

முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா என்று ஸ்ரேயா கோஷல் பாட, உடன் பாடிக்கொண்டே தன் புத்தகங்களுக்கு அட்டையிட்டுக் கொண்டிருந்தாள் குழலி.
நீரும் செம்புலச்சேறும் கலந்தது போலே கலந்தவளா? என்ற வரி வருகையில் சற்று கவனித்துவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்.
என் புத்தகங்களுக்கும் அட்டை போட்டுத் தாயேன் என்றவாறு சுடர் வந்தமர்ந்தான்.
குழலி: இந்தப் பாட்டைப் பலமுறை கேட்டிருக்கேன். ஆனா இந்த வரிய இப்ப தான் கவனிக்கிறேன். பாட்டைத் திரும்பப் போடுறேன். நீ சொல்றயான்னு பார்க்கலாம்.குழலி பாட்டை மீண்டும் இசைக்கவிட்டாள்.
சுடர்: நீ ஏதாவது ஒரு இலக்கியத்தைத் தொடர்புபடுத்தித்தான யோசிப்ப.. நானும் அதே பார்வையில கவனிக்கிறேன்...ம்... கண்டுபிடி... கண்டுபிடி என்று குழலி சிரிக்கிறாள். நீரும் செம்புலச்சேறும் கலந்ததுபோலே கலந்தவளா? என்ற வரி வந்ததும் பாடலை நிறுத்திவிட்டான் சுடர்.
சுடர்: இந்த வரிதான... நாம நேத்துப் பேசிக்கிட்டிருந்தோமே, யாயும் யாயும்னு தொடங்குற குறுந்தொகைப் பாட்டு. அதுல வர்ற மாதிரி இருக்கு.
குழலி: ரொம்ப சரியாச் சொன்ன சுடர். செம்புலப் பெயல்நீர்னு வர்ற உவமை.
சுடர்: ஆமா குழலி. உவமையால பெயர் பெற்ற புலவர்கள் பற்றிப் பேசிட்டிருந்தோம். நீ சொல்ற வரைக்கும் குறுந்தொகைன்னா ஒருத்தர் எழுதின நூலா இருக்கும்னு தான் நினைச்சிட்டிருந்தேன். அது பல புலவர்கள் எழுதின பாடல்களோட தொகுப்பு. அதுவும் வேறு வேறு காலங்கள்ல எழுதப்பட்டது. பா வகைகள வச்சும் அடி வரையறைகள வச்சும், பாடலோட தன்மைய வச்சும்தான் சங்கப் பாடல்களப் பிரிச்சுத் தொகுத்தாங்கன்னு அப்பதான் தெரிஞ்சது. ஆமா, இந்த வரியாலதான புலவர்க்கே பெயர் கிடைச்சது. அதுக்கு என்ன பொருள்னு சொல்லேன்.
குழலி: செம்புலம்னா செம்மண் நிலம். பெயல்னா மழை. செம்மண் நிலத்துல மழை பெஞ்சா என்னாகும்?, எது மழைத் தண்ணீரோட நிறம், எது மண்ணோட நிறம்னு பிரிச்சுச் சொல்ல முடியாத மாதிரி சிவந்து ஓடும் இல்லயா அந்த மழைத் தண்ணீ. அதுபோலக் காதல் வயப்பட்ட காதலன், காதலியோட மனங்களும் குணங்களும் அன்பால வேற வேறயாப் பிரிச்சுப் பார்க்க முடியாதபடி ஒன்றாகச் சேர்ந்திருச்சாம். இவ்வளவு அழகான உவமையச் சொன்னதால அவருக்குப் பேரும் உவமையால கிடைச்சது. இந்தப் பாட்ட சங்க இலக்கியத்தில தவிர்க்க முடியாத அகப்பாடலாச் சொல்வாங்க. அந்தக் காலம் எந்த வேறுபாடுகளும் இல்லாமக் காதலைக் கொண்டாடின காலமா இருந்திருக்கு. அதான் இவ்வளவு அகப்பாட்டுகள்.
சுடர்: ஓ... அதனாலதான் காதல் பாட்டுகள்ல இந்த உவமையப் பயன்படுத்தியிருக்காங்களா... குழலி, யாயும்னு சொல்றாங்களே அப்படின்னா...
குழலி: யாய்ன்னா, தாய்ன்னு பொருள். எந்தைன்னா என் தந்தை.
சுடர்: ஆமா யாய்னா அம்மான்னு சொன்னல்ல. யாய் தான் ஆயின்னு மாறிடுச்சோ. அம்மாவ ஆயின்னு கூப்பிடுற வழக்கம் இன்னும் இருக்கே... சில இடங்கள்ல பாட்டியக் கூட ஆயின்னு கூப்பிடுவாங்க.
குழலி: ஆமா சுடர். ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால பயன்படுத்தின சொல் இப்பவும் புழக்கத்துல இருக்குன்னு நினைக்கிறப்ப, நம்ம தமிழ் மொழி எவ்வளவு உயிர்ப்போட இருக்குன்னு தெரியுதில்ல..
சுடர்: இந்த மாதிரி இன்னும் உவமையால பெயர் பெற்ற புலவர்கள் பேரச் சொல்லேன். உவமைகளோட அழக நாமளும் பேசலாம்.
குழலி: உவமையால் பெயர் பெற்றோர்ன்னே ஒரு புத்தகம் இருக்கு. புலவர் கா. கோவிந்தன் எழுதியிருக்காரு. நான் சிலர் பேரச் சொல்றேன். அணிலாடு முன்றிலார், குப்பைக்கோழியார், ஓரேர் உழவனார் இப்படி நிறையப் பேரு இருக்காங்க. சரி சுடர், இன்னொரு நாள் அதைப் பத்திப் பேசவோம். இப்ப தேர்வுக்குப் படிக்கணும் என்று சொல்ல, சுடரும் கிளம்பினான்.
- கட்டுரையாளர்: தமிழ்த் துறை பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com