தயங்காமல் கேளுங்கள் - 34: ‘ட்டூ மச் தைராய்ட்’ என பயமா?

தயங்காமல் கேளுங்கள் - 34: ‘ட்டூ மச் தைராய்ட்’ என பயமா?
Updated on
1 min read

நல்ல வெயிட்டா இருந்த பொண்ணு திடீர்னு இளைச்சுட்டே போறாளேன்னு டாக்டர்கிட்ட போனோம்...டெஸ்ட் எடுத்துப் பாத்துட்டு ட்டூ மச் தைராய்ட்னு டாக்டர் சொல்லிட்டாரு. இன்னும் சில டெஸ்ட்டுகள் வேற எடுக்கணும், ட்ரீட்மென்ட் தொடர்ந்து எடுக்கணும்னு அவர் எழுதிக் கொடுத்திருக்காரு. கீர்த்திக்கு இந்த தைராய்டால பெரிய பாதிப்பு எதுவும் வருமா டாக்டர்? இந்த வருஷம் டென்த் போறா... ரொம்பவும் பயமா இருக்கு என்று பதற்றத்துடன் கேட்டுள்ளார் கீர்த்தியின் தாய்.

கீர்த்தியின் தாய் கவலைப்படுவது நியாயம் தானே? அடுத்தடுத்து வகுப்புகள், பரீட்சைகள் என இறுக்கிப் பிடிக்கும் பத்தாம் வகுப்பிற்குள் நுழைகிறது குழந்தை. அப்படி இருக்கும்போது திடீரென ஒரு பாதிப்பு, அதற்கு இன்னும் பல பரிசோதனைகள், சிகிச்சைகள் என்றால் யாருக்கும் கலக்கமாகத்தானே இருக்கும்? அதுவும் 'ட்டூ மச் தைராய்ட்' என மருத்துவர் சொன்னது இன்னும் அதிக கவலையை இவருக்கு ஏற்படுத்தியிருக்கலாம். உண்மையில் அது என்ன ட்டூ மச் தைராய்ட் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு 'தைராய்ட்' என்றால் என்ன என்பது முதலில் தெரிய வேண்டுமல்லவா.

சகலமும் கட்டுப்பாட்டுக்குள்: நமது கழுத்தின் முன்பகுதியில் பட்டாம்பூச்சியின் வடிவத்தில் இருக்கும் ஒரு நாளமில்லா சுரப்பியைத்தான் தைராய்ட் சுரப்பி என்கிறோம். வெறும் 30 கிராம் எடைமட்டுமே உள்ள இந்தச் சிறிய சுரப்பிதான் நமது உடலின் பல்வேறு இயக்கங்களையும் கட்டுப்படுத்தும் ஒரு மாஸ்டர் கிளாண்ட்டாக விளங்குகிறது.

நமது உடலிலுள்ள அனைத்து செல்களின் வளர்ச்சிக்குத் துணைநிற்பது இதுவே. முக்கியமாக மூளை, நரம்புகள், இதயம், நுரையீரல்கள், சிறுநீரகங்கள், எலும்பு மற்றும் தசைகள், பெருங்குடல், இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவற்றின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் கட்டுப்படுத்துவது என பல காரியங்களைச் செய்வது தைராய்ட் சுரப்பிதான்.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், தைராய்ட் சுரப்பியின் ட்ரை அயோடோ தைரோனின் மற்றும் டெட்ரா அயோடோ தைரோனின் எனும் T3, T4 ஹார்மோன்கள்தான், ஒரு எஞ்ஜின் சீராக இயங்க உதவும் எஞ்ஜின் ஆயில் போல நம் அனைத்து உறுப்புகளையும் அதன் செல்களையும் சீராக இயங்கச் செய்கிறது.

பொதுவாக, வாகனத்தில் எஞ்ஜின் ஆயில் குறையும்போது வாகன பாகங்கள் வறண்டுபோய் இயங்கத் தடுமாறுவதும், அதிகப்படியான எண்ணெய் இருக்கும்போது கட்டுப்பாடில்லாமல் போக வாய்ப்புகளும் ஏற்படும் இல்லையா. அது போலவே, நமது டி3, டி 4 ஹார்மோன்களின் சுரப்பு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்போது உடல்உறுப்புகளின் இயக்கங்களும் கூடவோ (ஹைபர் தைராய்ட்) அல்லது குறையவோ (ஹைபோ தைராய்ட்) செய்கின்றன.

இந்த இரு நிலைகளுமே ஆண்களை விட பெண்களுக்குத்தான் சற்று அதிகம் காணப்படுகிறது. இதில் கீர்த்திக்கு ஏற்பட்டுள்ள தேவைக்கு அதிகம் சுரக்கும் ‘ட்டூ மச் தைராய்ட்’ நிலை ஹைபர்-தைராய்டிசம் அல்லது க்ரேவ்ஸ் டிசீஸ் (Graves' disease) என்று அழைக்கப்படுகிறது.

(ஆலோசனை தொடரும்)

- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in