

சூழல்மண்டலங்கள் எவ்வளவு நுட்பமானவை, அவற்றில் ஏற்படும் சிறிய பாதிப்பு எப்படி ஒரு பகுதியையே பேரழிவுக்கு அழைத்துச் செல்லும் என்பதற்கு உலகப் புகழ்பெற்ற எடுத்துக்காட்டு ஒன்று இருக்கிறது. பாதிப்பை உணர்த்துவதால் மட்டுமே இது சிறந்த எடுத்துக்காட்டு கிடையாது, பாதிப்படைந்த சூழலை நம்மால் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துவதால் மட்டுமே இது முக்கியத்துவம் பெறுகிறது.
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் பூங்காவில் இருந்த ஓநாய்களை அப்பகுதியின் கால்நடை மேய்ப்பவர்கள் வேட்டையாடினர். 1926இல் அங்கிருந்த அத்தனை ஓநாய்களும் அழிந்தன. இனி ஆடு, மாடுகளுக்கு ஆபத்து இல்லை என்று நினைத்தபோதுதான், அப்பகுதியின் அழிவு ஆரம்பமானது.
இயற்கையின் பேரதிசயம்: ஓநாய்கள் அழிந்தவுடன் அந்தப் பூங்காவில் வாழ்ந்து வந்த எல்க் (Elk) எனப்படும் மான்களின் எண்ணிக்கை பெருகத் தொடங்கின. அங்கிருந்த பெரும்பான்மை தாவரங்கள் மான்களுக்கு இரையாகின. ஆறுகளின் கரையோரத்தில் வளரும் பசுமையான புற்கள், மரக்கன்றுகள் ஆகியவற்றையும் மான்கள் உண்டன. இதனால் அந்தநிலமே பாழானது. பறவைகள்வாழ்விடம் இன்றி இடம்பெயர்ந்தன. அங்கிருந்த நீரெலிகளும்(Beavers) அழிந்தன.
தாவரங்கள் இல்லாததால் அடிக்கடி வெள்ளப்பெருக்கு, மண்ணரிப்புகள் ஏற்படத் தொடங்கின. ஆற்று நீர் நிலத்திற்குள் புகுந்தது. சுற்றுவட்டாரத்தில் இருந்த கிராமங்களும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டன. மரங்கள் குறைந்ததால் அப்பகுதியில் மழை வளமும் குன்றியது. சுற்றுவட்டார கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டன. மக்கள் வளர்த்த ஆடு, மாடுகளும் நீர் இல்லாமல், உணவு கிடைக்காமல் வாடத் தொடங்கின. அரசாங்கம் என்ன செய்வது என்று அறியாமல் முழித்தது. 1995ஆம் ஆண்டு வரை நிலைமை மோசமாகவே இருந்தது.
ஆய்வாளர்கள் என்ன செய்யலாம் என்று யோசித்து, இறுதியாக, கனடாவில் இருந்து சில ஓநாய்களை பிடித்து வந்து யெல்லோஸ்டோன் பூங்காவில் விட்டனர். அதற்குபின்தான் இயற்கையின் பேரதிசயம் நிகழ்ந்தது. அந்தச்சூழல்மண்டலத்தின் விடுபட்டுப்போன ஒரு கண்ணி மீண்டும்இணைந்தவுடன், அப்பகுதி தானாகவே குணமடைய தொடங்கியது. பூங்காவிற்குள் விடப்பட்ட ஓநாய்கள், பெருகியிருந்த மான்களை வேட்டையாடின. இதனால் மான்களின் எண்ணிக்கை குறைந்து, மரக்கன்றுகள் வளர்வதற்கான சூழல் உருவானது.
(மேலும் மணக்கும்)
- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com