

கொசுக்களை அதன் சூழல்மண்டலத்தோடு இணைந்து புரிந்துகொள்வது முக்கியம் என்று கடந்த வாரம் பேசினோம். உண்மையில் கொசுக்களால் பயன்கள் இருக்கின்றன. பறவைகள், தவளைகள் உள்ளிட்டவைகளுக்கு கொசுக்கள் உணவாகின்றன. கொசுக்கள் இறந்து மக்கும்போது அவை உண்ட நுண்ணுயிர்கள் செடிகளுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
ஆனால், இந்த கொசுக்கள் கட்டுக்கடங்காமல் பெருகும்போதுதான் பிரச்சினை வெடிக்கிறது. இதற்கு என்னகாரணம்? சூழல்மண்டலச் சீர்குலைவுதான்.
சிறுவயதில் தட்டான் பூச்சி பிடித்து விளையாடி இருக்கிறீர்களா? அந்த பூச்சிகள்தான் கொசுக்களின் பரம எதிரிகள். தட்டான்களும் கொசுக்களைப்போல நீர்நிலைகளில் முட்டையிடுபவை. அதேபோல தவளைகளும் நீர் நிலைகளில்தான் முட்டையிடும்.
தடுக்க ஆளில்லை! - தவளையின் தலபிரட்டைக்கும், சிறியதட்டான்களுக்கும் கொசுவின் முட்டையில் இருந்து உருவாகி வரும் கொசு புழுக்களே முக்கிய உணவாகும். இதனால் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துவதில் தவளைக்கும் தட்டான்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
ஆனால், இன்று நாம் விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வயலில் தேங்கி இருக்கும் நீரில் கலப்பதால், தட்டான்களும் தவளைகளும் அழிந்து வருகின்றன. தன்னை எதிர்க்க ஆள் இல்லாததால் கொசுக்களின் உற்பத்தி கட்டுக்கடங்காமல் உயர்ந்து வினையாகிவிட்டது.
கொசுக்களை கட்டுப்படுத்த திட்டங்களை வகுக்கும் அரசாங்கம், குறிப்பிட்டசூழல் மண்டலத்தில் வாழும் கொசுக்களின் எண்ணிக்கை, பிறப்பு,இறப்பு, இடப்பெயர்வு, அவற்றுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இடையேயான உறவு ஆகியவற்றை அறிந்து கொண்டுதான் புதிய திட்டங்களை வகுக்கிறது. இருப்பினும் சீர்குலைவைச் சரி செய்யும் வரை பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். சரி, நோய் தடுப்பில் மட்டும்தான் சூழல்மண்டலத்தின் பங்கு இருக்கிறதா? அதுமட்டுமில்லை.
கிராமங்களை வறட்சியில் இருந்து காப்பாற்ற, அழிந்து வரும் காடுகளைமீட்கவும் கூட நாம் சூழல்மண்டலத்தை புரிந்துகொள்ள வேண்டும். இதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதற்கு அமெரிக்காவில் 1995-ம்ஆண்டு நடைபெற்ற ஒருசம்பவம் உலகாளவிய எடுத்துக்காட்டாக இருக்கிறது. அதுகுறித்து நாம் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
(மேலும் மணம் வீசும்)
- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com