

குழந்தைகளுடன் ஓடிப்பிடித்து விளையாடியதுண்டா? நீங்கள்ஓட, குழந்தை உங்களைத் தொடுவதற்குத் துரத்தி வர, அக்குழந்தை அருகில் தொடுவதற்கு வரும் போது, பிற குழந்தைகளிடம் இருந்து எழும்ஆரவாரம் கேட்டதுண்டா? வகுப்பறையில் குழந்தைகளுடன் ஓடிப்பிடித்து விளையாடிப் பாருங்கள், வகுப்பறைத் துடிப்பானதாக மாறும். குழந்தைகளின் இதயம் உங்களுக்காகத் துடிக்கும்.
இந்தச் செயல்பாடு, குழந்தைகளின்உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இச்செயல்பாடு, உடல் செயல்பாடுகளை உள்ளடக்கியது. இது உடல் தகுதிக்கு உதவுகிறது. அதே நேரத்தில், இந்த மாதிரிவிளையாட்டுகளில் உள்ள பல்வேறுவிதிகள் மற்றும் உத்திகள் அவர்களின் அறிவாற்றல் திறன்கள் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை அதிகரிக்க உதவுகின்றன.
சோர்வாக இருந்தால்.... வகுப்பறை எப்பொழுதெல்லாம் சோர்வாக உள்ளதாக கருதுகிறீர்களோ? அப்பொழுதெல்லாம் இதுமாதிரி செயல்பாடுகளை அனுமதிக்கலாம். அதுமட்டுமல்ல, கற்பித்தலுடன் இந்த ஓட்டத்தை இணைக்கலாம்.
ஒவ்வொருவருக்கும் எண் எழுதியுள்ள அட்டையைக் கொடுக்கவும். நீங்களும் ஒரு அட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள்அவர்களைத் துரத்தி ஓட வேண்டும். ஒருவரைத் தொட்டவுடன். உங்கள் கையில் உள்ள அட்டையில் எழுதியுள்ள எண்ணை வாசிக்கவும்.
அதன்பின், பிடிபட்ட குழந்தையின் கையில் உள்ள எண்ணை வாசிக்கவும். அந்தஎண் நீங்கள் வைத்துள்ள எண்ணை விட சிறியதா? பெரியதா? எனக் கூறவேண்டும். அப்படி சரியாக கூறிவிட்டால், பிடிப்பட்டவர் துரத்தி ஓட வேண்டும். தொடர்ந்து முன்பு போல் விளையாட்டைத் தொடரவேண்டும். தவறாகக் கூறினால், விளையாட்டில் இருந்து நீக்கப்படுவார்.
ஆசிரியரும் அந்த எண் குறிப்பிட்ட அந்த மாணவருக்குத் தெரியவில்லை என்பதை அறிவார். மேலும்,அந்தக் குழந்தைக்கு அந்த எண்ணைக் கற்றுத்தருவதற்கான மற்றுமொரு செயல்பாட்டை உருவாக்க வேண்டும். ஆம்! குறைதீர் கற்பித்தல் (Remedial teaching) மூலம் அந்த எண்ணை ஆசிரியர் கற்றுத்தர முயற்சிக்க வேண்டும்.
இந்தச் செயல்பாட்டை மொழிப் பாடங்களுக்கும் பயன்படுத்தி, எழுத்துகளைக் குழந்தைகள் அறிந்து வைத்துள்ளனரா என மதிப்பீடு செய்யலாம்.
உயர்நிலைப்பள்ளி குழந்தைகளுக்குத் தொடர் ஓட்டம் கொடுக்கலாம். வகுப்பறையை இரண்டு குழுக்களாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு அணியும் ஒரு வரிசையில் நிற்க வேண்டும். ஒவ்வொரு அணியிலும் முதல் நபர் வகுப்பறையின் இறுதி வரை ஓடி, அங்கு ஆசிரியர் வைத்துள்ளதுண்டுச் சீட்டை எடுத்துக் கொண்டு, அடுத்த குழு உறுப்பினரின் கையில் அந்த துண்டுச் சீட்டைக் கொடுக்க வேண்டும்.
முதலில் ஓடி வெற்றி பெற்ற அணி, தங்கள் துண்டுச் சீட்டுக்களை வரிசைப் படுத்தி, சரியான வாக்கியத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். யார் முதலில் சரியான வாக்கியத்தைக் கண்டுப்பிடித்தார்களோ அந்தக் குழுவே வெற்றி பெற்றதாகும். இந்தவிளையாட்டை மொழிப்பாடங்களுக்கும், அறிவியல், சமூகவியல் பாடங்களுக்கும் கொடுக்கலாம்.
ஆரோக்கியம் மேம்படும்: குழந்தைகள் வகுப்பறையில் ஓடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. பாரம்பரிய வகுப்பறையின் மன அழுத்தத்தைக் குறைத்து, படிப்பின் மீது கவனத்தை மேம்படுத்துகிறது. குழந்தைகளுடன் ஓடிப்பிடித்து விளையாடுங்கள். ஒரு ஓட்டம். வகுப்பறையை உயிரோட்டம் ஆக்கிவிடும். முயன்று பாருங்கள்.