

பள்ளி முடித்து நல்ல கல்லூரியில் சேர்ந்து படிக்க நமது நாட்டில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் குறித்து பெற்றோர் ஒருவர் கேட்டிருந்தார். அவருக்கு கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு படிப்புகள் மற்றும் அதற்கான நுழைவுத் தேர்வுகள் குறித்து வழிகாட்டினோம். மேலும் நீங்கள் தெரிந்து கொள்ள நிறைய உள்ளது.
விவசாயம் என்பது கற்றோருக்கான பிரகாசமான துறையாக மாறியுள்ளது. வேளாண் துறையில், இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளுக்காக AIEA எனப்படும் All India Agriculture ICAR (Indian Council of Agriculture and Research) Delhi யினால் நடத்தப்படுகிறது. இதன் மூலம் அகில இந்திய அளவிலான ஒதுக்கீடு முறையில் நாட்டிலுள்ள வேளாண்மை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இடம் பெறலாம். மீதமுள்ள இடங்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் அந்தந்த மாநிலத்திலுள்ள வேளாண்மைக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம்.
அனைத்து விதமான இளங்கலை, முதுகலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு தற்போது CUET எனப்படும் Common University Entrance Test அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. தேசிய தேர்வு முகமையால் நாட்டிலுள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் சேர இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை கியூட்மதிப்பெண் மூலம் திருவாரூரில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தினில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளில் சேரலாம். விருப்பமிருப்பின் இதர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகங்களிலும் சேரலாம்.
விதவிதமாக சாப்பிட பிடிக்காதவர்கள் இருப்பார்களா? அதையே முறையாக கற்று, உயரிய சம்பளத்துடன் கூடிய பணியில் சேர விருப்பம் இருப்பின் உங்களுக்கான துறை கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசாங்கத்தால் நடத்தப்படும் தலை சிறந்த கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்களில் சேர NCHMJEE (National Council for Hotel Management Joint Entrance Exam) தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வானது மூன்று மணி நேரம் நடைபெறும். மத்திய அரசின் ஆன்லைன் தேர்வாகும். மத்திய அரசின் கேட்டரிங் டெக்னாலஜி நிறுவனம் தமிழ்நாட்டை பெருத்தவரை சென்னை தரமணியில் உள்ளது. மூன்று வருட 6 செமஸ்ட்டர்கள் கொண்ட பி.எஸ்சி., பட்டப்படிப்பிற்காக நடத்தப்படுகிறது. இதனை தவிர தனியார் கல்லூரிகளிலும் நம் மாநிலத்தில் நிறையவே கேட்டரிங் கல்லூரிகள் உள்ளன.
உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை
‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற
மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.
- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்