இவரை தெரியுமா? - 3: காகிதம் வந்த கதை
சீனாவை கி.பி. 72-ல் ஆட்சி புரிந்து வந்த ஹான் வம்சத்தின் ஹோடி என்ற மன்னர், தன் அரண்மனையில் பணி செய்வதற்காக 15 வயதுச் சிறுவன் ஒருவனை வேலைக்கு அமர்த்தினார். அந்தச் சிறுவன் படு சாமர்த்தியமாக கொடுத்த வேலைகளை அடுத்தடுத்து செய்து மன்னரின் விசுவாசியாக வளர்ந்தான்.
அரசு நடைமுறைகளை ஆவணப்படுத்தும் முக்கியப் பொறுப்பில் அந்தச் சிறுவனை மன்னர் நியமித்தார். அந்தக்கால சீனாவில் மூங்கில் பட்டையிலும் பட்டுத் துணியிலும்தான் எழுதிவந்தனர். தான் எழுதிய மூங்கில் பட்டை ஆவணங்களை சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று மன்னரிடம் காண்பித்தான் அந்த சிறுவன்.
ஆனால், மன்னருக்கு மனம் இல்லை. ‘மூங்கில் பட்டைக்கும் பட்டுத் துணிக்கும் நாம் எவ்வளவுதான் செலவு செய்வது, இப்படியே சென்றால் கஜானாவை கவிழ்த்துவிட்டு, நாட்டை தாரை வார்க்க வேண்டியது தான்!’ என்று நொந்து கொண்டார்.சிறுவன் செய்வதறியாது குழம்பினான்.மற்ற நாடுகளில் எழுதுவதற்கு என்ன செய்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள முயன்றான்.
குளவிகள் அசந்த சமயம்... மேற்கத்திய நாடுகளில் ஆடு மாடு தோல்களை பதப்படுத்தி அதில் மை தொட்டு எழுதினார்கள். கிரேக்க, ரோமானிய நாடுகளில் சதுப்பு நிலத்தில் வளரும் பாப்பிரஸ் எனும் புல்லின் தண்டைக் கூழாக்கி உலர்த்தி அதன்மேல் எழுதினார்கள். அவையெல்லாம் இதைக் காட்டிலும் விலை வைக்கும் உத்திகளாக இருக்கின்றன. நாம் வேறொரு உபாயத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று மனத்தில் எண்ணினான்.
ஒருநாள் ஏதேச்சையாக குளவி கூடுகட்டுவதை அந்தச் சிறுவன் பார்த்தான். மரத் துண்டுகளை தன் வாயால் கொரித்து, எச்சிலில் குழைத்து கூழாக்கி, அக்கூழினைக் கொண்டு அவை கூடு கட்டுவதை அவனால் நம்ப முடியவில்லை. சாதாரணக் குளவிக் கூட்டிற்குள் இத்தனை வேலைப்பாடுகள் இருக்கின்றதா என ஆச்சரியப்பட்டான். குளவிகள் அசந்த சமயம், அக்கூட்டினை கையில் எடுத்து ஆர அமர நோட்டமிட்டான்.
சபாஷ்! காகிதம் செய்யும் ஐடியா குளவிக் கூட்டிற்குள் இருந்து பீறிட்டு கிளம்பியது. உடனே அரண்மனைக்குச் சென்று வேலையாட்கள் ஐவரை அழைத்து மலிவாகக் கிடைக்கும் காய்ந்த புற்கள் மற்றும் மரக் கொம்புகளை அரைத்து காகிதத் தயாரிப்பில் இறங்கினான். ஆனால், அந்த முயற்சி வெற்றிகரமாக அமையவில்லை.
