

லெனின் உலகநாயகன். நூறு ஆண்டுகளுக்கு முன் நவம்பர் புரட்சி நடத்தியவர். தன் நாட்டு மக்களுக்கு, சிறந்த மக்களாட்சியை தந்தவர். லெனின் வாழ்க்கை நிகழ்வுகள் ஒவ்வொன்றும், வாழ்க்கைப் பாடங்கள். குழந்தைகள் லெனின் பற்றி அறிந்துகொண்டால், அவரைப் போலவே தலைமைக் குணங்களுடன் திகழலாம்.
லெனின் சிறிய வயதாக இருக்கும்போது, பள்ளி விடுமுறை சமயத்தில் அத்தையின் வீட்டுக்குச் சென்றிருந்திருக்கிறார். அத்தையின் குழந்தைகள் மற்றும் லெனினின் சகோதர சகோதரிகள் என அனைத்து குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
வீட்டில் மேசை மீது, அழகான கண்ணாடி கூஜா தண்ணீருடன் இருந்தது. லெனின் விளையாட்டு ஆர்வத்தில், ஓடிவரும்போது மேஜை மீது மோதிவிடுகிறார். மேஜை மீதிருந்த அழகான கண்ணாடி கூஜா தரையில் விழுந்து நொறுங்கிவிட்டது. லெனினுக்கு குழப்பம், தான் கண்ணாடிக் கூஜாவை தூக்கிப்போட்டு உடைக்கவில்லையே. பிறகு எப்படி கீழே விழுந்தது? என்று.
அத்தை அனைத்துக் குழந்தைகளையும் விசாரிக்கிறார். லெனின் உட்பட அனைவரும், கூஜாவைத் தாங்கள் உடைக்கவில்லை என்கின்றனர். அத்தை கூஜாவுக்கு கால் வலித்திருக்கும், நிற்க முடியாமல் கீழே விழுந்து உடைந்திருக்கும் என்று நகைச்சுவையாகச் சொல்லி சென்றுவிடுகிறார்.
இந்த நிகழ்வு நடந்த இரண்டு மாதம் பின்னர், லெனின் தன்தாயிடம், ஓடிவந்த வேகத்தில் மேஜைமீது இடித்ததால், கூஜா கீழே விழுந்திருக்கிறது. அத்தையிடம் நான்தான் உடைத்தேன் என்று கூற வேண்டும் என்று அழுதிருக்கிறார். இரண்டு மாதம் கழிந்தும்,தன் தவறுக்கு மன்னிப்பு கேட்கத் துடித்த லெனினின் உள்ளத்தை குழந்தைகளும் பெறவேண்டும்தானே?
ஓய்வும், படிப்பும்: லெனின் கல்லூரியில் படிக்கும் காலத்தில் புரட்சிகர செயல்களில் ஈடுபட்டதற்காக, பல்கலைக்கழகம் மேலும் கல்லூரிப்படிப்பைத் தொடர அவரை அனுமதிக்கவில்லை. லெனினும் தண்டனையைப் பற்றி நினைக்காமல்,புரட்சிச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சிறிது காலத்திற்குப் பின்னே,அமைச்சர் ஒருவரின் சிபாரிசு மூலம், கல்லூரிப் படிப்பை முடிக்க அனுமதி கேட்டிருந்தார்.
கல்லூரி பாடங்களை லெனின் தானாகப் படித்துவிடுவது கடினம் என நினைத்தது பல்கலைக்கழகம். ஆனால் லெனின் தன்னுடைய புத்தகங்களுடன் பகல் பொழுதுகளில் காட்டுப் பகுதிக்கு சென்றுவிடுவார். சிறிது நேரம் படிப்பது, பிறகு உடல் அயர்ச்சிபோக, நீச்சலடிப்பது,சில உடற்பயிற்சிகளை செய்வது, பின்பு படிப்பது என நாள் முழுவதும் படிப்பதில் ஈடுபட்டார்.
உடற்பயிற்சி அவசியம்: தேர்வு முடிவுகள் வெளிவந்தபோது கல்லூரியின் அனைத்துப் பாடங்களிலும் லெனின் வெற்றி பெற்றிருந்தார். தானாகவே படித்து தேர்ச்சி பெற்றதைப்பார்த்து, பல்கலைக்கழகம் ஆச்சரியப்பட்டது. ஒரு செயலில் ஈடுபட, முயற்சி மட்டுமன்றி முறையான வழிகளைப் பின்பற்றினால் வெற்றி உறுதி என்றார் லெனின். உடற்சோர்வை நீக்கிக்கொள்ள உடற்பயிற்சியும், படிப்பையும் முறையான இடைவெளிகளில் மேற்கொண்டு லெனின் வெற்றியடைந்ததை இளைஞர்கள் கவனிக்க வேண்டும்.
புத்தக வாசிப்பாளர்: லெனின் 14 வயதிருக்கும்போதே அவருடைய அண்ணன் மூலமாக, நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொண்டார். புரட்சி செய்ததற்காக சிறையில்அடைக்கப்பட்டாலும், நாடு கடத்தப்பட்டாலும் லெனின் கவலைப்படுவதே இல்லை.கிடைக்கும் தனிமையில் தன் புத்தகங்களுடன், மக்களைப் பற்றியும், அவர்களின்தேவைகள் குறித்தும் படிக்கவும், சிந்திக்கவும், எழுதவும் அந்த நேரங்களைப் பயன்படுத்திக் கொள்வார்.
அவர் ரஷ்ய நாட்டு நிர்வாகத்தில் இருந்தபோது, மீனவர்களின் பிரச்சனைகளைப் பேசுவதற்கு வருகைதந்த, மீனவ தோழருடன் கலந்துரையாடுகிறார். லெனினுக்காகவே புகை மூலமாக பதப்படுத்திய மீனை பரிசாகத் தருகிறார் மீனவத் தோழர். ஆனால் லெனின் மக்கள் பசியோடு இருக்க, தான் ருசியான உணவை சாப்பிடுவது துரோகம் என்கிறார். மீனவத் தோழர் முன்பாகவே குழந்தைகள் விடுதிக்கு மீனைக் கொண்டு சென்று பரிமாறுமாறும் கூறுகிறார்.
புரட்சியாளர்: உலக மக்கள் மீது அன்பு நிறைந்தவர் லெனின், அனைவரும் நலமாக வாழ்வதற்கு தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் லெனின். முதலாளிகளை எதிர்த்து புரட்சிகளை நடத்தியவர். சின்னஞ்சிறிய குழந்தைகளுடன் விளையாடும் வழக்கம் கொண்டவர். தொடர் வாசிப்பும், எழுத்தும் லெனின் சிறந்த அறிவாளியாகக் காரணம். "குழந்தைகளுக்கு லெனின் கதைப் புத்தகம்" ஒரு மொழிபெயர்ப்புப் புத்தகம். குழந்தைகளே லெனின் பற்றி மேலும் அறிந்துகொள்ள, இப்புத்தகத்தை வாசியுங்கள்.