

அலசி ஆராய்ந்துதான் முடிவுசெய்ய வேண்டுமா? நொடிப்பொழுதில் முடிவுசெய்யக் கூடாதா? என்று வினவினாள் அருட்செல்வி. நல்ல வினா என்று அவளைப் பாராட்டிய எழில், குயிலி சாலையின் இடதுபுறத்தில் தனது மிதிவண்டியை அளவான வேகத்தில் ஓட்டிச் சென்றார்.
அப்பொழுது அச்சாலையில் எதிரே வந்துகொண்டிருந்த லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாகச் சுழன்று, குயிலின் மேல் மோதப்போவதைப் போல வந்தது. இப்பொழுது குயிலி எப்படி முடிவுசெய்ய வேண்டும்? என்று வினவினார். விரைந்து முடிவுசெய்ய வேண்டும் என்றான் காதர்.
இல்லையென்றால் லாரி அவள் மீது மோதிவிடும் என்று வலுச்சேர்த்தாள் மதி. சரியாகச்சொன்னீர்கள்! என்று அவர்களைப் பாராட்டிய எழில், நேரம் கடந்தால் பாதிப்பு ஏற்படும் சூழலில் நொடிப்பொழுதில் விரைந்து முடிவுசெய்து (Quick Decision) செயலாற்ற வேண்டும். இங்ஙனம் முடிவுசெய்ய எச்சரிக்கை உணர்வும் விரைந்து சிந்திக்கும் துணிவும் தேவை என்றார்.
குழப்பமாக இருக்கிறதா? - இது விரைந்த முடிவென்றால், மெதுவான முடிவு (Slow Decision) என ஒன்று உண்டா?என்று வினவினான் சுடர். ஆம். சதுரங்கம்விளையாடும்போது காய்களை நகர்த்தும் ஒவ்வொரு முறையும் ஆழ்ந்து சிந்தித்து முடிவுசெய்தல் அவ்வகையைச் சார்ந்தது.
ஆனால், அன்றாட வாழ்வில் எப்பொழுதும் மெதுவாக முடிவுசெய்யக் கூடாது. இதனைப்போலவே இழுத்தடித்து காலங்கடந்தும் முடிவுசெய்யக் (Delayed Decision) கூடாது. அவ்வாறு செய்தால் காலம் வீணாகும்; வாய்ப்பு கைநழுவிப்போய்விடும் என்று விளக்கினார் எழில்.
விரைந்த முடிவு, மெதுவான முடிவு, காலங்கடந்த முடிவு ஆகிவற்றில் எதனை மேற்கொள்ள வேண்டும்? ஒரே குழப்பாய் இருக்கிறது என்று தனது தலைமுடியை இரண்டு கைகளிலும் கலைத்தவாறு வினவினான் முகில். அவனைப் பார்த்து எல்லாரும் புன்னகைத்தனர். சூழலுக்கு ஏற்ப, உரிய நேரத்தில் பொருத்தமாக முடிவுசெய்ய (Appropriate Decision) வேண்டும். அந்த முடிவு இவற்றுள் ஏதாவது ஒன்றாக இருக்கும் என்று தெளிவுபடுத்தினார் எழில்.
பொருத்தமான முடிவு: எது பொருத்தமானது என எப்படிக் கண்டுபிடிப்பது? என்று வினவினாள் இளவேனில். லாரி மோதுவதைப்போல வரும்பொழுது குயிலி விரைந்து முடிவுசெய்தால் அவருக்குப் பாதிப்பு இருக்காது. மாறாக மெதுவாகவோ, காலங்கடந்தோ முடிவுசெய்தால் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, ஒரு முடிவால் ஏற்படும் விளைவைக் கொண்டு பொருத்தமான வேகத்தில் முடிவுசெய்ய வேண்டும் என்றார் எழில்.
மேலும், ஒரு முடிவின் விளைவு குறுகிய கால அளவிற்கே இருக்குமானால் அதனை குறுகியகால முடிவு (Short term decision) என்கிறோம். ஒருவேளை இத்தகைய முடிவுகளால் இழப்புகள் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை ஆராய்ந்து புரிந்துகொண்டு, அந்த இழப்பு மீண்டும் நிகழாதவாறு தவிர்க்க வேண்டும்.
விளைவு நீண்ட கால அளவிற்கு இருக்குமானால் அதனை நீண்டகால முடிவு (Long term decision) என்கிறோம். இம்முடிவை உடனே செய்யக் கூடாது. நன்கு ஆராய்ந்து சிந்தித்தே முடிவுசெய்ய வேண்டும். வாழ்க்கையின் போக்கையே வடிவமைக்கக் கூடிய, பின்னாளில் எளிதில் மாற்றமுடியாத முடிவுகளை அரிய முடிவு (Rare decision) என்கிறோம். இத்தகைய முடிவுகளை பல்வேறு கோணங்களில் பலமுறை சிந்தித்தே மேற்கொள்ள வேண்டும்” என்று விளக்கினார் எழில்.
ஏன் முடிவெடுக்க வேண்டும்? என்று வினவினாள் கயல்விழி. சிக்கலைத்தீர்க்க என்றார் எழில். எப்படி? என்றான் அழகன். அதனை அடுத்த வகுப்பில் பார்க்கலாம் என்றார் எழில்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com