ருசி பசி - 4: தித்திக்கும் தினை பாயாசம்

ருசி பசி - 4: தித்திக்கும் தினை பாயாசம்
Updated on
2 min read

தினை ஒரு தானிய வகையாகும். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவாக பயன்படுகிறது. வீட்டில் லவ் பேர்ட்ஸ் வைத்திருப்பவர்களுக்குத் தினை பரிச்சயமான ஒன்றுதான். பறவைகளுக்கு உணவாக கொடுக்கிறோம். மனிதர்களுக்கும் மிகவும் ஆரோக்கியமான ஒன்று.

தினை உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியங்களில் ஒன்று. தினையைப் பயிரிட வடிகால் வசதியுள்ள மணல் பாங்கான மண்வளம் தேவை. 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். தினையில் உலக உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.

இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தினை கிழக்காசியாவில் 10,000 ஆண்டுகளாக பயிரிடப்படுவதாக கூறப்படுகிறது. தினை மாவு அதிக சத்துள்ள உணவுகளில் ஒன்று. இதற்கு இறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு. தினைக் கதிர்கள் நரி வாலைப் போன்ற தோற்றத்தில் இருப்பதால் ஆங்கிலத்தில் Fox Tale millet என்று சொல்கிறார்கள்.

சங்க இலக்கியம்: முருகன் வயதான தோற்றத்தில் சென்று வள்ளியிடம் சாப்பிட தேனும் தினை மாவும் கேட்டதாக புராணம் கூறுகிறது. நன்னன் என்னும் குறுநில மன்னனின் சவ்வாது மலையின் அடிவாரத்தில் இருந்த சிற்றூர் மக்கள், நெய்யில் வெந்த இறைச்சியுடன் தினைச்சோறு உண்டதாகக் குறிப்பு கிடைக்கின்றது. சவ்வாது மலை சுற்றியுள்ள பகுதிகளில் தினைப்பயிர் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றது. பாயசம் பிடிக்காதவர்கள் யாருண்டு. பாயசத்தில் இருந்து தொடங்குவோம்.

தினை பாயசம் தேவையான பொருட்கள்

தினை 1 கப்

வெல்லம் 2 கப்

பால் 200 கிராம்

நெய் 4 தேக்கரண்டி

முந்திரி திராட்சை 20

ஏலக்காய் 5

செய்முறை: தினையை நெய்யில் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். தினையரிசிக்குத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். வெல்லப் பாகு காய்ச்சி எடுத்து தினை வெந்தவுடன் சேர்க்க வேண்டும். தேவையென்றால் பால் சேர்த்துக் கொண்டால் சுவையாக இருக்கும். இறுதியில் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையைப் போட்டு இறக்கவும்.

தினை பாயசம் தயார். தினையில் தினை பொங்கல் , தினை லட்டு, தினை தோசை, தினை இட்லி தினை அடை, தினை உருண்டை, தினை அரிசி சா்க்கரைப் பொங்கல், தினை அரிசி துவையல், தினை முறுக்கு, தினை அதிரசம் செய்யலாம். இப்போது தினை ஃப்ளேக்ஸ், தினை அவல், தினை சேர்ந்த முசிலி, தினை பிஸ்கட் குக்கிஸ் என கடைகளில் கிடைக்கின்றது. தினை உடல் நலத்திற்கு நல்லது.

பயன்கள்: தினை அரிசியில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது கண் பார்வை மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும். கால்சியம், ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளன. அரசியைக் காட்டிலும் பல மடங்குசத்துக்கள் நிறைந்துள்ளன. ராகியை விட நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. தொடர்ச்சியாக உண்டு வரும்போது உடல் எடையைக் குறைக்க முடியும்.

நூறு கிராம் தானியத்தில் இருக்கும் சத்துக்கள் குறித்த அட்டவணையை மருத்துவர் கு.சிவராமன் குறிப்பிட்டுள்ளார்.

(தொடர்ந்து ருசிப்போம்)

- கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியை, திருப்பத்தூா் மாவட்டம்; தொடர்புக்கு: devavino86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in