

மாரியம்மன் கோயில் திருவிழா. தெரு முனைக் கச்சேரியிலிருந்து பாட்டுச் சத்தம்.
பாக்காத நேரத்தில் பாக்குறதும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறதும் கண்ணாடி முன் நின்னு பேசுறதும் என்று பாடிக் கொண்டே வந்தான் சுடர்.
குழலி: என்ன சுடர், பாட்டெல்லாம் பிரமாதமா இருக்கு.
சுடர்: இப்பதான் அந்தக் கச்சேரியில கேட்டேன். நல்லா இருந்துச்சு. அதான் திரும்பத் திரும்ப மனசுல ஓடிக்கிட்டே இருக்கு.
குழலி: இந்தப் பாட்டுக்கு முன்னாடி வர்ற வரிகள கவனிச்சியா சுடர்.
சுடர்: ஆமா குழலி, யாயும் யாயும்னு தொடங்கிச்சு. ஆனா எனக்குப் புரியல. இவ்வளவு எளிமையான பாட்டுல ஏன் இப்படிப் புரியாத மாதிரி வரிகள் வருதுன்னு தோணுச்சு.
குழலி: அது சங்க இலக்கியப் பாட்டு. குறுந்தொகையில இருக்கு.
சுடர்: சங்க இலக்கியப் பாட்டா... புறநானூறு பத்திப் பேசுனோமே. இந்தக் குறுந்தொகையும் அப்படித்தானா...
குழலி: சங்க இலக்கியத்தை எட்டுத்தொகை, பத்துப்பாட்டுன்னு இரண்டு வகையாத் தொகுத்திருக்காங்க. இந்த எட்டுத்தொகை நூல்கள்ல ஒன்னுதான் குறுந்தொகை.
சுடர்: மற்ற ஏழும் என்னெல்லாம்னு நான் சொல்லட்டுமா...
குழலி: உனக்கே தெரியுமா... பிறகென்ன தெரியாத மாதிரியே கேட்டுக்கிட்டிருக்க...
சுடர்: அப்படியெல்லாம் முடிவுக்கு வந்திராத... எனக்கு இப்ப கூகுள் ஆண்டவரே துணை.
குழலி: ஓ... அப்படிச் சொல்றியா. சரி சரி... அவரையே கேட்டுச் சொல்லு.
சுடர்: குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், புறநானூறு, பதிற்றுப்பத்து. இந்த எட்டும் எட்டுத்தொகை நூல்கள்.
குழலி: எட்டுத்தொகை நூல்கள அக நூல்கள், புற நூல்கள்னு இரண்டாப் பிரிக்கலாம்னு சொல்றாரா உங்க கூகுளாரு. மேல சொன்ன எட்டு நூல்கள்ல புறநானூறு, பதிற்றுப்பத்து இரண்டு மட்டும்தான் புறநூல்கள்.
சுடர்: மற்ற ஆறும் அக நூல்களா... காதலைப்பத்தித்தான் நிறையப் பாடியிருக்காங்க போல அந்தக் காலத்துல.
குழலி: ஆமா சுடர். ஆனா அதுல வர்ற பரிபாடல் அகம், புறம்ன்னு இரண்டு பிரிவுக்குள்ளயும் சேருமாம். அதனால 5 அக நூல்கள், 2 புறநூல்கள், ஒன்னு அகமும் புறமும் கலந்த நூல்.
சுடர்: ஓ... சரி... யாயும் யாயும் பாட்டைப் பற்றிச் சொல்லேன்.
குழலி: பாட்டோட பொருள் தெரியும். பாடல் வரிகள உன் கூகுளார் உதவியோட சொல்றேன்.
அந்தப் பாட்டு குறுந்தொகையில 40-வது பாட்டு என்றவாறே பாடலை வாசிக்கத் தொடங்க. யூடியூபில் அந்தப் பாடலை இசைக்க விட்டான் சுடர்.
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. (குறுந்தொகை- 40)
சுடர்: இந்தப் பாட்ட எழுதின புலவர் யாருன்னு சொல்லவே இல்லையே.
குழலி: செம்புலப்பெயல்நீரார்.
சுடர்: பேரு ரொம்ப வித்தியாசமா இருக்குல்ல.
குழலி: சங்கப் பாடல்கள்ல நிறையப் பாடல்கள எழுதினது யாருன்னே தெரியலை. புலவர்கள் பேரு தெரியாததுனால, அந்தப் பாடல்கள்ல வர்ற உவமைகள, அழகான சொற்றொடர்களக் கொண்டு தொகுத்தவங்களும், இந்தப்பாடல்களப் பதிப்பிச்சவங்களும் புலவர்களுக்குப் பேர் வச்சிருக்காங்க. அப்படித்தான், இந்தப் பாட்டுல வர்ற செம்புலப் பெயல் நீர் என்கிற உவமைய வச்சி, புலவர்க்கு செம்புலப் பெயல் நீரார்ன்னு பேரு கொடுத்திருக்காங்க.
சுடருக்குத் தூக்கம் கண்ணை வருடத் தொடங்க, இந்தப் பாட்டப் பத்தி நாளை பேசுவோமா என்றவாறு குழலியிடம் விடைபெற்றான்.
- கட்டுரையாளர்: தமிழ்த் துறை பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com