

அஞ்சல்தலைகளில் நம் படத்தையும் இடம்பெறச் செய்யலாமாமே, அதற்கு என்ன செய்ய வேண்டும், டிங்கு?
- ஜி. இனியா, 6-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் சீனியர் செகன்டரி பள்ளி, கிருஷ்ணகிரி.
ஆமாம், அஞ்சல்தலைகளில் நம் படத்தையும் நாம் விரும்பும் படங்களையும் நிறுவனங்களின் லோகோவையும் இடம்பெறச் செய்ய முடியும். அதாவது இனியாவின் படத்தையும் அஞ்சல்தலையில் கொண்டு வர முடியும். இனியாவுக்குப் பிடித்த நாய்க்குட்டியின் படத்தையும்கூட அஞ்சல்தலையில் கொண்டு வர முடியும். 2011-ம் ஆண்டுநடைபெற்ற உலகத் தபால் தலை கண்காட்சியில் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்தனர்.
இந்த வசதி குறிப்பிட்ட அஞ்சல் அலுவலகங்கள், சுற்றுலாத் தலங்களில் இருக்கும் அஞ்சலகங்கள் போன்றவற்றில் இருக்கிறது.இந்திய அஞ்சல்துறையின் இணையதளத்திலும் இந்தச் சேவை இருக்கிறது. ‘மை ஸ்டாம்ப்’ என்கிற பகுதியில், என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், செலுத்த வேண்டிய கட்டணம், விண்ணப்பம் போன்றவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் கட்டைவிரல் அளவுள்ள உங்களுடைய அஞ்சல்தலையைப் பெற்றுக்கொள்ள முடியும்.