

கிரிக்கெட் விளையாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் பல்வங்கர் பலூ பற்றி தெரியுமா குழந்தைகளே!! கிரிக்கெட் விளையாட்டு நம் அனைவருக்குமே பிடித்த விளையாட்டு.கி ரிக்கெட்டை ரசிக்கும் நமக்கு அந்த விளையாட்டு எப்போது, எங்கே தோன்றியது என்ற வரலாறு தெரியுமா? கிரிக்கெட் எந்த நாட்டில் தோன்றியது? இந்தியாவில் விளையாடிய கிட்டிப்புள் கிரிக்கெட் ஆனது என்கின்றனர் ஒருசாரார்.
இங்கிலாந்து நாட்டில் ப்ளாண்டர்ஸ் என்ற பகுதியில் (தற்போது பெல்ஜியத் தில் உள்ளது) விவசாயிகள் பொழுது போக்க உருண்டை போல உள்ள பொருட்களை வைத்துக் கொண்டு தூக்கிப்போட்டு, கட்டையால் அதை அடித்து விளையாடியதாக மற்றொரு சாரார் சொல்கிறார்கள்.
ஆண்கள் விளையாடியதைப் போலவே, பெண்களும் மாட்டிடம் பால்கறப்பதற்காக , மாட்டுக்கு அருகில் அமர முக்காலி வைத்திருப்பர். ஓய்வுநேரத்தில் அந்த முக்காலியினால் தடுத்தும், அடித்தும் விளையாடிய விளையாட்டே பின்னாளில் கிரிக்கெட் ஆனது என்கின்றனர்.
கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்: இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தபோது, அந்நாட்டு ராணுவ வீரர்கள் பொழுது போக்க கிரிக்கெட் விளையாட்டை விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்த இந்தியர்கள், அதன்விதிமுறைகளை அறிந்து கொண்டு அவர்களும் விளையாடத் தொடங்கினர்.
இந்தியர்கள் கிரிக்கெட் மேல் உள்ள ஆர்வத்தால் முறையாக, ஆங்கிலேய அரசிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று, கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். பம்பாய் மாகாணம் தார்வாட் (தற்போது கர்நாடகாவில் உள்ளது) என்ற இடத்தில் 1876-ல் பல்வங்கர் பலூ என்ற ஆண் குழந்தை ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்தது.
குடும்பம் தோல் தொழிலை செய்தாக வேண்டிய கட்டாயம். பிறரால் செய்யமுடியாத வேலைகளை இவ்வாறான ஒடுக்கப்பட்ட இனத்திற்கு தந்தனர் ஆங்கிலேயர்கள். பலூவும் அவர் குடும்பமும் பொதுமக்களால் மரியாதையின்றி நடத்தப்பட்டனர். பலூவின் தந்தைக்கு ஆங்கிலேய ராணுவத்தில் பணி கிடைத்ததால், மிகுந்த மகிழ்ச்சியாக பூனா சென்றனர்.
தொடர் பயிற்சி: பலூவுக்கு குடும்ப வறுமை காரணமாக படிப்பைத் தொடர இயலவில்லை. கிரிக்கெட் மைதானத்துக்கு பந்து பொறுக்கித் தரும் பணிக்குச் செல்கிறார். நாளடைவில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் விளையாடுவதைப் பார்த்து, மட்டையெடுத்து விளையாட ஆசைப்படுகிறார்.
ஆங்கிலேய கிரிக்கெட் அணியின் தலைவரான ட்ராஸ் ஜே.ஜி.கிரேக் தன்னை அவுட் செய்தால், ஒவ்வொரு அவுட்டுக்கும் 50 பைசா தருவதாகக் கூறுகிறார். பலூ வீசிய பந்துக்கு கிரேக்கால் ஈடுதர இயலவில்லை. ஒவ்வொரு முறையும் அவுட்டாகிறார். பலூவின் பந்து வீசும் திறனைப் பார்த்து சுழற்பந்து வீச்சாளர் என்று அழைக்கிறார்.
ஆனாலும் கிரிக்கெட் போட்டி விளையாட்டுகளில் பலூ ஒதுக்கப்படுகிறார். தொடர்ந்து அவர் பயிற்சியினால் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரராகத் திகழ்கிறார். ஆங்கிலேய வீரர்களுடன் புனேகிரிக்கெட் மைதானத்தில் விளையாடத் திறமையானவர்களை சேர்க்கும்போது பலூவின் சுழற்பந்து வீச்சு உதவுமென பலூவையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.
மிகுந்த வலியுடன் ஆட்டத்தை விட்டு வெளியேறும் பலூவுக்கு, யாரோ ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த நபர், உன் விளையாட்டுத் திறனைப் பார்த்து அவர்களாகவே மரியாதை தரணும் என்று சாந்தப்படுத்துகிறார். பலூ தொடர்ந்து அடையும் அவமானங்களை,கிரிக்கெட் விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தால் பொறுத்துக் கொள்கிறார்.
புனேவிலிருந்து பம்பாய் இடம்பெயரும் பலூ, பம்பாய் கிரிக்கெட் அணியில் சேர்ந்து தொடர்ந்து விளையாடுகிறார். இந்தியாவின் வடக்குப்பகுதியில் உள்ள கத்தியவார் பகுதியின் மன்னர் விபாஜி, ரஞ்சித்சிங் என்ற குழந்தையை தத்தெடுத்துக் கொள்கிறார். இங்கிலாந்து சென்று படிக்கும் ரஞ்சித்சிங், அந்நாட்டில் கிரிக்கெட் விளையாடக் கற்றுக் கொண்டு விளையாடுகிறார்.
இந்தியா வரும்போது ரஞ்சித்சிங்கை பம்பாய் கிரிக்கெட் அணி போட்டியில் விளையாட அழைக்கிறார்கள். அவர் ஆங்கிலேயர் அணியில் விளையாட விரும்புகிறார். ரஞ்சித்சிங்குடன் விளையாடும் மூன்று வாய்ப்புகளிலும் அவரை முதல் பவுலிங்கிலேயே தோற்கடிக்கிறார் பலூ.
இந்தியாவில் கிரிக்கெட் போட்டியில் சிறந்த அணிக்கு ரஞ்சித்சிங் நினைவாக ரஞ்சி கோப்பை வழங்கப்பட்டு வருகிறது. ஏன் சுழற்பந்து வீச்சில் திறமையான, தன் வாழ்நாளில் 44 வயதுவரை விளையாடுவதில் ஆர்வம் குறையாமல் இருந்த பலூ கிரிக்கெட் உலகில் நினைவுகூரப்படவில்லை? அவர் ஏன் புறக்கணிக்கப்பட்டார்? என்பதுடன், கிரிக்கெட் வரலாற்றையும் அறிந்துகொள்ள இ.பா. சிந்தன் எழுதிய 'பல்வங்கர் பலூ' நூலை வாசியுங்கள்.