

மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களுக்கும் துரியோதனன் முதலிய நூற்றுவருக்கும் இடையே பெரும்போர் நடந்தபோது இருதரப்புப் படைகளுக்கும் உணவு வழங்கியவன் உதியஞ் சேரலாதன் என்ற சேரமன்னன் என புறநானூற்று பாடலில் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிட்டுள்ளார்.
புறநானூறு தெரிவிக்கும் இந்த செய்தி சிலப்பதிகாரத்திலும் இடம்பெற்றுள்ளது. மதுரை மாநகரம் கண்ணகியின் கோபத்தால் தீக்கிரையான பிறகும் கோபம் தணியவில்லை. அப்போது பாண்டிய மன்னனின் குலதெய்வமான மதுராபதி வந்து, பாண்டியன், கோவலன் இருவரும் தவறு செய்யாதவர்கள். உயர்ந்த குடியில் பிறந்த மன்னர்கள் தவறான காரியத்தைச் செய்யமாட்டார்கள்.
தன் கையைத் தானே வெட்டிக்கொண்டு நீதி வழங்கிய பொற்கைப் பாண்டியன், ஒரு புறாவுக்காக தான் துலாக்கோல் ஏறிய சோழமன்னன் சிபி சக்கரவர்த்தி, கன்றை இழந்த பசுவுக்கு நேர்ந்த துன்பத்தை நீக்கிய மனுநீதிசோழன், பாரதப்பெரும்போரில் இருபெரும் படைகளுக்கும் சோறு வழங்கிய உதயஞ்சேரலாதன் என்று ஒரு பட்டியலைத் தருகிறது.
7 வகை சோறு: குக்கரில் சோறு வைத்து சாப்பிட்டு கஞ்சி என்பதை அறியாத தலைமுறை நம்மிடம் இருக்கின்றது. பட்டினபாலையில் சோறு வடித்த கஞ்சி ஆற்று நீர் போல ஓடியது என்பதை
‘‘சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
யாறு போலப் பரந்து ஒழுகி”
என வருணிக்கிறது.
சங்கத்தமிழரிடம் எத்தனை வகையான சோறு இருந்தது என்பதை அறிந்துகொள்வோம்.
ஊன்சோறு - ஊனும் சோறும்
கொழுஞ்சோறு - கொழுப்பு நிணம் கலந்தது
செஞ்சோறு - சிவப்பு அரிசி சோறு
நெய்ச்சோறு - நெய் கலந்த சோறு
புளிச்சோறு - புளிக்குழம்பு கலந்த சோறு
பாற்சோறு - பால் கலந்த சோறு
வெண்சோறு - வெள்ளை அரிசி சோறு
அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்ட அவல், பொரி இரண்டையும் பாலோடு சேர்த்து சாப்பிடும் வழக்கம் இருந்தது. அரிசியால் தயாரிக்கப்பட்ட ஆப்பம், இடி ஆப்பம் , பிட்டு, கும்மாயம், இட்டளி, தோசை போன்ற உணவு வகைகள் பற்றிய குறிப்புகள் இலக்கியத்திலும் கல்வெட்டிலும் காணப்படுகின்றன.
இட்டளி டூ இட்லி: இட்டளி என்னும் பலகாரம் தமிழ்நாட்டின் உணவாகவே வெளியில் அறியப்படுகின்றது. இடு முதல் நிறையடியாகப் பிறந்த சொல் இது. இடல் என்ற தொழில்பெயர் பின்னர் இகர விகுதி பெற்று இட்டளி ஆனது. இது இட்டலி எனவும் படும். பின்பு பேச்சுவழக்கில் இட்லியாக மாறிப்போனது. திருப்பதி கோவிந்தராச சுவாமி கோவில் இரண்டாம் பிரகாரம் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டில் கோயில் நைவேத்திய பட்டியலில் இட்டளிப்படி 1 என்ற குறிப்பு உள்ளது.
சோறு என்பதற்கு அடிசில், அழினி, கூழ், அவிழ் கொன்றி, நிமிரல், புழுங்கல், பொம்மன், மிதவை என பல சொற்கள் இருந்தன. இன்று சாதம் என்றே சொல்கின்றனர்.
சங்ககால ஔவை, அதியமான் நெடுமான் அஞ்சியை சிறு சோற்றாலும் நனி பல கலத்தன், பெருஞ்சோற்றாலும் நனி பல கலத்தன் என்கிறார். இதனால் சோறு சிறுசோறு, பெருஞ்சோறு என வழங்கப்பட்டிருப்பது தெரிகிறது.
சொல் என்பது நெல் என்னும் பொருளுடையது. சொல்லாகிய நெல்லின் அரிசியால் ஆக்கப்பட்டதனார் சொன்றி என்றனர். பொதுமக்கள் சோறு என்று வழங்கினர்.
நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி
(பெரும்பாண் 131)
குறந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றி
(பெரும் 193)
ஏற்றுக உலையே ஆக்குக சோறே
(புறம் 172)
சோறு என்னும் சொல் பயன்படுத்தி வந்ததை இலக்கியத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
(தொடர்ந்து ருசிப்போம்)
- கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேல்நிலை பள்ளி, வெலக்கல்நத்தம், திருப்பத்தூர்; தொடர்புக்கு: devavino86@gmail.com