

உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்கும்தானே? இதுக்கு பதில் சொல்லுங்க. கிரிக்கெட்ல விளையாட்டு உணர்வு, அதாவது, ‘ஸ்போர்ட்ஸ்மென்ஷிப்’ அதிகம் உள்ள நாடு எது? ‘இந்தியா...’ ‘இந்தியா...’
அப்ப்பா… உங்க நாட்டுப் பற்று புல்லரிக்குது. சரி. இந்தியாவுக்கு அடுத்ததா? ஒரு ‘க்ளூ’ குடுக்கட்டுமா? தோழர் நாடு. ‘என்னது... சோழ நாடா..? இலங்கை..? சோழ நாடு இல்லை. தோழர் நாடு. தெரியலியா, இப்படி சொன்னா தெரியுதா பாருங்க. புரட்சி நாடு. செல்வி சட்டென்று கையை உயர்த்துகிறாள். ‘கியூபா’. பிரமாதம்! இன்னைக்கு நாம் கியூபா நாட்டைப் பற்றித்தான் பார்க்கப் போறோம்.
இணைந்து போராடிய தோழர்கள்: அட்லாண்டிக் பெருங்கடல், மெக்சிகோ வளைகுடா, கரிபியன் கடல் ஆகிய மூன்றும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள தீவு நாடு கியூபா. ‘கியூபா குடியரசு’ என்று அழைக்கப்படுகிறது. இதை இடதுசாரிகளின் பூமி என்றும் சொல்லலாம். உலகம் முழுதும் இளைஞர்கள் இடையே மிகவும் பிரபலமாக உள்ள புரட்சியாளர் யாரு? ‘சே குவாரா’ - ஓங்கிக் குரல் கொடுத்தனர் உமாவும் செல்வியும்.
அவரு எந்த நாட்டு அரசியல் விடுதலைக்குப் போராடினாரு? ‘கியூபா’. ஆமாம். அவருடன் புரட்சியில் ஈடுபட்ட ச்சேவின் தோழர் யாரு? ‘ஃபிடல் கேஸ்ட்ரோ’ ஆமாம். அவர்தான் கியூபாவின் அதிபராகவும் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இனி, புவியியல் பார்ப்போம்.
இளைஞர்களின் தீவு: மெக்சிகோவுக்குக் கிழக்கே, அமெரிக்க மாகாணங்கள் ஃப்ளோரிடா, பஹாமாஸ் ஆகியவற்றுக்குத் தெற்கே, ஜமைக்கா, கேமேன் தீவுக்கு வடக்கே இந்த நாடு உள்ளது. கியூபாவின் தலைநகரம் ஹவானா.
இஸ்லா டி லா ஜுவண்டூட் (இளைஞர்களின் தீவு) கியூபாவின் இரண்டாவது பெரிய தீவு; மேற்கு இந்தியத் தீவுகளில் ஏழாவது பெரிய தீவு. பல்லுயிரிகளில் முக்கியமாக அழிவின் விளிம்பில் இருக்கும் கிளிகள், சுறாக்கள் மற்றும் ஆமைகளுக்கு பெயர் பெற்றது. மேலும் சில அளவில் மிகச் சிறிய தீவுகளும் கியூபாவுடன் இணைந்தவை ஆகும்.
கியூபா நாட்டின் பரப்பளவு சுமார் 1,09,000 ச கி மீ. கரீபிய நாடுகளில் ஹைத்திக்கு அடுத்த படியாக, 1.1 கோடி மக்கள்வாழ்கிறார்கள். நமது நாட்டுடன் ஒப்பிட்டால்… ? நம்மில் ஒரு சதவீதம் கூட இல்லை. கொல்கத்தா மாநகரில் மட்டுமே இத்தனை மக்கள் வாழ்கிறார்கள். மேலும் கியூபா பற்றி தெரிந்துகொள்ள நிறைய இருக்கு...
(கியூபா பயணம் தொடரும்)
- கட்டுரையாளர்: கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி; தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com