

அமெரிக்காவின் 6-வது அதிபரும் தலைசிறந்த ராஜதந்திரியுமான ஜான் குவின்சி ஆடம்ஸ் (John Quincy Adams) பிறந்த தினம் இன்று (ஜூலை 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் பிரைன் ட்ரீ நகரில் (1767) பிறந்தார். நாட்டின் 2-வது அதிபர் ஜான் ஆடம்ஸின் மகன். குழந்தையாக இருந்தபோது தனது தேசம் சுதந்திரம் அடைந்ததை கண் கூடாகப் பார்த்தவர். தந்தையின் சட்ட உதவியாளரின் உதவியுடன் ஆரம்பக் கல்வியை வீட்டிலேயே கற்றார்.
# 1779-ல் தொடங்கி இறுதிவரை டைரி எழுதினார். அது வெறும் டைரியாக இல்லாமல், ஆரம்பகால அமெரிக்க குடியரசு வரலாற்றின் 50 தொகுதிகள் கொண்ட தகவல் களஞ்சியமாக விளங்குகிறது.
# இளமைக் காலத்தின் பெரும்பகுதி தந்தையுடன் வெளிநாட்டுப் பயணங்களில் கழிந்தது. பிரெஞ்ச், டச்சு, ஜெர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகள், லத்தீன், கிரேக்க மொழிகளில் நிபுணத்துவம் பெற்றார். அரிஸ்டாட்டில், ஹாரஸ் போன்றோரின் படைப்புகளை மொழிபெயர்த்தார். ஹார்வர்டு கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றார். சட்ட உதவியாளராக, வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
# பிரெஞ்சு புரட்சி காரணமாக அமெரிக்காவை சுற்றிலும் போர் நடவடிக்கைகள் அதிகரித்தன. அவற்றில் இருந்து அமெரிக்காவை விலக்கியே வைத்திருந்த ஜார்ஜ் வாஷிங்டனின் முடிவுகளை ஆதரித்து கட்டுரைகளை வெளியிட்டார். இதையடுத்து, நெதர்லாந்துக்கான அமெரிக்க அரசின் தூதராக ஜார்ஜ் வாஷிங்டன் இவரை நியமித்தார். அப்போது, இவருக்கு வயது 26.
# பொறுப்புமிக்க அரசுப் பதவிகளில் தொடர்ந்து நியமிக்கப்பட்டார். 1797-ல் தந்தை ஜான் ஆடம்ஸ் அதிபரானபோது, இவர் பிரஷ்யாவுக்கான (ஜெர்மனி) தூதராக நியமிக்கப்பட்டார். முதலில் மசாசூசட்ஸ் சட்டசபைக்கும், பிறகுசெனட் சபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரவுன் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
# முதலில் ஃபெடரலிஸ்ட் கட்சியில் இருந்தவர், பிறகு டெமாக்ரட்டிக்-ரிபப்ளிக் கட்சியில் இணைந்தார். அடிமை முறையை எதிர்த்து போராடினார். அமெரிக்க எல்லை தொடர்பாக இங்கிலாந்து, கனடா, ஸ்பெயினுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை சுமுகமாக முடித்தவர்.
# வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக ‘மன்றோ கோட்பாடு’ என்ற வரையறையை உருவாக்கியவர். அமெரிக்க வரலாற்றிலேயே தலைசிறந்த ராஜதந்திரி, சிறந்த வெளியுறவு அமைச்சர் என்று குறிப்பிடப்படுகிறார்.
# அமெரிக்க அதிபராக 1825-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். வழக்கமான சம்பிரதாயத்தை மாற்றி, அரசியல் சட்டப் புத்தகத்தை சாட்சியாகக் கொண்டு பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
# நாட்டின் பொருளாதாரத்தை சீரமைத்தார். கல்வியை மேம்படுத்தினார். நாட்டுக் கடனில் பெரும் பகுதியை அடைத்தார். அமெரிக்காவை உலக சக்தியாக மாற்றும் பணியில் ஈடுபட்டார். அதிபர் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு, பிரதிநிதிகள் சபையில் மசாசூசெட்ஸ் மாநில உறுப்பினராக 17 ஆண்டுகள் பணியாற்றினார்.
# அடிமை முறையை எதிர்க்கும் தலைவராக உருவானார். அடிமைகளுக்கு ஆதரவாக வழக்காடினார். அடிமை வியாபாரத்தை ஆதரித்த நண்பர்களை புறக்கணித்தார். உள்நாட்டுப் போர் மூலமாகத்தான் அடிமை முறை ஒழிக்கப்படும் என்ற இவரது கணிப்பை வரலாறு நிஜமாக்கியது. இறுதி மூச்சுவரை அடிமைத்தனத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த ஜான் குவின்சி ஆடம்ஸ் 81 வயதில் (1848) மறைந்தார்.