மாறட்டும் கல்விமுறை - 5: குழந்தைக்கு கைபேசி கிடைத்தால் என்னவெல்லாம் செய்யும்?

மாறட்டும் கல்விமுறை - 5: குழந்தைக்கு கைபேசி கிடைத்தால் என்னவெல்லாம் செய்யும்?
Updated on
2 min read

“மனைவி, தலைவி” ஆகிய சொற்கள் மனை, தலை ஆகிய அடிச்சொற்களோடு “வி” என்னும் விகுதி சேர்ந்து வருவதால் உருவாகின்றன. மனை, தலை ஆகிய சொற்களின் பொருள்கள் அவற்றோடு நேரடி தொடர்புகொண்டுள்ளன. அதுபோல் கல்வி என்ற சொல்லின் அடிச்சொல் கல் என்றால் அது எப்படி கல்வியோடு தொடர்புகொள்கிறது? கல் என்பது தரையில் கிடக்கும் கல்தானா இல்லை அதற்கு வேறு பொருள் இருக்கிறதா? பார்ப்போம்.

கல்வி என்ற சொல்லின் பொருளை Educate என்ற ஆங்கில வார்த்தையின் வேர்ச்சொல்லோடும் அதன் பொருளோடும் ஒப்பிட்டுப் பார்ப்போம். “To bring up, to lead out” என்பதுதான் அதன் வேர்ச்சொல் விளக்கம். வெளிக்கொணர்வது என்று பொருள். அப்படியானால் கல்வியில் உள்ள கல் நமக்கு என்ன சொல்கிறது? கல்லை நாம் தோண்டி எடுக்க வேண்டும் இல்லையா? எனவே “தோண்டி எடுப்பது கல்வி” என்று வரையறை கொள்ளலாம்.

இந்த வேர்ச்சொல் விளக்கத்தை நாம் ஏற்றுக்கொள்ளும்போது நம்முன் பெரிய கேள்வியொன்று எழுகிறது. வெளியே கொண்டுவர வேண்டுமானால் அல்லது தோண்டியெடுக்க வேண்டுமானால் ஏதோவொன்று புதைந்திருக்க வேண்டும் அல்லவா? அப்படியானால் குழந்தைகளிடம் அல்லது மாணவர்களிடம் புதைந்திருப்பதுதான் என்ன?

குழந்தைகளிடம் புதைந்திருப்பது என்ன? - இந்தக் கேள்வி குழந்தைகளைக் கூர்ந்து கவனிக்க, அவர்தம் செயல்களை அவதானிக்கத் தூண்டியது. குழந்தைகள் பல நேரங்களில் யாருடைய உதவியும் இல்லாமலே சுயமாகக் கற்றுக் கொள்வதைக் காணமுடிந்தது.

இரண்டு வயதுக் குழந்தை ரிமோட்கன்ட்ரோலை பயன்படுத்தி தொலைக்காட்சி யில் விரும்பிய அலைவரிசையை ரசிக்கக் கற்றுக் கொண்டுள்ளது. பெரியவர்கள் “கற்றுக்கொடுக்காமலே” குழந்தைகள் இத்திறனைப் பெறுகிறார்கள் என்பது மிகமிக முக்கியம்.

வீட்டில் குழந்தைகள் இல்லாத வாசகர்கள் baby’s escape என்று கூகுளில் தேடினால் கிடைக்கும் காணொளிகளைப் பார்க்கலாம். குழந்தைகள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து விரும்பும் இடத்திற்குச் செல்லும் முறையைக் கூர்ந்து கவனியுங்கள். கீழ்வரும் வினாக்களின் அடிப்படையில் அச்சூழலை அலசுங்கள்.

1. பெரியவர்கள் யாராவது அந்த வழியைப் பின்பற்றி இடம் மாறுவதை குழந்தை கண்டுள்ளதா?

2. இந்த வழியாகத்தான் வரவேண்டும் என்று யாராவது சொல்லிக்கொடுத்தார்களா?

3. அப்படியானால் அவ்வழியைக் குழந்தை கள் கண்டுபிடித்தது எப்படி?

4. எதற்காக இருக்கும் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்குச் செல்ல வேண் டும்?

5. அவ்வழியை யோசிப்பதற்கு ஏதேனும் படிகள் உள்ளனவா?

6. அப்படிகள் எல்லாக் குழந்தைகளுக்கும் ஒன்றுபோல் உள்ளதா?

7. எல்லா குழந்தைகளுக்கும் இந்தத் திறமை இருக்கிறதா?

8. எந்தச் சூழலில் இத்திறமை வெளிப்படுகிறது?

குழந்தைகள் சுயமாகக் கற்றுக்கொள்ளும் எந்தச் சூழலுக்கும் இக்கேள்விகள் பொருந்தும்.

உண்மையான கற்றல்முறை

# குழந்தைகள் பெரியவர்களைவிடச் சிறப்பாக கைபேசியைப் பயன்படுத்துவதை நாம் பார்த்திருப்போம். இது சுயக்கற்றலுக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. கைபேசி கிடைத்ததும் குழந்தை என்னவெல்லாம் செய்கிறது என்பதை பார்ப்போம்:

# ஒரு மகிழ்ச்சியான அனுபவம் ஏற்படு கிறது. (கார்ட்டூன் படம் அல்லது கைபேசி யிலுள்ள ஒரு செயலியை துழாவுகிறது)

# அதை மீண்டும் அனுபவிக்க நினைக் கிறது. (கசப்பான அனுபவமாக இருந்தால் அந்தப் பக்கமே வராமல் நழுவிப் போய்விடுவதை நாம் பார்க்கலாம்.)

# பிரச்சினைகள் எழுகின்றன (ரிமோட்டுக்காக கையை நீட்டினால் பெரியவர்கள் தர மறுக்கிறார்கள். கிடைத்தாலும் எந்தப்பொத்தான் என்று தெரியாமல் குழந்தைதவிக்கிறது. கைபேசியில் எல்லா செயலி யும் ஒன்று போல் செயல்படுவதில்லை. ஒவ்வொன்றையும் அழுத்தி, விரித்துப் பார்க்க வேண்டியுள்ளது.)

# இதுவாக இருக்குமோ அதுவாக இருக் குமோ என்று தீர்வுகளை குழந்தை யோசிக்கிறது.

# பொருத்தமானதைக் கண்டுபிடிக்கிறது.

l ஓரிருமுறை செய்து உறுதிப்படுத்துகிறது.

# அது குழந்தையின் அறிவாக மாறுகிறது.

இதுவே குழந்தைகளின் பொதுவான கற்றல் முறை. எனவே இந்தக் கற்றல் முறையைக் கூர்மைப்படுத்துவதும் செழுமைப்படுத்து வதுமே கல்வி என வரையறுக்கலாம்.

- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை; தொடர்புக்கு: rajendran@qrius.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in