

தெற்காசியாவின் முதல் பெண் மருத்துவரும், பிரிட்டிஷ் பேரரசின் முதல் பெண் பட்டதாரிகளில் ஒருவருமான காதம்பினி கங்குலி (Kadambini Ganguly) பிறந்த தினம் இன்று (ஜூலை 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# பிஹார் மாநிலம் பகல்பூரில் (1861)பிறந்தார். தந்தை பள்ளித் தலைமைஆசிரியர். பிரம்ம சமாஜ சீர்திருத்தவாதியும்கூட. பெண் கல்வியை தீவிரமாக ஆதரித்தவர் என்பதால், மகளையும் நன்கு படிக்க வைத்தார்.
# பங்க மகிளா வித்யாலயா பள்ளியில் பயின்றார் காதம்பினி. இப்பள்ளி, பின்னர் பெத்துன் பள்ளியாகவும், கல்லூரியாகவும் வளர்ச்சி அடைந் தது. பள்ளிப்படிப்பு முடிந்ததும், கொல்கத்தா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இத்தேர்வில் வென்ற முதல் பெண் இவர்தான்.
# இவரது முனைப்பை பாராட்டும் வகையில் பெத்தூன் கல்லூரியில் 1879-ல்முதலில் இடைநிலைக் கல்வியும், தொடர்ந்து இளங்கலைப் பட்டப்படிப்பும் தொடங்கப்பட்டன. இங்கு இவரும், சந்திரமுகி பாசு என்பவரும் பட்டப்படிப்பை முடித்து இந்தியாவில் மட்டுமல்லாது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முதல் பெண் பட்டதாரிகள் என்ற பெருமையைப் பெற்றனர்.
# கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். 2-ம் ஆண்டு பயின்றபோது, தனது ஆசிரியரும் வழிகாட்டியுமான துவாரகாநாத் கங்குலியை திருமணம் செய்துகொண்டார். பிரம்ம சமாஜ சீர்திருத்தவாதியான அவர், மனைவியின் கல்விக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தார்.
# 1886-ல் ‘ஜிபிஎம்சி’ (பெங்கால் மருத்துவக் கல்லூரி பட்டதாரி) பட்டம் பெற்று, ஐரோப்பிய மருத்துவம் மேற்கொள்ள தகுதி பெற்றார். 1888-ல் லேடி டஃப்பரின் மகளிர் மருத்துவமனையில் ரூ.300சம்பளத்தில் மருத்துவராக நியமிக்கப்பட்டார்.
# நல்ல சம்பளம் என்றாலும் ஆண் மருத்துவர்களுக்கு சமமாக இவர்நடத்தப்படவில்லை. பலரும் இவரைமகப்பேறுக்கு உதவும் தாதியாகவேகருதினர். மேலும் பல வேதனை,தடைகளை எதிர்கொண்டார். ஆனாலும் மனம் தளராமல், லட்சிய வேட்கையுடன் செயல் பட்டார்.
# மருத்துவ உயர் கல்விக்காக, கணவரின் ஒத்துழைப்புடனும், பிரம்ம சமாஜத்தின் ஆதரவுடனும் 1893-ல் லண்டன் சென்றார். அங்கு ராயல் காலேஜ் ஆஃப் ஃபிசிஷியன்ஸ், ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் கல்லூரிகளில் பயின்றார். விரைவில் மேற்படிப்பை முடித் தார். மகப்பேறு, குழந்தை மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றார்.
# இங்கிலாந்து சென்று திரும்பிய பின் நிலைமை மாறியது. லேடி டஃப் பரின் மருத்துவமனையில் மூத்த மருத்துவராக நியமிக்கப்பட்டார். சிறிதுகாலம் தனிப்பட்ட முறையில் மருத்துவம் பார்த்தார். நேபாள மகாராணிக்குமருத்துவம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரது மருத்துவத்தில் மகாராணி குணமடைந்தார். இதையடுத்து அரசகுடும்பத்தினரின் சிறப்பு மருத்துவரானார்.
# மருத்துவர், 8 குழந்தைகளின் தாய் என்ற குடும்பப் பொறுப்போடு, பொதுசேவை, அரசியல், சமூகப் பணிகளிலும் ஈடுபட்டார். பெண்கள் முன்னேற்றத்துக்காக போராடினார். தென்னாப்பிரிக்க இந்தியர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கல்கத்தாவில் கூட்டங்கள் நடத்தினார்.
# இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது, அதன் மகளிர் பிரதிநிதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றிய முதல் பெண் என்ற பெருமை பெற்றார். இறுதிமூச்சு வரை மருத்துவத் தொழிலை மக்கள் சேவையாக, அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்த காதம்பினி கங்குலி 62-வது வயதில் (1923) மறைந்தார்.