

பங்குச்சந்தையில் ஆபத்து குறைவான முதலீட்டு திட்டம் எஸ்ஐபி (SIP). Systematic Investment Plan என்பது இதன் விரிவாக்கம் ஆகும். அதிக லாபம் தரும் முதலீடாகவும் இது விளங்குகிறது. மாதந்தோறும் சீட்டு பணம் கட்டி சேமிப்பதைப் போல, பங்குசந்தையில் சேமிப்பதே எஸ்ஐபி எனலாம்.
இந்த திட்டத்தில் வாரந்தோறும், மாதந்தோறும் அல்லது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக செலுத்த வேண்டும். ஒரே அளவிலான தொகையை முதலீடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அதன் அளவை உயர்த்தலாம். ஆனால், குறைந்தப்பட்சம் 6 மாதங்கள் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச கால வரம்பு இல்லை.
ரூ.500-ல் ஆரம்பிக்கலாம்: எஸ்ஐபி முதலீட்டை பொறுத்தவரை, குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கலாம். ரூ.100-ன் மடங்காக முதலீட்டு தொகை இருக்கலாம். அதிகபட்ச தொகை முதலீட்டு தொகைக்கான வரம்பு எதுவும் இல்லை. சிறிய தொகை என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தில் பெற்றோர் இணையலாம். குழந்தைகளின் உயர்கல்வி, தொழில், திருமணம் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு சேமிக்கலாம். சிறுக சிறுக செய்யப்படும் இந்த முதலீடு பின்னாளில் பெரிய தொகையாக மாறும் என்பதால் இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
எப்போது தேவை? - நமது வருமானத்தில் 20 சதவீதத்துக்கும் குறைவான நிதியை மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்வது நல்லது. அதில் 10 சதவீதத்தை எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் வைத்திருக்கும் எஸ்ஐபி திட்டங்களில் போடலாம். பங்குச்சந்தை, பரஸ்பர நிதி, கடன் பத்திரம், தங்க பத்திரம், வெளிநாட்டு நிதிகள் என எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம்.
நாம் செலுத்தும் பணத்துக்கு ஏற்றவாறு யூனிட்டுகள் வாங்கப்படும். தேவைப்படும்போது அந்த யூனிட்டுகளை விற்றால், பணமாக நமது வங்கி கணக்கில் வந்துவிடும். இந்த முதலீடுகள் எப்போதும் நமது நிதி இலக்கை நோக்கியதாக இருக்க வேண்டும். குறிப்பாக, நமக்கு பிற்காலத்தில் தேவைப்படும் நிதியின் அளவைப் பொறுத்ததாக இருக்க வேண்டும். உதாரணமாக உயர்க்கல்வி, வீடு வாங்குவதற்கு, வெளிநாடு செல்வதற்கு, திருமணத்திற்கு என ஏற்றவாறு முதலீடு செய்ய வேண்டும்.
வங்கி சேமிப்பை விட சிறந்தது: எஸ்ஐபி முதலீடு ஏனெனில் வங்கியின் நிரந்தர வைப்பு, தொடர் வைப்பு, காப்பீடு, கடன் பத்திரம், தங்கம் ஆகியவற்றை காட்டிலும் சிறந்தது. வங்கி, தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிகபட்சமாக 8 சதவீத வட்டி கிடைக்கிறது. ஆனால் அந்த வட்டி விகிதத்தால், நாட்டின் பணவீக்கத்தை வெல்ல முடிவதில்லை. இதனால் கஷ்டப்பட்டு சேமித்தாலும், பிற்காலத்தில் பலன் கிடைப்பதில்லை. அந்த பணத்தின் மதிப்பு குறைந்துவிடுகிறது.
அதேவேளையில் எஸ்ஐபி மூலமாக சேமித்தால் பணவீக்கத்தை விஞ்சிய வட்டிவிகிதம் கிடைக்கிறது. இதன் மூலம் நமது முதலீடு ஓரளவுக்கு நல்ல லாபத்தை கொடுக்கிறது. எஸ்ஐபி திட்டங்களில் அதிகபட்சமாக 12 சதவீதம் வரை வட்டிகிடைக்கிறது. அதிலும் நீண்டகால முதலீட்டை விரும்புவோருக்கு எஸ்ஐபி அதிகபட்ச முதிர்வு தொகையை தருகிறது.
இதில் சிறிய அளவில் அபாயமும் இருப்பதால் பங்குச்சந்தை வல்லுநர்களின் ஆலோசனை பெறுவது அவசியமாகிறது.
(தொடரும்)
- கட்டுரையாளர் தொடர்புக்கு : vinoth.r@hindutamil.co.in