

குழந்தைகளுக்கு பிடித்த சத்தத்தை எழுப்ப அனுமதிப்போம். என்ன வகுப்பறையிலா? ஆம். இது பாரம் பரிய வகுப்பறைக்கு எதிரான செயல் ஆகும். வகுப்பறை கூச்சல், குழப்பம் மிகுந்ததாக மாறிவிடுமே?
குழந்தைகள் சத்தம் எழுப்புவது என்பது கூச்சல் போடுவது அல்ல. ஒரு தாளத்துடன், இசையுடன், ஒத்த ஓசையை எழுப்பச் செய்வது. முதலில் நீங்கள் சத்தம் போட்டுப் பாருங்கள். ’க்கூ… க்கூ…’ ‘டம் டம், டம டம்’
குழந்தைகள் முகத்தில் எத்தனைமகிழ்ச்சி. குழந்தைகள் மிகவும் விரும்பும் செயல் ஆகும். வகுப்பறையில் குழந்தைகள் விரும்பும்படி சத்தம் போட அனுமதியுங்கள்.
கற்பித்தலுடன் எப்படி இணைப்பது? -
வயிறு குலுங்கச் சிரிக்கச் சொல்லலாம். வேடிக்கையான வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்ல வைக்கலாம். வயிறு குலுங்க சிரித்தல் என்றால் எப்படி?
முதல் வகுப்பு படிக்கும் குழந்தைக்கான செயல். ’அ’ ’அ’ ’அ’ என சிரிக்கச் செய்யலாம். அதனையடுத்து, ’ஆ’ ’ஆ’ ’ஆ’ எனச் சிரிக்கச் செய்யலாம். இப்படி ஒவ்வொரு எழுத்துக்களையும் உச்சரித்துச் சிரிக்கச் செய்யலாம். வகுப்பறை ஆரோக்கியமான வகுப்பறையாக மாறிவிடும்.
குழந்தைகள் இயற்கையாகவே ஆர்வமுள்ளவர்கள் மற்றும் அவர்களின் அனைத்து புலன்களையும் பயன்படுத்துவதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். ஒலிகள் அவர்களின்உணர்ச்சி அனுபவத்தின் முக்கியமானஅம்சமாகும், ஏனெனில், அவை அவர்களின் கவனத்தை ஈர்க்கின்றன, அவர்களைக் கற்பனையில் ஈடுபடுத்துகின்றன. ஆகவே, வகுப்பறையில் சத்தம் எழுப்ப அனுமதிப்போம்.
சத்தம் எழுப்புவதால் என்ன நன்மை? -
ஒலி எழுப்பச் செய்யும் செயல் பாடுகள் குழந்தைகள் ஒலியைக்கேட்கவும் மற்றும் சொற்களைப் பின்பற்றவும், உரையாடல்களில் ஈடுபடவும் வாய்ப்புகளை வழங்குகிறது. அதன்மூலம் மொழி மற்றும் தகவல் தொடர்பு திறன்களை வளர்க்க உதவும். குழந்தைகள் வெவ்வேறு ஒலிகளை வெளிப்படுத்தும் போது, அவர்கள் அவர்களை அடையாளம் காணவும், அவர்களின் சொற்களஞ்சியத்தை வளர்க்க உதவும்.
ஒலிகள் குழந்தைகளின் கற்பனையைத் தூண்டி, அவர்களின் படைப்பாற்றலை ஆராய அவர்களை ஊக்குவிக்கும். எடுத்துக்காட்டாக, இசைக்கருவிகள் தங்கள் சொந்த தாளத்தையும் இசையையும் உருவாக்க அவர்களை ஊக்குவிக்கும்.
குழந்தைகள் இயற்கையாகவே ஒலிகள் மற்றும் வெவ்வேறு உணர்வுஅனுபவங்களுக்கு ஈர்க்கப்படுகிறார்கள். ஒலிகள் அவர்களின் கேட்கும்உணர்வை வளர்க்கவும், அவர்களைச்சுற்றியுள்ள உலகத்தை நன்கு புரிந்துகொள்ளவும் உதவும். அவர்களுக்கு ஆறுதல் மற்றும் பாதுகாப்பு உணர்வைவழங்க முடியும். ஒலிகள் குழந்தைகளுக்கு அமைதியான மற்றும் இனிமையான விளைவை ஏற்படுத்தும். ஆசிரியருடன் இணக்கமாக உறவை ஏற்படுத்தும். தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு வகுப்பறையை பிடித்தமான இடமாக உணரச் செய்யும்.
உயர் வகுப்புகளில் சாத்தியமா? - ஆம். ஆங்கிலத்தில் rhyming words பயன்படுத்தலாம். கணக்குப் பாடத்திற்கு சூத்திரங்களைக் கூறச் செய்யலாம். இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடர், வினைத் தொகைகளைச் சத்தமாகக் கூறச் செய்யலாம். அறிவியலில் நோய்கள், அதனைப் பரப்பும் நுண்கிருமிகளைச் சத்தமாகக் கூறச் செய்யலாம்.
மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தும் ஒவ்வொரு முறையும் ஆசிரியர்கள் பாராட்டுகின்றனர். அப்படிப் பாராட்டும்போது, விதவிதமாக சத்தம் எழுப்பச் செய்யலாம். ஒவ்வொரு இருக்கைக்கும் (பெஞ்சுக்கும்) ஒரு சத்தம்.
ஒவ்வொரு பாராட்டுக்கும் ஒருசத்தம். ஒவ்வொரு செயல் முடிவுக்கும் ஒரு சத்தம். இப்படி பல சத்தங்களை உருவாக்குங்கள். குழந்தைகள் வகுப்பறையை மட்டுமல்ல, உங்க ளையும் நேசிப்பார்கள்.
எழுத்தாளர், தலைமையாசிரியர், டாக்டர் டி. திருஞானம்தொடக்கப் பள்ளி, மதுரை.