தயங்காமல் கேளுங்கள் - 33: டாட்டூ போடுவதில் பாதுகாப்பு அவசியம்

தயங்காமல் கேளுங்கள் - 33: டாட்டூ போடுவதில் பாதுகாப்பு அவசியம்
Updated on
2 min read

டாட்டூ போடுவதால் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்ற கேள்வியை மாணவி திவ்யா கேட்டிருந்தார். அவருக்கான விடையை தொடர்ந்து பார்ப்போம். டாட்டூ மெஷினில் உள்ள மெல்லிய ஊசி, நிமிடத்திற்கு 3000 முறை வரை தோலைத் துளைத்து, ஒரு சிறிய தையல் இயந்திரம் போல செயல்படுகிறது. ஒருவருக்கு பயன்படுத்திய ஊசிகளை மற்றொருவருக்கு பயன்படுத்துவதில்லை என்கிறார்கள் டாட்டூ கலைஞர்கள்.

அவர்கள் சொல்வதை அப்படியே நம்புவதாக வைத்துக் கொண்டாலும், தோலில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுநோய்கள் தவிர, சமயங்களில் ரத்தம் மூலமாகப் பரவும் ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ்கள், ஏன் ஹெச்ஐவி தொற்று போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட பலருக்கும் தரமற்ற கடைகளில் சுத்திகரிக்கப்படாத ஊசிகளால் இதுபோன்ற வியாதிகள் பரவி வருகிறது.

ஊசிகளால் பரவும் இந்தத் நோய்த்தொற்றுகளைவிட, இந்த ரசாயனங்களால் ஏற்படும் அலர்ஜி, எக்சீமா எனும் தோல் அழற்சி, கீலாய்ட் எனும் விகாரமான தழும்புகள், இவையனைத்திற்கும் மேலாக, சருமப் புற்றுநோய்கள் கூட இந்த ரசாயனங்களால் ஏற்படலாம். இதனால் டென்மார்க், துருக்கி போன்ற சில நாடுகளில் டாட்டூவை தடையே செய்திருக்கிறார்களாம்.

ஒருமுறை குத்தினால் அழியாது! - ஆனால், ஃபேஷன் என்பதுடன் டாட்டூஎனக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது என்றுகூறும் இளைய சமுதாயத்திடம், "டாட்டூ வேண்டாம்..." என்று சொல்லமுடியாது. அதற்காக திவ்யா உள்ளிட்ட இளைய தலைமுறையினருக்கு, "பாதுகாப்பாக இருங்கள்" என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது.

# ஒருமுறை பச்சை குத்தினால் அது அழியாது என்பதால் இது தேவைதானா என்பதை ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.

# பச்சை குத்துதல் மயக்க மருந்து கொடுக்காமல் செய்யப்படுவதால், நிச்சயமாக வலிக்கும் என்பதுடன் தோல் நோய், தோல் அழற்சி மற்றும் ஒவ்வாமை போன்ற பிற சிக்கல்களும் ஏற்படலாம்.

# எதிர்காலத்தில் ஒருவேளை நாம் குத்தியிருக்கும் பச்சையை அழிக்க நினைத்தால், அதற்கான சீரமைப்பு அல்லது லேசர் சிகிச்சை செலவுகள் வேறு இருக்கிறது.

# மேலும் பச்சை குத்தும் பணியாளர்கள் முறையாகப் பயிற்சி பெற்றவர்களா என்பதைத் தெரிந்து கொள்வதுடன், பச்சை குத்தும் முன் கையை நன்கு சுத்தமாக கழுவிபுதிய கையுறை அணிகிறார்களா, புதிதாக சீல் திறக்கப்பட்ட உறையிலிருந்துதான் மையையும் ஊசியையும் உபயோகிக்கிறார்களா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

# பச்சை குத்தியபின் அந்த தோல் பகுதியில் ஒட்டாத தளர்வான ஆடைகளை அணிவதுடன், பச்சை குத்திய இடம் பாதிக்காமல் பார்த்துக் கொள்வது எப்படி என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.

# எல்லாவற்றுக்கும் மேலாக, ஒவ்வாமையோ, இரண்டு வாரங்களுக்கும் மேல் புண் ஆறாமல் இருந்தாலோ உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்வது அவசியம்.

ஆக, திவ்யா, உனது தோழிகளைப் போலவே ட்ரெண்டிங் ஃபேஷனில் உள்ள டாட்டூக்களை அப்பா மறுக்கும் காரணங்கள் ஒருவிதத்தில் சரிதான். டாட்டூவிற்குப் பயன்படுத்தப்படும் ஊசிகளிலும், நிறமிகளிலும் கொஞ்சம் அதிக கவனம் செலுத்தமட்டுமே அறிவுறுத்துகிறோம். ஏனெனில்சமயங்களில் சிலநோய்களும் பக்கவிளைவுகளும் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருப்பதில்லை.

(ஆலோசனைகள் தொடரும்)

- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in