

தனியாக, குடும்பமாக, நண்பர்களோட போக என எல்லாரும் போகிற மாதிரி ஒரு இடம்தான் கோவா. இயற்கையை ரசிக்க, பொழுதுபோக்க, கொண்டாட என அத்தனையும் கொட்டிக்கிடக்கும் கோவாவுக்கு கொட்டித் தீர்க்கும் மழை நாளில் போய் சேர்ந்தோம்.
தெற்கு கோவா, மத்திய கோவா, வடக்கு கோவா என கோவாவையே மூன்றாக பிரிக்கிறார்கள். தெற்கு கோவா முழுக்க முழுக்க இயற்கை ரசிகர்களுக்கு என்றே உருவாக்கப்பட்டதோ என்றே தோன்றும். தெற்கு கோவாவில் உள்ள அகோண்டா என்ற இடத்திற்கு சென்றோம்.
அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் அற்புதமான இடம் அகோண்டா. கொட்டும் மழையிலும் அரபிக் கடலின் பேரிரைச்சல் கேட்டுக் கொண்டே இருந்தது. எந்தவித குப்பையும் இல்லாமல், வாகன சத்தங்கள் பெரிதும் கேட்காத அழகான ஒரு இடத்தில்தான் தங்கி இருந்தோம்.
பட்டாம்பூச்சி கடற்கரை: இதுவரை ஹோட்டல் அறைகளில் தங்கி இருந்தோம். இப்போதோ ஒரு வீட்டின் மாடியை நாள் கணக்குக்கு வாடகைக்கு எடுத்து தங்கினோம். இந்த இடத்தில், நாமே சமைத்துக் கொள்ளத் தேவையான அனைத்து பொருட்களும் இருந்தன.
அன்றைய தினம் பெரிதாக எங்கும் சுற்றிப் பார்க்கவில்லை. தங்கி இருந்த இடத்துக்கு அருகில் காலார நடந்து சென்று வந்தோம். இரவு சாப்பாட்டுக்கு சமைத்துக் கொள்ளத் தேவையான பொருட்களை வாங்கிவந்து சமைத்து சாப்பிட்டோம். வீட்டு சாப்பாட்டை நினைவுப்படுத்தியது மேகியும் முட்டையும்.
தெற்கு கோவாவில் கிட்டத்தட்ட எட்டுக்கும் அதிகமான கடற்கரைகள் இருக்கின்றன. பாலோலம் கடற்கரை, பாகா கடற்கரை, அகோண்டா கடற்கரை, பட்டர்ப்ளை கடற்கரைகள் பிரசித்தம். முதல் நாள் காலை நாம் தங்கி இருந்த அகோண்டாவில் இருந்து பட்டர்ப்ளை கடற்கரைக்கு சென்றோம். நாம் தங்கி இருந்த இடத்தில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் தான் அந்த கடற்கரை. மழையும் சேரும் சகதியும் அதிகம் இருந்ததால், கடற்கைக்கு செல்ல அதிக நேரம் எடுத்துக் கொண்டது.
வண்டியை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, கடற்கரை நோக்கி நடக்கத் தொடங்கினோம். மழை நின்றபாடில்லை. முழங்கால் அளவு தண்ணீர், போகப்போக முட்டிவரை வந்துவிட்டது. பொறுமையாக நிதானமாக நடந்து சென்றோம். கொஞ்ச தூரம் சென்றதும் மேடு, அதை கடந்துசென்றால் பாறைகள். கவனமாக காலடிஎடுத்துவைத்து மெதுவாகவே சென்றோம்.அரைமணி நேரத்துக்குப் பிறகு அந்த பிரம்மாண்டமான கடற்கரையை சென்றடைந்தோம்.
ரெண்டு பக்கமும் மிகப்பெரிய பாறைகள்,பாறைகள் மீது மரங்களும் செடிகளும். எதிரே ஆர்ப்பரிக்கும் கடல். அத்தனை ரம்மியமாக இருந்தது கடற்கரை. இதுபோன்ற கடற்கரைகளை இதுநாள்வரை திரைப்படங்களில் மட்டுமே பார்த்த எனக்கு அத்தனை வியப்பாக இருந்தது. அந்த பாறைகளின் மீது ஏறி பார்த்தால், கடற்கரை ஒரு பட்டாம்பூச்சி போல தெரியுமாம், அதனால் தான் இந்த கடற்கரைக்கு பட்டாம்பூச்சியின் பெயர் வந்திருக்கிறது.
தன்னந்தனியாக... மழையும் நிற்கவில்லை. அந்த மழையிலும் ஆறு வயது முதல் அறுபது வயது வரை எல்லோரும் இந்த கடற்கரையைத் தேடி வந்தனர். அதிக கூட்டம் இல்லை. எதுவும் செய்யவில்லை, கடலில் கால் நனைக்கவில்லை. அங்கேயே அந்த கடலின் அழகை ரசித்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து இருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் நான் மட்டும் தன்னந்தனியாக அந்த கடற்கரையில் அமர்ந்திருந்தேன். இது எதேச்சையாக நடந்ததுதான்.
ஆனால், இப்படி தன்னந்தனியாக யாரும் இல்லாத கடற்கரையில் இருக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அதை இயற்கை எனக்கு சாத்தியப்படுத்தியது. அதுதான் உண்மை. மழை கொஞ்சம் விட்டு, சூரியன் மறைய தொடங்கியதும்தான் கிளம்பினேன். இங்கு மனிதர்களைப் பார்ப்பதே கொஞ்சம் அரிதான ஒன்றுதான். ஆனால், வடக்கு கோவா அப்படி அல்ல, மனிதர்கள் நிரம்பி வழியும் கொண்டாட்டத்தின் இடம். அடுத்து வடக்கு கோவா செல்ல வேண்டும்.
- கட்டுரையாளர்: இதழியலாளர், கீழடி, கண்ணகி கோட்டம் உள்ளிட்ட தமிழ் பண்பாட்டு நிலப்பரப்புகளை ஆவணப்படம் பிடித்தவர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com