மகத்தான மருத்துவர்கள்: 34 - விதியை மதியால் மாற்றிய டாக்டர் ருக்மபாய் ராவத்

மகத்தான மருத்துவர்கள்: 34 - விதியை மதியால் மாற்றிய டாக்டர் ருக்மபாய் ராவத்
Updated on
2 min read

சுதந்திரம் எனது பிறப்புரிமை! என்று முழங்கியவர் பாலகங்காதர திலகர் என்று வரலாற்றுப் புத்தகத்தில் படித்திருப்பீர்கள். அந்த பாலகங்காதர திலகரை எதிர்த்து அவர் காலத்திலேயே சுதந்திரம் எனது பிறப்புரிமையும் கூட! என்று பெண் சுதந்திரத்திற்காகப் போராடிய வீர மங்கை ஒருவர் இருக்கிறார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

அவருடைய அந்தப் போராட்டம் தான், குழந்தைத் திருமணத்தை மாற்றி பெண்களின் திருமண வயதுச் சட்டத்தை முதன்முதலாக இந்தியாவில் உருவாக வைத்தது. அதுமட்டுமல்ல மனம் பொருந்தாத கணவருடன் வாழமுடியாத ஒரு பெண் நீதிமன்றம் ஏறி விவாகரத்துப் பெற முடியும் என்பதை 1885-ம் ஆண்டிலேயே முதன்முதலாக இந்தியாவுக்குக் காட்டியது.

எதிர்பாராதது நடந்தது: கல்வி, ஒரு பெண்ணை இந்த உலகமே எதிர்த்தாலும், அதை எதிர்த்து அவளை போராடத் தயாராக்கும் என்று வாழ்ந்து காட்டிய டாக்டர் ருக்மபாய் ராவத் மருத்துவரைப் பற்றித்தான் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஜனார்த்தன் பாண்டுரங் மற்றும் ஜெயந்திபாய் எனும் மராத்தியத் தம்பதியினருக்கு 1864 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று ஒரு தச்சர் குடும்பத்தில் பிறந்தார் ருக்மபாய். இரண்டு வயதாக இருக்கும்போதே தந்தை இறந்துவிட்டார். இதனால் தனது சொத்துகள் அனைத்தையும் ருக்மபாய் பெயருக்கு மாற்றி எழுதினார் 17 வயதேயான அவரது தாய் ஜெயந்திபாய். பிறகு அவர் சாகாராம் அர்ஜுன் என்ற மருத்துவரை மறுமணம் செய்து கொண்டார்.

பால்ய விவாகமும், விதவை மறுமணமும் இயல்பாக இருந்த அவர்களது 'சுத்தர்' எனும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில், ருக்மபாய்க்கும் அதேபோல 11 வயதில் திருமணம் முடிக்கப்பட்டது. அதிலும் அவர் பூப்படைவதற்கு முன்னரே, 19 வயதான தாதாஜி பிக்காஜி எனும் உறவினருடன் மணமுடிக்கப்பட்டது.

என் வாழ்க்கை என் முடிவு! - அதுவரை வீட்டில் இருந்தபடியே அருகிலிருந்த தேவாலயத்தின் நூலகத்தின் புத்தகங்கள் வாயிலாக இலவசமாகக் கல்வி கற்றுவந்தார் ருக்மபாய். அப்படிப்பட்டவருக்குக் கல்வியறிவற்ற கணவருடன் வாழ்வது முடியாததாக இருந்தது.

திருமணமான சில மாதங்களிலேயே கணவரின் தாயார் இறந்துபோக, அவர்கள் கணவனுடைய தாய்மாமன் வீட்டை நம்பிப் பிழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பெண்களை அடித்துத் துன்புறுத்தும் இயல்புடைய கணவரின் தாய்மாமனையும், தனது சொத்துகளை அடைவதில் குறியாய் இருந்த அவர்கள் பேராசையையும் கண்ட ருக்மபாய் கணவருடன் வாழ மறுத்து திருமணமான ஒரு வருடத்திற்குள்ளாகவே பிறந்த வீடு திரும்பினார்.

ருக்மபாயின் நிலையைப் புரிந்துகொண்டார் மருத்துவரான அவரது இளைய தந்தை டாக்டர் சாகாராம் அர்ஜுன். ஆகையால் ருக்மபாய் பருவமடைந்த பின்பு மணமகன் வீட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி மகளை தாயுடன் இருக்க அனுமதித்தார். ருக்மபாய் மேற்கொண்டு படிக்கும் ஆர்வத்திற்கும் துணைநின்றார்.

ருக்மபாயின் கணவர் தாதாஜி குடும்பத்தினர் பலமுறை சமாதானம் பேச முயன்றனர். இருப்பினும் தனது முடிவில் ருக்மபாய் உறுதியாக இருந்தார். இந்நிலையில் அவரது கணவரின் தாய்மாமன் 1884 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ருக்மபாயின் இளைய தந்தை அவளது சொத்துக்களை அடையத் திட்டமிட்டு தனது மருமகனுடன் வாழத் தடை செய்வதாக வழக்குத் தொடுத்தார்.

ஆனால், ருக்மபாய் இது தனது சொந்த முடிவென்றும், அந்த முடிவில் யாருடைய தலையீடும் இல்லை என்றுகூறி எதிர்வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு அந்தக் காலத்தில் நாடு முழுவதும் பேசு பொருளானது. எண்ணற்ற விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தாலும் அதை எதிர்க்க தான் கற்ற கல்விதான் அந்த உறுதியைத் தந்தது என்று பின்னாளில் கூறியுள்ளார் ருக்மபாய்.

(ருக்மபாய் மகிமை தொடரும்)

- கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in