நானும் கதாசிரியேர! - 9: வண்ணத்துப் பூச்சிகள் எங்கே?

நானும் கதாசிரியேர! - 9: வண்ணத்துப் பூச்சிகள் எங்கே?
Updated on
2 min read

கதையின் ஒரு பாதியை வைத்து மீதி கதையை உருவாக்குவது பற்றி சென்ற பகுதியில் பார்த்தோம். இது ஒரு வகையில் புதிர் போலத்தான். நமக்குத் தெரியாத புதிரைத் தெரிந்து கொள்ளும்போது மகிழ்ச்சி கிடைக்கும் அல்லவா அதுபோலத்தான் மீதிக் கதையை உருவாக்கும்போதும் கிடைக்கும். அப்படி மீதிக் கதையை உருவாக்கும்போது அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றிப் பார்ப்போம்.

பாதிக் கதையை எழுதியவர் என்ன முடிவு எழுதியிருப்பார் என்பதை யோசிக்காமல், நீங்கள் என்ன முடிவுக்கு அந்தக் கதையை அழைத்துச் செல்வீர்கள் என்பதையே சிந்திக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் கற்பனையை முழுமையாகப் பயன்படுத்த முடியும்.

முதல் பாதி முக்கியம்: கதை எங்கு நடக்கிறது, அதில் வரும் கதாபாத்திரங்கள் என்னென்ன, அவற்றில் முதன்மையான கதாபாத்திரம் எது, கதையில் ஏற்படும் சிக்கல் யாரால் ஏற்படுகிறது, அந்தச் சிக்கலால் யாருக்கு பாதிப்பு ஏற்படுகிறது, இவைதாம் நமக்குக் கொடுக்கப்படும் பாதிக் கதையில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

ஏனெனில், இவற்றைச் சரியாகப் புரிந்துகொண்டால், மீதிக் கதையை எளிதாகக் கொண்டு சென்றுவிடலாம். அதாவது கதையில் உள்ள சிக்கலை எந்தக் கதாபாத்திரத்தை வைத்து சரிசெய்யலாம் என்ற தெளிவு வந்துவிடும் அல்லது புதிய கதாபாத்திரத்தைக் கொண்டு வரலாமா என்றும் யோசிக்க முடியும்.

பாதிக் கதை காட்டில் நடக்கிறது என்றால், மீதிக் கதையை திடீரென்று நகரத்திற்குக் கொண்டு செல்ல முடியாது. அதனால், அக்கதை நடக்கும் இடத்தை ஒட்டியே மீதிக்கதையை யோசிப்பது நல்லது.

பாதிக் கதையில் மாயத்தந்திரங்கள் இருப்பதுபோல எழுதப்பட்டிருந்தால், அதை வைத்தே மீதிக்கதையை நாம் கொண்டு செல்லலாம். ஒருவேளை, அப்படியான மாயத்தந்திரங்கள் இல்லையென்றாலும் நாமே உருவாக்கிக் கொள்ளலாம்.

கனவுன்னு சமாளிக்கலாம்: ஒருவேளை, அறிவியல் தகவல் ஒன்றை மையமாக வைத்து பாதிக் கதை எழுதியிருந்தால், அதில் நாம் மாயத்தந்திரங்களைச் சேர்க்கக் கூடாது. அந்த அறிவியல் தகவல் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, அதில் நம் கற்பனையைக் கலந்து மீதிக் கதையை உருவாக்கலாம்.

நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பாதிக் கதையின் அளவைப் பார்த்து, அந்த அளவுக்கு ஏற்ற வகையில் மீதிக்கதையை எழுதுவது நல்லது. ஒரு பக்க அளவில் உள்ள கதைக்கு, பத்து பக்கங்களில் மீதிக்கதையை எழுதினால், வாசிக்கவே அலுப்பு தட்டிவிடும்.

எப்படி யோசித்தாலும் கதையின் முடிவை உருவாக்க முடியவில்லையா? கவலையே வேண்டாம். கதை நடப்பது கனவு என்று சொல்லியும் முடிக்கலாம். நீங்கள் கதாசிரியராக ஆவதற்கு இது ஒரு முக்கியமான பயிற்சி என்பதையும் மறக்க வேண்டாம். இப்போது நான் கொடுக்கும் பாதிக் கதையை நீங்கள் தொடர்ந்து எழுதி அனுப்புங்கள்.

வீட்டுக் கதை: ஆறாம் வகுப்பு படிக்கிறாள் சாதனா. அவளின் தமிழ் பாடப் புத்தகத்தில் உள்ள அந்த இரண்டு வண்ணத்துப் பூச்சிகளும் அவளோடு பேசும். அவள் பள்ளிக்கு வரும்போதும், வீட்டுக்குச் செல்லும்போதும், வண்ணத்துப் பூச்சிகள் புத்தகத்தில் இருந்து வெளியே வந்து அவளோடு பேசிக் கொண்டே செல்லும். ஒருநாள், பள்ளிக்குப் புறப்படுகையில், புத்தகத்தில் இருந்த அந்த வண்ணத்துப் பூச்சிகளைக் காணவில்லை.

அவை ஏதேனும் ஆபத்தில் சிக்கிக் கொண்டனவா என்று கவலை ஒருபக்கம். தனது புத்தகத்தில் மட்டும் வண்ணத்துப் பூச்சிகள் இல்லையென்றால் ஆசிரியர் திட்டுவாரோ என்ற பயம் மறுபக்கம். பையில் புத்தகங்களை எடுத்து போட்டுக்கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டாள். அவள் பள்ளியை நெருங்குகையில்...

- கட்டுரையாளர் : எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in