தொடர்ந்து பல ஆண்டுகள் காகிதக் கண்டுபிடிப்பில் முனைந்து வேலை செய்தான். சிறுவன் பெரியவன் ஆனான். முயற்சிகளும் பன்மடங்கு பெரிதாகின. இறுதியாக மூங்கில், மல்பெரி மரப்பட்டை, செடிகளின் கழிவோடு இலை தழைகளை நன்றாக அடித்து மசித்து அதில் தண்ணீர் விட்டு கூழாக்கினார். அந்தக் கூழை தட்டையான துணியில் போட்டு தண்ணீர் உலர்ந்ததும், மிச்சிமிருந்த சக்கையை நன்றாக வெயிலில் காய வைத்தார்.
முதல் காகிதம்: இப்படித்தான் உலகின் மலிவான, எளிதான, எடைகுறைந்த முதல் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது. அதைக் கண்டுபிடித்தவர் சாய் லூன். அவர் ஒரு திருநங்கை. வரலாற்றுப் புத்தகங்களில் அதிகம் அறிந்திராத பெயர். கி.பி. 105-ல் அரசு நிகழ்வுகளை இந்தப் புதிய காகித்தில் படியெடுத்து மன்னரிடம் சென்று காண்பித்தார் சாய்லூன். வண்டி பூட்டிக் கொண்டு ஏழெட்டுபேர் சுமந்து வரும் மூங்கில் பட்டை ஆவணங்களுக்குப் பதில் ஒற்றையாளாக கையில் கொண்டுவரும் ஒருபக்க காகிதத்தைப் பார்த்து மன்னர் அசந்துபோனார்.
சாய் லூனுக்கு பொன்னும் பரிசும் கொடுத்ததோடு, உயர் பதவியும் வழங்கினார். ஆனால், அதிகாரச் சூழ்ச்சியால் விரைவில் தன் பதவியிழந்து, விஷமருந்தி தற்கொலை செய்யும் நிலைக்கு சாய் லூன் உந்தப்பட்டார்.
பல நாடுகளுக்கு ஏற்றுமதி: இந்தக் காகிதம் செய்யும் உத்தியைப் பல ஆண்டுகள் சீனர்கள் ரகசியமாக வைத்திருந்தனர். கி.பி. 3-ம் நூற்றாண்டில் ஆசியா உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். கி.பி. 751-ல் அரேபியர்கள் சில சீனக் காகிதத் தயாரிப்பாளர்களைச் சிறைப்பிடித்ததில் இருந்து சாமர்கண்ட், பாக்தாத் போன்ற நகரங்களில் காகிதம் செய்யும் முறை பரவலானது.
அரேபியர்களிடமிருந்து ஐரோப்பியர்களும் பின்னர் இதைக் கற்றுக்கொண்டார்கள். கி.பி. 1440-ல் கூட்டன்பர்கு நவீன அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்ததில் இருந்து காகிதத்தின் புகழ் உச்சிக்கு ஏறத் தொடங்கியது. இல்லையென்றால் மாட்டுத் தோல், ஆட்டுத் தோல் வரிசையில் காகிதமும் ஒரு காலத்தில் முடங்கிப் போயிருக்கும்.
காகிதம் கண்டுபிடித்ததன் பலனாக கி.பி. 2-ம் நூற்றாண்டுவரை பின்தங்கியிருந்த சீனநாகரிகம் 7, 8-ம் நூற்றாண்டுகளின் வாக்கில் பலமடங்கு உயர்ந்தது. காகிதம் கண்டுபிடித்த சாய்லூனை காகிதக் கலையின் தேசியக் கடவுளாக சீனர்கள் கொண்டாடுகின்றனர். காகிதம் இல்லாத உலகை இன்று நம்மால் உத்தேசிக்கவும் முடியாது. கண்ணில்படும் ஒவ்வொரு பொருளிலும் அதன் பயன் எங்கோ ஒளிந்திருக்கிறது. பணமும் காகிதம்தான் படிப்பும் காகிதம்தான்.
- கட்டுரையாளர்: இயற்பெயர் சதீஸ்குமார். மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர், பாரதியார் பல்கலைக்கழகம்; தொடர்புக்கு: iskrathewriter@gmail.com
