

இயல்பிலேயே புத்திசாலியான ருக்மபாய் பள்ளிக் கல்வியுடன் ஆங்கிலத்திலும் அபார அறிவு பெற்றதுடன், தனது இளைய தந்தையைப் போலவே மருத்துவராக முடிவு செய்தார். இனி கணவர் வீட்டுக்குச் சென்றால் மேலும் கல்வி பெறுவது தடைப்படும் என்பதால் கணவர் வீட்டுக்குச் செல்ல மறுத்தார்.
தனது கனவுகளுக்கும், தனது முன்னேற்றத்திற்கும் தடையாக இருந்த தனது கணவனை விவாகரத்து செய்யக் கோரி 20 வயதில் 1884 ஆம் ஆண்டு தனது கணவரின் வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்கிறார் ருக்மபாய்.
இந்து மதக்கோட்பாடுகளுக்கு எதிராக விவாகரத்து பெறவேண்டி ஒரு இளம்பெண் முதன்முதலாக வழக்காடு மன்றம் வந்தது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியது. பெண்களின் திருமண வயதை அவர் அதிகரிக்கக் கோரியது நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தொடங்கியது.
புனைப்பெயரில்... 1885-ம் ஆண்டு அறியாத வயதில் செய்த திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்பதுடன், இன்று வளர்ந்து அறிவுள்ள ஒரு பெண் தன் கணவருடன் வாழ மறுக்கும்போது நிர்ப்பந்திக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட, நாடு முழுதும் செய்தித்தாள்கள் அந்தத் தீர்ப்பை எதிர்த்து எழுத ஆரம்பித்தன.
அதிலும் அன்றைய பிரபல பத்திரிகைகளில் சில, இந்தத் தீர்ப்பு இந்துக் கலாச்சாரத்தை மீறுவதாக உள்ளது என்று சாடின. சீர்திருத்தம் என்ற பெயரில் இந்துக்களின் வழக்கங்கள் மீது வலுக்கட்டாய கலாச்சார அழிப்பு நடப்பதாக அவர் எழுதியது பெரும் கவனத்தைப் பெற்றது.
ஆனால், அதே சமயம் ‘ஓர் இந்துப்பெண்’ (A Hindoo Lady) என்ற புனைப்பெயரில் ’டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழில், இந்த வழக்கில் தன் பக்கத்து நியாயங்களை, கல்வி குறித்தான தனது கனவுகளை, திருமண வாழ்விலும், வழக்கை எதிர்கொள்வதிலும் தனக்கிருந்த சவால்களைப் பற்றி தெளிந்த ஆங்கிலத்தில் ருக்மபாய் எழுதத் தொடங்கினார். இந்துக் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களுக்கு அநீதி விளைவிக்கும் பலரது முகத்திரைகளையும் கிழித்துக் காட்டினார்.
"திருமணங்கள் ஏனோ ஆண்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அதேசமயம் பெண்களுக்கு அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்து சேர்க்கிறது. தனது கனவுகளை, நம்பிக்கைகளை, முயற்சிகளை தியாகம் செய்யும் மணப்பெண் ஒருகட்டத்தில் தனதுசிந்தனைகளையும் சேர்த்தே தியாகம் செய்ய வேண்டியுள்ளது" என்று அவர்எழுதிய கடிதம் அப்போதைய ‘டைம்ஸ் ஆப்இந்தியா’ ஆசிரியரான கர்வினை பெரிதும்அசைத்திட, கடிதத்தைப் பிரசுரித்து இந்தியா மட்டுமன்றி ஐரோப்பா எங்கும் ருக்மபாயை அறியச் செய்தார் அவர்.
பரப்பான தீர்ப்பு: அதேசமயம் 1885 ஆம் ஆண்டு நீதிமன்றம் அளித்த விவாகரத்துக்கு எதிராக ருக்மபாயின் கணவர் மேல்முறையீடு செய்ய, அந்த வழக்கின் முடிவில் 1888 ஆம் ஆண்டு, இந்துமதச் சட்டங்களின்படி, கணவன் தாதாஜியுடன் ருக்மபாய் இணைந்து வாழ வேண்டும். மறுத்தால், ஆறு மாதம் சிறைத் தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
"ஆறு மாதங்கள் அல்ல, எவ்வளவு அதிகச் சிறை என்றாலும் இனி அந்தவீட்டிற்கு நான் செல்லமாட்டேன் எனக் கூறினார் ருக்மபாய். இதேகருத்தை ‘இந்துப்பெண்' புனைப்பெயரும் செய்தித்தாளில் எழுதியபோது, இந்துப்பெண் என்ற பெயரில் எழுதிவருவது ருக்மபாய் தான் என்பது தெரியவர,"இது தான் ஆங்கிலக் கல்வியால் வந்த விளைவு. நமது கலாச்சாரத்திற்கு எதிராக யோசிக்கும் அளவுக்குப் பெண்களை இந்தக் கல்விகெடுக்கிறது."
என்பதுடன்... தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒரு பெண், கலாச்சார சீர்கேடுகளை விளைவிப்பதாக பிரபல பத்திரிக்கைகளில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. நாடெங்கும் ருக்மபாய்க்கு ஆதரவாகவும் எதிராகவும், குரல்களும் விவாதங்களும் எழத் தொடங்கின.
ஆனால், இவையனைத்தும்தான் மருத்துவராகும் கனவுகளுக்கு எதிராக இருப்பதாகவும், "தாயாக ஒரு மகளின் நிலைக்குமனமிரங்கி வாருங்கள்.. என்னைப்போல பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான இந்தியப் பெண்களைப் பாருங்கள்... அத்துடன் எனது கல்வி வேள்வியைப் பூர்த்தி செய்யுங்கள்" என்று இங்கிலாந்து ராணிக்கு அவர் எழுதிய கடிதம் உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தது.
(ருக்மபாய் மகிமை தொடரும்)
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com