

நிலப்பகுதியைவிட மலைப்பகுதி உயர மாக இருக்கிறது. அப்படி என்றால் அங்குவெப்பம் அதிகமாகத்தானே இருக்க வேண் டும்? ஏன் குளிர்ச்சியாக இருக்கிறது, டிங்கு?
- பி. அஸ்வத், 9ஆம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்.
நல்ல கேள்வி. காற்றுக்கு எடை இல்லை என்று பலரும் நினைக்கிறார்கள். காற்றுக்கு எடையும் உண்டு, அழுத்தமும் உண்டு. அந்த அழுத்தத்தைதான் வளிமண்டல அழுத்தம் அல்லது காற்று அழுத்தம் என்கிறோம். நிலத்துக்கு அருகில் காற்றின் அழுத்தம் அதிகமாக இருக்கும். உயரே செல்லச் செல்ல அழுத்தம் குறைந்துகொண்டே செல்லும். பத்து நெல் மூட்டைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்தால், கீழே உள்ள மூட்டை மீது அழுத்தம் அதிகமாக இருக்கும்.
மேலே உள்ள மூட்டைகளின் அழுத்தம் படிப்படியாகக் குறையும் அல்லவா? அதே மாதிரிதான் வளிமண்டலத்தின் அழுத்தம் நிலத்துக்கு அருகே அதிகமாகவும் உயரே செல்லச் செல்ல அழுத்தம் குறைந்துகொண்டும் செல்கிறது. காற்றின் அழுத்தம் (காற்று மூலக்கூறுகளின் அளவு) குறையக் குறைய வெப்பநிலையும் குறைந்துகொண்டே செல்கிறது. 1000 மீட்டர் உயரத்துக்குச் சென்றால் 6.5 டிகிரி (100 மீ.க்கு 1.1 டிகிரி செல்சியஸ்) செல்சியஸ் வெப்பம் குறையும். அதனால்தான் மலைப்பகுதி குளிர்ச்சியாக இருக்கிறது.