

பங்குச்சந்தையில் நுழைய பலர் பயப்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று எந்த பங்கை எப்போது வாங்குவது; எப்போது விற்பது, மற்றொன்று பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்தை எப்படி சமாளிப்பது.
முதல் பிரச்சினைக்கு தீர்வாக, பங்குச்சந்தை நிபுணர்களால் நிர்வகிக்கப்படும் மியூட்சுவல் ஃபண்ட்ஸ் (பரஸ்பர நிதி) திட்டங்களை சொல்லலாம். இரண்டாம் பிரச்சினைக்கு தீர்வாக ‘வாங்கும் விற்கும் நேரம்' அறிந்துக்கொள்ள வேண்டும். விலைகுறையும்போது பங்கை வாங்கி, விலை அதிகரித்த உடனே விற்றுவிடுவதை குறிப்பிடலாம். இதையே புகழ்பெற்ற பங்குச்சந்தை முதலீட்டாளர் வாரன் பஃபட், ‘ எல்லோரும் பேராசையுடன் பங்குகளை வாங்கும்போது நாம் அச்சத்துடன் விலகி இருக்க வேண்டும். எல்லோரும் அச்சத்துடன் விலகி இருக்கும்போது நாம் பேராசையுடன் வாங்க வேண்டும்' என்கிறார்.
நிதி இலக்கு முக்கியம்: பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன், நிச்சயம் நிதி இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். எதற்காக இந்த முதலீடு செய்யப்படுகிறது? எப்போது இந்தநிதி திரும்ப தேவை? எவ்வளவு லாபத்துடன் தேவை? இழப்பு ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு களமிறங்க வேண்டும். நிதி இலக்குகளைப் பொறுத்து பங்கு சந்தை முதலீடுகளை வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.
குறுகிய கால முதலீடு என்றால் அதற்கு ஏற்ற பங்குகளை வாங்கி, குறிப்பிட்ட காலத்தில் லாபம் வரும்போது விற்றுவிட வேண்டும். நீண்ட கால முதலீடு என்றால் எதனையும் கவனத்தில் கொள்ளாமல் நீண்ட காலம் காத்திருந்து விற்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
பிரித்து போடு: முதலீடுகளை எப்போதும் ஒரே இடத்தில் குவித்து வைக்கக் கூடாது. எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைத்தால் எதிர்பாராத நேரத்தில் கீழே விழுந்து எல்லாம் உடைந்து போய்விடும். அந்த அபாயத்தை தவிர்க்க, பணத்தை ஒரே இடத்தில் முதலீடு செய்யக்கூடாது.
நிதி தேவையை மனதில் வைத்து 60 சதவீத முதலீட்டை கண்டிப்பாக திரும்பவரும் உத்தரவாத திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். அஞ்சலகம் மற்றும் வங்கி முதலீட்டு திட்டங்கள், எல்ஐசி, தங்கம், நிலம் போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மீதமுள்ள 40 சதவீதத்தை இரண்டாக பிரித்து முதல் பாதியை ரிஸ்க் குறைந்த முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். மறுபாதியை ரிஸ்க் அதிகமான அதே நேரத்தில் கூடுதல் லாபம் வரும் முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு பணத்தை வெவ்வேறு விதமான முதலீட்டு திட்டங்களில் பிரித்து போடுவதை 'அஸெட் அலொகேஷன்' என்பர்.
எவ்வளவு, எப்போது போடலாம்: ரிஸ்க் நிறைந்த பங்குச்சந்தையில் முதன் முதலாக முதலீடு செய்பவர்கள் முதலில் தங்களின் 100 சதவீத நிதியை முதலீடு செய்யக்கூடாது. அஸெட் அலொகேஷனில் கடைசியாக ஒதுக்கி வைத்த 20 சதவீத நிதியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். மிகக் குறைந்த அளவிலான நிதியை கூட பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடியும். நேரடியாக செய்ய தயக்கமாக இருந்தால் நிபுணரின் ஆலோசனையோடு முதலீடு செய்யலாம்.
பொதுவாக பங்குச்சந்தையில் Passive investment, aggressive investment என இரண்டு வகையான முதலீட்டு முறைகள் இருக்கின்றன. Passive investment என்பதுபங்குகளை வாங்கி நீண்ட காலம் காத்திருந்து விற்பனை செய்வார்கள். இடையில் பங்கின் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும் விற்பனை செய்யமாட்டார்கள்.
Aggressive investment என்பது பங்கின் விலை சற்று அதிகரித்தாலும் விற்பனை செய்துவிடுவார்கள். முதல் வகையில், காத்திருப்புக்கு ஏற்றவாறு அதிக லாபம் கிடைக்கும். இரண்டாவது முதலீட்டில் குறைந்த லாபமே கிடைக்கும். எனவே சின்ன வயதிலே Passive investment முதலீட்டை தொடங்கிவிட்டால் வயது உயர உயர லாபமும் உயர்ந்துக்கொண்டே போகும்.
(தொடரும்)
- கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in