

முதலமைச்சர் வளவனார் திருச்சேந்தியை நோக்கி, ‘தென்னகத்துப் பாளையம் காக்கும் திருச்சேந்தியாரே, நம்மை எதிர்க்கத் துணிந்தவர்கள் கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக நமது வீரத்துக்குச் சவால் விட்டுப் பதுங்கி அடிப்பவர்கள். அவர்களது படையின் பெயர், ‘மக்கள் புரட்சிப் படை’ என்று கூறியதும் அங்குக் குழுமியிருந்த அத்தனை பேர் முகத்திலும் பெரும் கவலை படர்ந்தது.
அவரது மிரட்டலான பேச்சுக்கும் எச்சரிக்கைக்கும் கொஞ்சமும் கலங்காத திருச்சேந்தி, ‘அட, அவ்வளவுதானே? அந்தக் கூட்டத்தைப் பற்றிப்பல ஆண்டுகளாக நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அரசர் ஆணையிட்டால், இன்னும் மூன்று மாதங்களில் அந்தக் கூட்டத்தையே முடித்துக் காட்டுகிறேன்’ என்றார். அதற்குப் பதிலளித்த மன்னன், ‘திருச்சேந்தியாரே, அவர்களால் நம்மை எப்போதும் வெல்ல முடியாது. ஆனால், தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்க முடியும். அதை ஓர் அரசனாக எப்படி சகித்து வாழ்வது?’ என்றார்.
மன்னர் அப்படிச் சொல்லி முடித்ததும் முதலமைச்சர் வளவனார், ‘அவையோரே, இப்போது நாம் செய்யவேண்டியதெல்லாம், அந்தக் கூட்டத்தை ஒழித்துக்கட்டத் தேவையான வியூகங்களை வகுப்பது மட்டுமே. எனவே, அடுத்தப்பவுர்ணமிக்குள் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குத் தோன்றும் திட்டங்களை எங்களிடம் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன். இப்போது கூட்டம் கலையலாம்.’ என்றார். கிசுகிசு வெனத்தங்களுக்குள் பேசிக்கொண்டே அன்றைய கூட்டமும் கலைந்தது.
அதற்கு முன், திருச்சேந்தியின் ஆட்களிடம் சிக்கிக்கொண்டு கூகைச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த குணபாலனைப் பற்றிப் பார்ப்போம். அந்தப் பேராபத்திலிருந்து எப்படித் தப்பிப்பது? என்று யோசித்துக்கொண்டே சென்று கொண்டிருந்தான் குணபாலன்.
அப்போது, கொஞ்சம் தூரத்தில் உடுக்கை ஒலியுடன் தாரை, தப்பட்டை ஒலிகளும் கேட்கத் தொடங்கின. ‘ஜெய ஜெய மஹா தேவா…. ஜெய ஜெய மஹா தேவா’ என்கிற கோஷங்களும் கேட்கத் தொடங்கியது. ஏதோ ஒரு பஜனை கோஷ்டி நம்மை நெருங்கி வருகிறது. அந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி நாம் தப்பிக்க வழியைப் பார்க்க வேண்டும் என்று குணபாலன் மனதுக்குள் திட்டம் போட்டுக்கொண்டான்.
ஆனால், அவன் நினைத்ததற்கு நேர்மாறாக நிலைமை சென்றது. கோஷம்போட்டு வந்த கூட்டம் நெருங்க நெருங்க வீரர்களின் பிடி இறுகியது.மனசுக்குள்ளே திட்டம் போட்டாலும்சண்டாளர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் போல என்று நினைத்துக்கொண்ட குண்பாலன் நெருங்கி வந்த கூட்டத்தை நோட்டம்விட்டான். உயரம் மிகக் குறைந்த ஒரு சாமியாரை சிறிய பல்லக்கில் வைத்து நான்கு பேர் தூக்கி வந்தார்கள். அவர்களது பின்னால் ஒரு நான்கைந்துப் பேர்கள் இசைக் கருவிகளை வாசித்தபடி வந்தார்கள். பல்லக்கில் அமர்ந்து வந்தவர் குணபாலனைக் கூர்ந்து நோக்கினார். அவரது கண்கள் சிறியதாக இருந்தாலும் பிரகாசமாக மின்னியது.
அந்தக் குருசாமி வீரர்களை நோக்கி, ‘யாரடா இவன்? இவனை எங்குக் கொண்டு செல்கிறீர்?’ என்று கேட்டார். வீரர்களின் தலைவன், ‘வணக்கம் சாமி. இவனைக் கூகைச்சிறையில் தள்ளுமாறு திருச்சேந்தியார் உத்தரவு!’ என்று பதிலளித்தான். உடனே அந்தச் சாமியார், ‘அடடே, சாகப் போகிறவனா?’ என்றவர் குணபாலனிடம் திரும்பி, ‘ஓ… சிறுவனே, சாவை நினைத்துப் பயப்படாதே. உனது உயிர் இறைவனுக்குப் படையல் ஆகப் போகிறது என்று பொருள் கொள். அப்படி நினைத்துக்கொண்டால், நீ மோட்சம் அடைவாய். இல்லையேல் உனக்கு நரகம் நிச்சயம்.’ என்றவர் அந்த வீரர்களின் தலைவனிடம், ‘அந்தச் சிறுவனைஇங்கே அழைத்து வா.’ என்றார்.
சாமியார் அப்படிச் சொன்னதும் அந்த வீரர்களின் தலைவனும் குணபாலனை அவர் முன் கொண்டு நிறுத்தினான். சாமியார் தன்னிடமிருந்த வேப்பிலைக் கொத்தால் அவன் தலையில் மூன்று முறை அடித்தார். அதன் பின் விபூதியை எடுத்து அவன் தலையில் போட்டுவிட்டு நெற்றியிலும் பூசினார். அதன்பின் சாமியார் நெருப்பு மிகுந்த ஒரு தூபக்காலில் சாம்பிரானியைப் போட்டார். அதிலிருந்து சிறிதுப் புகைக் கிளம்பியது.
அதை எடுத்துத் தன்னுடன் வந்திருந்த ஒரு சீடனிடம் கொடுத்தார். அவனும் அதை எடுத்துகொண்டு குணபாலனைப் பலமுறை சுற்றி வந்தான். ஒவ்வொரு முறையும் சாமியார் தன்னிடமிருந்த சாம்பிரானித் தூளை அந்தத் தூபக்காலில் போட்டுக்கொண்டே வந்தார். இப்போது புகைமூட்டம் பெரிதாகிக்கொண்டே வந்தது. சாமியார் இப்போது மூக்கைப் பொத்திக்கொண்டு எதையோ போட்டார். புகைமண்டலமும் பெரிதாகி அந்த இடத்தில் உள்ளோர் அனைவரையும் சூழ்ந்து மறைத்தது. குணபாலன் கண்கள் இருண்டு, தலைச் சுற்றி மயக்கம் வந்து கீழே வீழ்ந்தான்.
(தொடரும்)