட்டார்கள் போல என்று நினைத்தான் குணபாலன். யாரோ கொஞ்சம் தண்ணீர் எடுத்து வாருங்கள் என்றது நன்றாகக்கேட்டது.

அடுத்தச் சில நிமிடங்களில்‘பொளிச்’சென்று தண்ணீர் குணபாலனின் முகத்தில் தெளிக்கப்பட்டது. அதனால் மயக்கம் தெளிந்த குணபாலன் மிகுந்த சிரமத்துடன் கண்களைத் திறந்தான். உடனே, ’எங்கே என்னைக் கொண்டு வந்துள்ளீர்கள்? இது சொர்க்கமா... அல்லது நரகமா?’ என்றதும் கூடி நின்ற அனைவரும் அவனைப் பார்த்துப் பலமாகச் சிரித்தனர்.

கூட்டத்திலிருந்து முன்வந்த ஒருவர், ‘தம்பி, நீ சொர்க்கத்துக்குச் செல்ல வேண்டியவன்தான். ஆனால், அதற்கான நேரம்தான் இன்னும் வந்துவிடவில்லையப்பா.’ என்றார். அவரை எங்கோ பார்த்தது போல் உணர்ந்தான் குணபாலன். எங்கே பார்த்தோம் என்று யோசித்தவனுக்குச் சிறிது நேரத்தில் அவரை நினைவுக்கு வந்தது.

ஓ, அந்தப் பல்லக்கில் வந்த சாமியார் அல்லவா இவர்? என்று அவன் யோசித்ததைப் புரிந்துகொண்டவராய் அருகில் வந்த சாமியார், ‘தம்பி, உன்னை மரணத்திலிருந்து தற்காலிகமாகக் காப்பாற்றிய நாங்கள் யார் என்பதுதானா உனது கேள்வி இப்போது?’ என்றதும், ‘அடடா, நம் மனதில் உள்ளதைப் படிக்கும் ஞானியல்லவா இவர்!’ என்று ஆச்சரியப்பட்டான் குணபாலன்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக, ‘ஐயா, எனது உயிரைக் காப்பாற்றிய தங்கள் அனைவருக்கும் எனது நன்றி. தாங்கள் யார்? இந்த உதவிக்கு ஈடாக நான் என்ன செய்யப் போகிறேன்?’ என்றான் குணபாலன். அதற்கு அந்தச் சாமியார், ‘குழந்தாய், நான் சாமியாரும் அல்ல. இவர்கள் எனது சீடர்களும் அல்ல. நாங்கள் அனைவரும் நாடக நடிகர்கள். ஊர் ஊராகச் செல்லும் நாடோடிகள். உன்னைப் பார்த்தால் நல்லவன் போல் தெரிந்தது. உனது உயிரைக் காக்க உதவினோம். இந்த உதவிக்கு ஈடாக எதையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

அப்படியும் நீ எங்களுக்கு பதில் உதவி செய்துதான் தீர வேண்டும் என்று இருந்தால், நாம் மறுபடியும் சந்தித்தால், அது பற்றிப் பேசுவோம். மேலும் திருச்சேந்தியின் ஆட்களை ஏமாற்றி, கொஞ்ச தூரம்தான் உன்னைத் தூக்கிக் கடத்தி வந்தோம். இதற்கு மேல் நீயாகவேதான் தப்பிச் செல்ல வேண்டும். இன்னும் சிறிது நேரத்தில் உன்னைப் பிடித்து வந்த வீரர்களுக்கும் மயக்கம் தெளிந்துவிடும். அதன் பின் உன்னைத் தேடத் தொடங்குவார்கள். அதற்குள் நீ தொலைதூரம் தப்பிச் சென்றுவிட வேண்டும். நாங்கள் சென்று வருகிறோம்.’ என்றார்.

அப்போது அந்திப் பொழுது நெருங்கிவிட்டிருந்தது. சாமியார் வேடமணிந்த கூட்டத்தினர் குணபாலனிடம் விடைபெற்றுச் சென்று மறைந்தனர். அப்போது அவர்கள் சென்ற எதிர் திசையிலிருந்து சிலர் வருவது போன்ற சத்தம் கேட்டது.

(தொடரும்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in